சனி, 30 டிசம்பர், 2023

சருகுகளின் சபலங்கள். பகுதி - 47 வக்கிர மனங்களை தூர நிறுத்துங்கள்

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 47

வக்கிர மனங்களை தூர நிறுத்துங்கள்

தோழியுடனான சம்பாஷணை:
"ரொம்ப நாள் கழிச்சு என்னை ஏமாற்றிவிட்டு விட்டுப் போன காதலனை பார்த்தேன். கிட்டத்தட்ட அவன் பிரிவின் ஏமாற்றத்தை தாங்க இயலாமல் ஏழு வருடங்கள் நான் திருமணமும் செய்துக் கொள்ளாமல் எந்த வித காதலிலும் ஈடுபடாமல் என்னுடைய 25 வயதில் இருந்து முப்பது வயதிற்கும் மேலாக துன்பக் கடலில் வீணாக்கி இருக்கிறேன். அதன் பிற்பாடு மணம் செய்துக் கொண்டு ஓரளவு சந்தோஷமாகவே வாழ்த்துக் கொண்டிருக்கிறேன். பரிபூரணமான ஒட்டுதல் ஏற்படவில்லை திருமண வாழ்வில் ஆயினும் துன்பத்தில் இல்லை. என் கடமையை சரிவர செய்துக் கொண்டு இருக்கிறேன். அதில் அவர் விருப்பப்பட்டு நெருங்கினால் மட்டுமே இணங்கிப் போவது என்ற தாமபத்தியமும் அடக்கம். எனக்கு என்னை விட்டு சென்றவன் மீது காதல் எல்லாம் இல்லை. ஆனாலும் அவனுடனான அந்த நெருக்கத்தை மனம் எண்ணிக் கண்ணீர் வடிக்கும். அவர் என்னை நெருங்கும் போது. அந்த சமயங்களில் மனதை கல்லாய் வைத்துக் கொள்கிறேன். 

பிரச்சினை அதுவல்ல, சந்தர்ப்ப சூழல் காரணமாக நான் வேலை செய்யும் இடத்திலேயே அவனுக்கும் மாற்றலாகி வந்திருக்கிறான். அவனை பார்க்கையில் எந்த வித உணர்வும் ஏற்படவில்லை. 

கோபமோ தாபமோ எதுவுமே அவன் மீது இல்லை. அவனுடன் வெகு சகஜமாக மற்றவர்களுடன் பேசுவதைப் போல வெகு சகஜமாகவே பேசுகிறேன். ஆனால் தாமரை இலை தண்ணீர் போல. 

என்னை கழட்டிவிட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்து கரம் பிடித்தவன் வாழ்வு எப்படி இருக்கும் என்று கூட நான் அறிந்துக் கொள்ள விரும்பவில்லை. 

சக பெண்கள் அவனை பற்றி உணவருந்தும் நேரத்தில் பேசிக் கொள்வதை கேட்க நேரிட்டது. அவனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று. இங்கும் அய்யோ பாவம் என்ற எண்ணமும் இல்லை, நல்லா வேணும்னும் நினைக்கவில்லை. 

முன்னே உயிரும் உடலுமாய் கலந்தவன் தான். ஆனால் அவன் துன்பம் என்னை குதூகலிக்கவும் செய்யவில்லை. பரிதாபத்திற்குள்ளும் தள்ளவில்லை" என்றாள்.

எனக்கு அவன் யாரோ மாதிரி மட்டுமே தெரிகின்றான். ஆனால் அவன் என்னிடம் எங்களுடைய பழைய விஷயங்களை அன்பை என்னிடம் இருந்து எதிர்பார்ப்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருக்கிறேன். சுற்றி என்னுடன் வேலை செய்பவர்களிடமும் எங்கள் காதல் கதைகளை நான் அறியாமல் சொல்லி வைத்திருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் எங்களைப் பற்றி கிசுகிசுக்களை உண்டாக்க முயற்சி செய்கின்றான்.

என்னுடன் நண்பர்களாக பழகுபவர்களை கண்டிப்பதும், விலக்கி வைப்பதும் என் வேலை சம்பந்தமான சம்பாஷணையை கூட பாதிக்கிறது. என்னிடம் நெருங்கவே முடியாதவண்ணம் நான் திடமாய் இருந்தாலும் என்னை சுற்றி அவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம் அவனை கண்டாலே வெறுக்க வைக்கின்றது. ச்சீ இவனைப் போய் ஒரு காலத்தில் காதலித்தோமே என்று அவமானமாய் இருக்கின்றது. தற்கொலை எண்ணம் அதிகம் வருகிறது. இதில் இருந்து மீள எதாவது வழி இருக்கிறதா லச்சு. 

எனக்கு நிம்மதியா என் கணவரோடும், குழந்தையோடும் வாழ்ந்தால் போதும் என்றாள்.

இதே பிரச்சினை வேறு யாருக்காவது நடந்திருந்தால் இவள் அவர்களுக்கு தெளிவாகவே அறிவுரை கூறி இருப்பாள். ஏன்னா அவள் அத்தனை திடமான பெண்.

நான் அவளுக்கு சொல்லிய தீர்வு...

உனக்கு நிறைய தீர்வு இருக்கு.

1. வேலையை வேறு கிளைக்கு மாற்ற முடிந்தால் மாற்றிக்கொள். அல்லது வேலையை விட்டுவிடு. வேறு வேலை தேடிக் கொள். 
(அவனை மேலதிகாரியிடம் சொல்லி வேலையை விட்டுவிட செய்யலாமே என கேட்கலாம். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றது. ஏற்கனவே திருமண வாழ்வில் தோல்வி அடைந்தவன் இவள் மீண்டும் அழகும் வனப்புமாக கிட்டுவதை பார்த்ததும் மீண்டும் பசிக்கொண்ட கொடூர மிருகமாக சுற்றி வருகிறான். அவனை பொருத்தவரை இவள் மீது காதல் எல்லாம். இல்லை. இவள் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லை. அது தான் அவனது அடிமன குரோதம். வேலையை விட்டு அனுப்ப செய்தாலும் இவள் என்னமோ அவனை ஏமாற்றிவிட்டு இன்னொருவனை திருமணம் செய்துக் கொண்டதாய் சக பெண்களிடம் நாடகம் போட்ட அவனுக்கு இன்னமும் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யத் தோன்றலாம். தோழி இயல்பிலேயே மென்மையாக நடந்துக் கொள்பவள் மனிதர்களிடம். தவிர அவள் பேரை அங்கே அவன் கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டான். வேறு சூழல் மட்டுமே அவளுக்கு இதம் தரும். ஆக வேறு இடம் தான் அவளுக்கு நல்லதும் கூட)

2. சரியோ தவறோ தகுந்த நேரம் பார்த்து அவனைப் பற்றி கணவரிடம் கூறிவிடுவது. அதாவது ஏழு வருடம் அவனுக்காக ஏங்கிய கதை எல்லாம் தவிர்த்து அவனை காதலித்ததையும் அவன் இவளை விட்டுவிட்டு இன்னொருத்தியை காதலித்து திருமணம் செய்ததையும், அவள் அவன் டார்ச்சர் தாங்க முடியாமல் விவாகரத்து செய்ததையும் சொல் என்றேன். உனக்கு அவன் மீது ஒரு காலத்தில் இருந்த அபரிமிதமான காதலை எல்லாம் விளக்கிக் கொண்டிருக்காதே. அது தேவையும் அற்றது. நீ செய்ய வேண்டியது அவனிடம் இருந்து நல்லவேளை தப்பி பிழைத்து எனக்கு உங்களை போல நல்லவன் கணவனாக கிடைத்ததை எண்ணி பெருமிதப்படுவதாக சொல். பாவம் அந்த பெண் என்ற எண்ணம் வருமளவு சொல். ஒருவேளை அவன் உன் கணவனிடம் வந்து எதாவது உளற நினைத்தாலும் அவர் கைகளால் அவனை அடித்து துரத்தும்படி நிகழ்வுகள் நிகழட்டும் என்றேன். 
பல இடங்களில் கணவனிடம் சொல்வதினால் பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயம் ஏற்படலாம். சொல்லாததால் ஏற்படும் பிரச்சினைகளை விட சொல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு தான். (ஒருவேளை கணவர் புரிந்துக் கொள்ளாமல் பிரிந்துவிடுவாரோ என்ற பயம் இருந்தாலும் அந்த பிரிவுக்கு தயாரிக்கக் கொள்வது ஒன்றே சாஸ்வதம். பிரச்சினைகளை கண்டு பயப்படுவதை விட அதை எதிர்கொள்வது நல்லது).
கொஞ்ச நாள் கழித்து இவ்வளோ தானே இதுக்கு போய் ஏன் இவ்ளோ வருத்தம், ஆதங்கம் பட்டோம். இவ்வளோ எமோஷனல் ஆகி இருக்க வேணாமேனு தோணும். 

பயமற்று இருப்பது ஒன்றே வெற்றிக்கான ஒரே வழி. வாழ்த்துகள் அவ்வப்போது மனம் தடுமாறுகையில் என்னிடம் பேசு என்றேன். தற்போது மன அழுத்தத்திற்கான ட்ரீட்மெண்டிலும் இருக்கிறாள். 

வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ள தயாராக வேண்டும். 

அன்புள்ள ஆண்களுக்கு ஒரு காலத்தில் பெண் உங்களை காதலித்திருந்தால் எல்லா காலகட்டத்திலும் உங்களை நினைத்து அவள் உருகி வாழ வேண்டிய அவசியமில்லை. அவளுக்கான அன்பு கிட்டினால் மாறிக் கொள்ளட்டும்.

அவமானங்களுக்கு பின்பு எந்த சுயமரியாதை உள்ள பெண்ணும் பழைய நினைவலைகளில் சந்தோஷமாக உலா வர முடியாது. அதன் பின் விலகிச் செல்வது ஒன்றே மானமுள்ள மனிதன் செய்ய வேண்டிய செயல். 

இங்கு பல ஆண்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். அவர்கள் எத்தனை பெண்கள் கூட வேண்டுமானால் சரசமாடலாம். தான் விரும்பிய பெண் இன்னொரு வாழ்விற்கு போகவே கூடாது. போனா அவள் பெயரை கெடுத்து குட்டிச் சுவராக்க என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள். தனக்கு கிட்டாதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணமும் தான் கால் பதித்த தடமென பெண்ணை தனித்து நிறுத்த நினைப்பதும் உங்கள் ஆழமன கேவலமான வக்கிரம். அந்த வக்கிரத்தை அழித்து விடுங்கள். அவளை நிம்மதியாக வாழ விடுங்கள். விலகிய பின்பு அவதூறு சுமத்தி, அவமானத்திற்குள் தள்ளி இன்புறாதீர்கள்.

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 46 மனசிதைவு நோய்

சருகுகளின் சபலங்கள் 

பகுதி - 46

மனசிதைவு நோய்
Schizophrenia எனும் மனச்சிதைவு நோயும் மன அழுத்தமும் ஒன்றல்ல.

நமக்கு உடம்பு சரியில்லைனா எந்தந்த பகுதியில் பிரச்சினைகள்னு தெரிஞ்சு அதற்கு ஏற்ற ட்ரீட்மெண்ட் எடுத்துக்க முடியும். மனம் என்பது அப்படிப்பட்டது அல்ல. 

மூளையில் டோபமைன் அதீதமாக சுரப்பதினால் ஏற்படும் நோய் இது. 

இந்தியாவில் நூறில் ஒருவருக்கு இந்த மனச்சிதைவு நோய் இருப்பதாக கணக்கெடுப்பு சொல்கின்றது.

கஞ்சா மற்றும் பிற போதை பொருள்கள் உபயோகிப்பவர்களுக்கு இந்நோய் அதிகமாக வரும்.
ஆண், பெண் இருபாலரையும் இது சமமாகவே தாக்கும்.
இது தொற்று நோய் அல்ல.

மரபு வழியாக இந்நோய் வரலாம். இந்த நோய் புற சூழலில் ஏற்படும் கடும் மன அழுத்தத்தினாலோ அன்றி  genetic மூலமாகவோ அதாவது மூதாதையர்களுக்கோ முன் தலைமுறையினர் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலோ இவர்களுக்கும் அதன் தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்கின்றார்கள் விஞ்ஞானிகள். 

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொல் வேறு செயல் வேறு எண்ணம் வேறு என்று இருப்பார்கள். பாதிப்பின் அளவீட்டை பொருத்து இவர்களது எண்ணமும் செயல்பாடும் மாறுபடும். 

உதாரணத்திற்கு இவர்களால் இவர்களது அன்றாட செயல்பாடுகளையே சரிவர செயல்படுத்த முடியாமல் இருப்பர். 

இன்னும் உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஆள வந்தான் படத்தில் மொட்டை கமலுக்கு ஏற்படும் நோயின் பெயர் தான் schizophrenia. அது உச்சகட்ட மனச்சிதைவு நோயின் அறிகுறி. அந்த படம் அந்த நோயின் தீவிரத்தை பற்றி தான் சொல்லியிருக்கும். படம் பெரும்பான்மையினவருக்கு புரிந்திருக்காது. 

சைக்கோவும் மனச்சிதைவு நோயிற்கு ஆளானவரும் ஒன்றல்ல. பெரும்பாலும் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர் மற்றவர்களை விட தன்னைத் தான் அழித்துக் கொள்வது தான் அதிகம். அதீத பாதிப்பு ஏற்பட்டவர்களால் மட்டுமே பிறருக்கு பாதிப்புகள் ஏற்படும்.

மனச்சிதைவு நோய் வந்தவர்களுக்கான அறிகுறிகள்: 
அவர்கள் நடவடிக்கையில் திடீரென்று மாற்றம் ஏற்படும்.
தனக்கு தானே அதிகம் பேசும் பழக்கம் அதிகரிக்கும், குழப்பமான சிந்தனை உடையவர்களாக இருப்பர், அடிக்கடி கை கழுவது அல்லது சுத்தம் பேணாமல் இருப்பது, தினமும் செய்யும் செயல்களில் கூட சுணக்கம் ஏற்படும், படிக்கும் மாணவர்களோ, வேலைக்கு செல்பவர்களோ அதை தொடர முடியாத மனநிலை ஏற்படுவது, தேவையற்ற சந்தேகங்கள் எழுவது, வீட்டை விட்டு எங்காவது சென்றுவிடும் மனநிலை அடிக்கடி ஏற்படுவது, தன்னை யாரோ பழி வாங்குவது போல், பின் தொடர்வது போல, வாழ முடியாமல் செய்வது போல் பிரஞைகள் ஏற்படும். இரவில் நெடுநேரம் தூக்கம் இன்றி அவதிப்படுவதும், பகலில் உறங்குவதும் ஒழுங்கற்ற தன்மையும் இவர்கள் வாழ்வில் காணப்படும். அவர்களை பொருத்தவரை அது நிஜமும் கூட.  

மனச்சிதைவு நோய் என்பது பைத்தியம் அல்ல. Bipolar or multipersonality disorderம் அல்ல. 

இந்த நோய் வந்தவர்களை ஒரு நல்ல சைக்கியார்டிஸ்ட்டிடம் சென்று மருந்து உட்கொள்ள செய்தால் மூளையில் சுரக்கும் ரசாயனம் குறைந்து அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவர். 

மருந்து உட்கொள்வதால் அதீத தூக்கமும், அதிக பசியும் உண்டாகும். அதன் பொருட்டு உடல் எடை கூடுவதும் ஏற்படலாம். 

தகுந்த மனப்பயிற்சி, யோகா, தியானம், ஆரோக்கியமான நல் உணவுகள் அவர்களை மற்ற மனிதர்களை போல இயல்பான வாழ்க்கைக்கு திருப்பும். 

Schizophreniaவில் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் மருந்து உட்கொள்வது அவசியம். இந்தியாவில் நூறில் ஒன்று என்ற கணக்கெடுப்பு இரண்டு என்று  கடந்த  ஐந்து வருடங்களில் மாறிவிட்டதற்கு சோஷியல் மீடியாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்கிறார்கள் மனோதத்துவியலார்கள். 

எதையும் அளவாக பயன்படுத்துவது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது.

நன்றி: வணக்கம்மும்பை

திங்கள், 11 டிசம்பர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 27 தலைப்பு : உணர்வுப்பேழை 2

சருகுகளின்_சபலங்கள்

பகுதி - 27

தலைப்பு : #உணர்வுப்பேழை 2


#வணக்கமும்பையின் இந்த வார பதிப்பு. சென்ற வார தொடர்ச்சி. போன வார பதிப்பின் லிங்க் பின்னூட்டத்தில்.

இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்ச நண்பன் ஒருவன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான் அவன் சொன்னது உண்மைன்னு நம்பி எங்க அப்பா அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கினேன் ஆனா அவன் அவங்க அப்பா அம்மா கிட்ட பேசினதுல அவங்க அம்மா ஒத்துக்கல. இதுபோன்ற மனநிலையில காதல விட காமத்தை விட அன்பும் ஆதரவும் காட்ற ஒரு உறவு தான் ரொம்ப முக்கியமா பட்டது. ஆனா இவனும் நம்பிக்கை கொடுத்து ஏமாத்திட்டத்துல மனசு ரொம்பவே ஒடிஞ்சு போயிட்டேன். 

இது போன்ற விஷயத்தில் பிரச்சனை என்னன்னா அவங்க பலகீனமான மனதோடு நாம் இருக்கிறப்போ கொடுக்கிற நம்பிக்கை.  நம்ம எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வாழ்ந்துட்டு இருப்போம் ஆனால் அவங்களா வருவாங்க, கஷ்டத்தை  கேட்பாங்க, ஆறுதல் சொல்லுவாங்க, அரவணைச்சுப்பாங்க, திடீர்னு மேல இருந்து கீழ போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஏன் கையில் எடுத்தாங்க ஏன் அன்பு காட்டினார்கள், காயத்துக்கு மருந்து போடுறேனு வந்துட்டு அந்த காயத்தை இன்னும் நல்லா போட்டு குத்தி குத்தி கிளறி விட்டுட்டு போறாங்க அப்படின்னு மட்டும் புரியவே புரியாது. 

ஆனா உலகம் அந்த ஆண் பின்னாடி போயிட்டோம்னா அந்த அன்பை எதிர்பார்த்து உடம்பு அரிப்புக்கு அலைகிறோம்னு சொல்லும். ஒரு நாய் குட்டிக்கு பிஸ்கட் போட்டா வச்சுக்கோங்க அந்த நாய்க்குட்டி என்ன பண்ணும் அதுக்கப்புறம் எப்ப நீங்க கிராஸ் பண்ணினாலும் உங்க பின்னாடியே வாலை ஆட்டி சுத்தி சுத்தி வரும். ஏன்னா அன்புக்கு மட்டும் தான் ஏங்கி மனசு அல்லோல்கலப்படும். வாழ்க்கையில பலவீனமான நேரத்துல எப்படிப்பட்டவங்களும் வந்து நம்மள  ஈஸியா ஏமாத்திட்டு போயிடலாம். கலங்கிய குட்டையில மீன் பிடிக்கிறது தான் ஈஸி இல்லையா அதே போல தான் பெண் கஷ்டத்தில் இருக்கும் போது எளிதாக அவளை பலவீனமான நேரத்தில் ஆணால்  பயன்படுத்திக்கொள்ள‌ முடிகின்றது. 

யார்னே தெரியாதவங்க உடலை சிதைச்சிட்டு போனாங்கன்னா, நம்ம பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டவங்க மனசை உருக்குலைஞ்சுட்டு போயிடுறாங்க தேறவே முடியாதபடி.

சரி அப்பா அம்மா சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவங்க பார்த்த மாப்பிள்ளையையே பொண்ணு பார்க்க வர சம்மதிச்சேன். அவங்களும் வந்து பார்த்துட்டு போனாங்க. மாப்பிள்ளை நல்லா தான் இருந்தாரு நல்ல வேலையில இருந்தாரு நல்ல குடும்பம் தான் ஆனா எனக்கு கல்யாணம் பண்ணிக்க சுத்தமா விருப்பம் இல்லை. எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது நான் நார்மல் ஆகுறதுக்கு. 

ஆனா அந்த நேரத்தை எங்க அம்மா தர தயாராக இல்லை. அதனால நானே போன் பண்ணி அந்த மாப்பிள்ளை கிட்ட எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டேன். அவருக்கு திக்குவாய் இருந்திருக்குன்னு எனக்கு தெரியாது.  நான் அதனாலதான் அவர வேணான்னு சொல்றேன்னு சொல்லிட்டு அவரும் நாலு நாள் சாப்பிடாம இருந்திருக்காரு. 

அந்த வரன் கொண்டு வந்த தரகர் கிட்ட அவங்க அம்மா இதையெல்லாம் சொல்ல அவர் வந்து எங்க அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு. எங்க அம்மா என் மேல ரொம்ப கோபமாக அன்னைக்கு ராத்திரியே  வீட்டில் இருக்க கூடிய மாத்திரைகளை மொத்தமா போட்டுகிட்டு தற்கொலை பண்ணி முயற்சி பண்ணேன். 

நடுராத்திரி போட்டுக்கிட்டாலும் அதிகாலையில் அரை மயக்க நிலையில் மாத்திரைகளோடு இருக்கிறத பார்த்துட்டு கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல்ல வெச்சி என்னை காப்பாத்திட்டாங்க. ஆனாலும் சாகனும் என்ற எண்ணம் மட்டும் சுத்தமா போகவே இல்லை. அடிக்கடி வெவ்வேறு விதமா முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன். 

அப்புறம் எங்க சொந்தத்தில் ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து எனக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே அவர்கிட்ட நானே எனக்கு நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் அந்த நண்பன் வந்து பொண்ணு கேட்ட விஷயம் வரைக்கும்.

- தொடரும்.


சருகுகளின்_சபலங்கள் பகுதி - 26 தலைப்பு : உணர்வுப்பேழை

சருகுகளின்_சபலங்கள்

பகுதி - 26

தலைப்பு : உணர்வுப்பேழை


# வணக்கமும்பையில் எனது இந்த வார பதிப்பு.

எனக்கு வாழவே விருப்பம் இல்லை லட்சுமி.  ஒவ்வொரு நாளும் ஏன்டா உயிரோடு இருக்கிறோம் என்று இருக்கு. நான் என்ன அவ்ளோ பாவம் பண்ணவளா. ஏன் இவ்ளோ அவமானம், ஏன் இவ்ளோ கஷ்டம். சுத்தி சுத்தி ஏன்டா இருக்கிறோன்றளவு  காயப்படுத்திக்கிட்டே இருக்காங்க மனுஷங்க.

உனக்கே என்னைப் பத்தி நல்லா தெரியும். சின்ன வயசுல இருந்து அப்பா சரி இல்லனாலும் அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க. எவ்வளவோ கஷ்டம் என்றது உனக்கு நல்லாவே தெரியும் ஒவ்வொரு நாளும் தவம் போல தானே வாழ்ந்தோம்.

காலேஜ் போயிட்டு வேலைக்கு போற வரைக்குமே நான் எந்த ஆசா பாசத்துக்காவது இடம் கொடுத்திருக்கேனா, குடும்ப கஷ்டம் புரிஞ்சு தானே நடந்து கொண்டேன். அப்படி கஷ்டப்படும்போது தோணும். சின்ன வயசுல கஷ்டப்பட்டா பெரிய வயசுல சந்தோஷமா இருப்போம் அப்படின்னு பெரியவங்க சொன்னதை நம்பி நாம சந்தோஷமா இருப்போம் இப்ப கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை அப்படின்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.

ஆனா எல்லாமே ஒரு நாள் தலைகீழா மாறிப்போச்சு. ஒரு நாள் வேலைக்கு போயிட்டு ராத்திரி வரும்போது முகம் தெரியாத நபர்களால பலவந்தப்படுத்தப்பட்டேன். அதுக்கு மேல அங்க வேலை பார்க்க முடியாம சொல்லாம கொள்ளாம வேலையை விட்டுட்டு ஊருக்கு போயிட்டேன். அம்மா ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டவங்க அவங்களுக்கு இதுக்கு மேலேயும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு அதை நான் சொல்லவும் இல்லை. இது போன்ற விஷயத்தை என்னனு சொல்லுறது. நானே கொஞ்சம் கொஞ்சமா அந்த வலியில் இருந்து வெளி வந்துட முயற்சி செய்து செய்து தோத்துக்கிட்டே இருந்த காலகட்டம் அது. நான் சொல்லலன்னாலும் யாரோ செஞ்ச தவறுக்கு எனக்கு கடவுள்  தண்டனை கொடுத்துட்டாரு. காலத்துக்கும் கண்ணீர் விட்டு அழும் தண்டனை. ஆமா நான் இரண்டரை மாதங்கள் கற்பமாக இருந்தேன்.

வாழ்க்கையில செத்து பார்த்தால் தான் சாவோட வலி புரியும்பாங்க. அதுபோல செக்வல் அசால்ட் நடந்தா கூட ப்ரெக்னன்ட் ஆகும் அப்படி என்ற ஒரு பிரஞை கூட இல்லாம உயிர் வெறுத்த நிலையில இருந்தேன். சுருகாட்டுக்கு போய் இருந்தா தானே அதன் வலி புரியும். அந்த மாதிரி. சாகற வரை ஒரு பொண்ணுக்கு கடவுள் கொடுக்கவே கூடாதா வலினா அது இதுவா தான் இருக்கும். அந்த கடவுள் என்னை வஞ்சித்தான். நான் அவனை முழுவதுமாக மனதிலிருந்து தூக்கி எறிந்தேன்.

சின்ன வயசுல இருந்து எந்த வித ஆசா பாசத்துக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்து என்ன பிரயோஜனம் கடவுள் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாரு. 

எத்தனை நாள் தூக்கத்தில் அலறி விழித்தேன் என்பதெல்லாம் கொடுமை. பதினைந்து வருடமாகிவிட்டது இன்று வரை தூக்கத்தில் எழுந்து பயந்து கத்துவேன்.
பொண்ணா பொறந்தது என் குத்தமா. இந்த ஆண்கள் ஏன் எப்பவுமே ஈவு இரக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.  இந்த உலகமும் ஆண் என்ன பண்ணாலும் ஏன் எல்லா தப்புக்கும் ஒத்து ஊதுது. அனுசரிச்சு போக சொல்லுது. அவர்களை சப்போர்ட் பண்றதுக்கு ஒரு பெரும் கூட்டமே இருக்கு. 

ஆண் தப்பே செஞ்சாலும் பிளேபாயா இருந்தாலும் ஒழுக்கம் கெட்டவனா இருந்தாலும் குடிகாரனா இருந்தாலும் முடிச்சவிக்கி இருந்தாலும் மொள்ளமாரியா இருந்தாலும் அவனை எப்படியாவது இந்த சமூகம் காப்பாத்துது. 

ஆனா பொண்ணு தனக்கே தெரியாமே தனக்கு எத்தனை விதமான கொடுமைகள் நடந்தாலும் அதன் மூலமா அவளுக்கு ஏதாவது நடந்தாலும் இந்த உலகத்துல அத்தனை வித கேவலங்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கு. அவமானங்களை சந்திக்க வேண்டியதிருக்கு. 

அதுக்கப்புறம் நிறைய அவமானங்களும் பட்டேன் அபார்ஷன் பண்ணாங்க. கல்யாணம் ஆகாம குழந்தை கன்சீவ் ஆகி அதை கலைக்கறது எல்லாம் எவ்வளவு கொடுமை. ரணம். 

வாழ்க்கையில எதுவுமே வேண்டாம்னு இருந்தேன். செத்துப் போயிடலாம் என்று தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தது மனசு. கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்ற கட்டாயத்தை குடும்பம் உருவாக்குச்சு.
     - தொடரும்


சருகுகளின் சபலங்கள் பகுதி - 42 உள்ளக் கிடக்கு

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 42

உள்ளக் கிடக்கு


பிரிந்து விலகி வந்தபின்பும் உங்களை நேசித்தவர் உங்களை விடாமல் காயப்படுத்துகிறார்களா? நீங்கள் நேசித்தவர் உங்களை காயப்படுத்துகையில் மனம் ரணமாகும். மீண்டும் மீண்டும் காயப்படுத்துகையில் காயத்தில் கத்தியை விட்டு கிளறியது போலிருக்கும். உயிர் நோகும். மனவலி எப்படி இருக்கும்னா சும்மா அப்படி இருக்கும். திருப்பி அவர்களை அதே போல் காயப்படுத்துவதற்கு மனம் வரவில்லையா? மன வலி தாங்க முடியாமல் இந்த வலிக்கு சாவே மேல் என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது?

Let them hurt you. Never hurt and react to them back. 

அதற்கு அர்த்தம் நாம அவங்க மேலே இன்னும் காதலோடு, பாசத்தோடு, ஏக்கத்தோடு இருப்பதாய் அர்த்தம் இல்லை.

அவர்களை வெறுக்கவும், விலக்கவும், முழுமனதோடு முழுமையாக ஒதுக்கவும் அவர்களின் செயல்களால் ஏற்படும் அந்த காயங்கள் தான் உதவி புரியும். 

அவர்கள் செய்வதற்கு பதிலுக்கு பதில் என்று செய்யாதபோதே நீங்கள் பாதி ஜெயித்து விடுகிறீர்கள்.

மிச்சம் பாதி எப்போது ஜெயிப்பீர்கள் என்றால் உங்கள் காயங்களில் இருந்து வெளி வந்து உங்கள் வாழ்வை நீங்கள் நன்றாக வாழ ஆரம்பிக்கையில் மிச்சத்தையும் ஜெயித்துவிடுகிறீர்கள். 

சிறிது காலம் கழித்து உங்களை காயப்படுத்தி மகிழ்ந்த அந்த மனிதனை காண்கையில் யார்ரா இவன் கோமாளி என்ற எண்ணம் தோன்றுகையில் மிச்சம் மீதியையும் கடந்துவந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 

வாழ்க்கையில் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னன்னா உங்கள் நிம்மதியை பலி கேட்கும் எதுவுமே உங்களுக்கு தேவையற்றது என்பதை. அது காதலானாலும், கடவுளானாலும் சரி.

எந்தளவிற்கு ஒரு துன்பத்தை நீங்கள் கடக்க பழக்கப்படுத்திக் கொள்கின்றீர்களோ அந்தளவிற்கு மனவலிமை பெறுகிறீர்கள். 

துன்பம் வருகையில் கண்ணாடியாய் நொறுங்கி மண்ணோடு மண்ணாய் போகின்றீர்களா? அன்றி அதீத அழுத்தத்திலும் பெரும்வெப்பத்திலும் பலகாலம் மண்ணுக்கு அடியிலும் பாறை இடுக்கிலும் அழுத்தப்பட்டு மரக்கரியிலிருந்து உருவாகும் வைரமாக மாறப் போகின்றீர்களா என்பதை துன்பங்களை நீங்கள் தாங்கும் விதம் மட்டுமே உங்களுக்கு உணர்த்தும். 

எப்போதுமே துன்பம் இழைப்பவன் கூட்டத்தோடும் அதை பெற்றவன் தனிமையிலும் உழல வேண்டிய சூழல் தான் ஏற்படும். 

பாதிப்பிற்கு ஆளானவன் மனிதர்களை நம்புவதற்கு அஞ்சுவான். அதன் பொருட்டே மனம் அதீத தனிமையை நாடும். பாதிப்பை ஏற்படுத்துபவன் பன்றிக்கூட்டத்தோடு தான் வலம் வருவான். மூளையற்ற பன்றி கூட்டங்கள் தான் மிருகக் குணம் படைத்த வக்கிரம் பிடித்த மனிதனுக்கு துணை நின்று பாதிக்கப்பட்டவனையே எள்ளல் செய்து சந்தோஷிக்கும்.

ஈவு இரக்கம் கொண்ட எந்த மனிதனும் அது போன்ற நரகாசூரன்களுக்கு துணை நிற்பதில்லை.

அவர்கள் கூட்டமாய் உங்களை அடிக்கட்டும், தனிமைப்படுத்தட்டும், வெறுப்பேற்றி இன்பம் துய்க்கட்டும், அவமானங்களையும், அவதூறுகளையும் உங்கள் தலைமீது வைக்கட்டும். அவர்கள் சிறுமைப் புத்தியை உங்களை அவமானப்படுத்துவதன் மூலம் மறைத்துக் கொள்ள பிரயத்தனப்படுத்துகிறார்கள்.

உங்களை பற்பல முறை பயன்படுத்திவிட்டு இன்ன பிற காரணங்களால் இந்த உறவை இத்தோடு முடித்துக் கொள்ளலாம் போன்ற எந்த வித பேச்சு வார்த்தைகளும் இன்றி உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படுத்துவது இயற்கை தான். அதை காரணம் காட்டி உலகிற்கு உங்களை மனநோயாளியாக இந்த புற உலகிற்கு சித்தரித்துவிட்டு குள்ள நரிகள் குளிர்காயத்தான் செய்யும். 

அதன் நீட்சியே அவள் என்னை உடலை காட்டி கூப்பிட்டாள் என்றோ, கைப்பிடித்து இழுத்தால் என்றோ, அவள் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றோ மற்றவர்களிடம் கூறி உங்கள் பக்க நியாயங்களை வதந்திகள் என்றும் பொய் பூச்சு பூசும் தந்திர குணம் கொண்ட நரிகள்‌. இயற்கைக்கு தெரியும், ஒவ்வொரு அலைக்கற்றைகளுக்கும் அவர்களின் பொய்கள் தெரியும். அவை தக்க சமயத்தில் அவர்களை வதம் செய்யும்.

அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், அத்தனையும் தாண்டி நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். மனிதர்கள் கை விட்ட உயிரை இயற்கையும் இந்த பிரபஞ்சமும் எப்போதும் கைவிடுவதே இல்லை. 

நீங்கள் மனவலிமை பெற்று புத்துயிர் பெற்று வாழ தேவதைகளை இயற்கை அனுப்பிக் கொண்டிருக்கும். அந்த தேவதைகளை நீங்கள் உணர நீங்கள் கவலை மற்றும் கண்ணீர்களால் கண்களை இறுக மூடிக் கொண்டு இராமல் இருக்க வேண்டும்.

சாக்கடை நாற்றத்திலேயே நின்றுக் கொண்டிருந்தால் அதை கடந்து வந்து பூந்தோட்டத்தின் வாசனையை நுகர முடியாமல் உங்கள் வாழ்வை நீங்களே அழித்துக் கொள்வீர்கள். ஆக move on.

உங்களை காயப்படுத்தி இன்புறுபவர்களுக்கு அது ஒரு விளையாட்டு, உங்கள் கண்ணீர் தான் அவர்களின் சந்தோஷம். தலை முழுகிவிட்டு கடந்து செல்லுங்கள். 

நாம் யாரையும் வெறுப்பேற்றுவதற்காக சந்தோஷமாக இருப்பதாய் நடிக்க வேண்டாம். உண்மையான உணர்வுடனேயே உலா வருவோம். 

மனிதர்கள் சதி செய்வார்கள். ஆனால் இயற்கை நம்மை வாழ வைக்கும்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 45 அன்பின் ரணங்கள்

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 45

அன்பின் ரணங்கள்


ஏற்கனவே குடும்ப வாழ்வில் பல விதத்திலும் பிழியப்பட்டு வேலை செல்லும் இடத்திலும் பல இன்னல்கள் பட்டு தான் வாழ்கின்றார்கள் பல பெண்கள். அப்படி மூச்சடைத்து வாழும் பெண்களுக்கு ஏதோ ஒரு ஆசுவாசம், நிம்மதி, ஆறுதல் தேவைப்படுகிறது என்பது மட்டுமே மறுக்கமுடியாத உண்மை. எப்படி கணக்கிட்டாலும் பெரும்பான்மையாக திருமணம், காதல், காமம் என்பது பெண்ணுக்கு நஷ்டக் கணக்கு மட்டுமே. 

முறையான வாழ்வில் இருந்து தவறிவிடும் பெண்களை சக பெண்கள் அத்தனை கேள்வி கேட்கிறார்கள். அத்தனை அவமானப்படுத்துகிறார்கள், அத்தனை கேலி செய்கிறார்கள், ஒதுக்குகிறார்கள். ஆனால் அவளை பெண்டாண்ட ஆண்களுக்கு துணை நிற்கின்றார்கள். ஏற்கனவே அப்பன் சரியின்றி, கணவன் சரியின்றி வாழ்வில் எந்த வித சுக போக ஏகாந்தங்களும் இன்றி வாழ்ந்து வருபவள்கள் ஆறுதலான ஒரு வார்த்தைக்கு விழுந்து விடுகிறார்கள். அன்பான அணைப்பிற்கு மயங்கி விடுகிறார்கள்.

திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடும் பெண்களை இரு விதமாக பிரிக்கலாம்.

முதலாவது வகையறா நான் மேலே சொன்னது. காதலோ, காமமோ, அன்போ, ஆதரவோ, அனுசரணையோ ஏதுமற்ற பெண்கள், குடும்ப வாழ்விலேயே சக்கையாய் பிழியப்படும் பெண்கள், வேலைக்கும் சென்று வீட்டிலும் கரைந்து, பிள்ளைகளுக்காகவும் என கரைந்து கரைந்து உடலும் மனமும் வெறும் ரணங்களையும், காயங்களையும் பெற்றிருக்கும் பெண்கள்....

இரண்டாவது வகை, லிட்டில் பிரின்ஸஸாக பிறந்து, திருமண வாழ்விலும் நன்றாக வாழும் பெண்கள். அவர்களும் பொழுதுபோக்காகவோ, காம தேவை போதாமையினாலோ மற்றொரு உறவிற்கு செல்கின்றனர். புருஷன் சேமிப்பில் காதலனுக்கு செலவு செய்வதில் அவர்களுக்கு எந்த கூச்சமும் கிடையாது. 

அவர்களுக்கு உறவின் பிரிவு என்பது சாதாரணமாகவே இருக்கின்றது. ருசிக்காக ஹோட்டல்களில் சாப்பிடுவது போல, வித விதமாக அனுபவிக்க தயாராக இருக்கும் ரகம். ஆக ஒன்றை இழந்தால் மற்றொன்று என்று வெளியே கிடைக்காமல் போனாலும் அவர்களுக்கு வீட்டிற்குள் கிடைக்கும். 

திருமணம் தாண்டிய உறவிற்குள் புகும் எண்பது சதவீத பெண்கள் திருமண வாழ்வில் நிம்மதியற்றவர்களே. 

மீதி இருபது சதவீத பெண்கள் மட்டுமே பொழுதுபோக்கிற்காக ஈடுபடுபவர்கள். இந்த இருபது சதவீதத்தை  சமூகம் என்ன சொன்னாலும் அதை பற்றி அவர்கள் கவலைப்பட போவதில்லை. 

ஆனால் அந்த துன்பத்தில் துயருறும் பெண்கள் நிச்சயம் காமத்திற்காக ஈடுபடுவதில்லை. காதல் சார்ந்த அன்பும் அரவணைப்பும் ஓடி ஓடி உழைத்த உடலுக்கு சாய்ந்துக் கொள்ள தோள்களும் தேவைப்படுகின்றன.

ஏமாற்றத்தை பார்த்து சலித்துப் போன இந்த வாழ்வில் ஒரு உண்மையான பரிபூரணமான அன்பு கிடைத்துவிடாதா என்று ஏங்குகிறாள். ஆனால் அவளுக்கு கிடைப்பதென்னவோ அன்பெனும் பெயரில் எட்டிக்காய். பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய விஷக் காளான்களை காதலென்றே நம்புகிறாள். 

விளைவு இத்தனை காலம் ஏமாந்ததற்கு எல்லாம் கிரீடம் வைத்தாற் போல எழவே முடியாமல் சம்மட்டியால் விழுந்தாற் போல வீழும் அடியில் துவள்கின்றாள்.

மனம் பரிபூரணமாக விரக்தி நிலையை எட்டுகின்றது. அதை தாள முடியாத ஏதோ ஒரு கட்டத்தில் மனம் குமுறி தன் அந்தரங்கத்தை அவள் உடைக்கும் கணம் சகல மனிதர்களாலும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுகின்றாள். 

அதில் நடக்கக் கூடிய பெரும் அவலம் என்ன தெரியுமா? அவளை ஏமாற்றும் கேடுகெட்ட ஆணை இந்த பெண்கள் ஆதரித்து சுற்றி உலாவருவதும், ஏமாந்த பெண்ணை அவமானப்படுத்துவதும் தான் சொல்லொண்ணோ துயர்.

இங்கு எதுவும் மாறாது. ஆணுக்கான உலகம் இங்கு வேறு தான். ஆண் அழுதால் தன் முந்தானையை உருவி கண்ணீரை துடைத்துவிட சுயமரியாதையற்ற சில்லரைத்தனமான பெண்கள் தயாராகவே இருக்கின்றனர். இதுவே பெண்ணின் கண்ணீருக்கு அவமானத்தையும், உதாசீனத்தையும் பரிசளித்துவிடுகின்றனர். 

இந்த உலகம் இப்படி தான். ஆக அன்புக்கு ஏங்கி வெளியே சென்று வம்புக்கு ஆளாகாதீர் பெண்களே.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 44 ஆண்மை எனப்படுவது யாதெனில்...

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 44

ஆண்மை எனப்படுவது யாதெனில்...



ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும். ஆண்மை என்றால் என்ன? ஒரு வாட்சப் க்ரூப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான பெண்களுக்கு பதில் தெரியவில்லை. 

பெண் என்பவளின் மீது எப்படி தாய்மை,புனிதம், கருணை, அடக்கம் போன்ற இத்யாதி இத்யாதி பிம்பங்களை கட்டமைத்து வைத்து இருக்கிறோமோ, 

அதே போல் ஆண் என்றால் பலமானவனாகவும், தைரியமானவனாகவும், பெண்களுக்கு பாதுகாவலனாகவும் இன்னும் பற்பல பிம்பங்கள் வகுத்து வைத்து இருக்கிறோம்.

ஆண் என்றால் பெண் துன்பத்தில் இருக்கையில் அவளை காப்பாற்றுவது அவனது தலையாய கடமை என்பதை போன்றே, காலங்காலமாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆண் அழக்கூடாது. ஆண் இருட்டுக்கு பயப்பட கூடாது. இப்படி துவங்கி அவன் மீது பொருளாதார சுமையும், வெளி உலகை எதிர்கொள்ளும் திறனையும் அவனுக்கே உரியதாக விட்டுவிட்டோம். 

ஆக ஆண் பலமானவன், பெண் பலவீனமானவள், இவளை காக்கவே அவன் அவதரித்ததாய் ஒரு உணர்வை சமூக சூழல்கள் அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது.

ஒரு ஆண் படித்து முடித்து விட்டால் அவனுக்கு அடுத்தது எந்த வேலைக்கு சென்றாக வேண்டும் என்ற சமூக அழுத்தம் உள்ளது. பெண் படித்து முடித்தால் வேண்டும் என்றால் வேலைக்கு செல்லலாம், வேண்டாம் என்றால் வீட்டில் அமரலாம். திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம். கணவன் நல்லவனாக இருந்தால் போதும் நிம்மதியாக தூங்கி எழுந்திருச்சு நிம்மதியாக இருக்க கூடிய வாய்ப்பு அவளுக்கு உள்ளது.

ஆண் மட்டும் வேலைக்கு சென்று கொண்டிருக்கையில் ஆணுக்கான வேலை வாய்ப்புகள் இன்னொரு ஆணால் மட்டுமே தட்டி பறிக்கப்பட்டன. தற்போது ஜனத்தொகை பெருக்கத்தினாலும், பெண்களும் விழிப்படைந்த காரணத்தினால் ஒரு வேலை இடத்திற்கு ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள். ஒரு உண்மையை சொல்ல போனால் பெண்களுக்கு இருக்கும் பொறுமைக்கும், திறமைக்கும் பெரும்பாலும் பெண்களுக்கே வாய்ப்புகள் கிடைக்கின்றன. 

பெண் கல்வி, பெண் சுதந்திரம் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆணின் மேல் வைத்துள்ள சூப்பர்மேன் பிம்பங்களை சமூகமும், பெண்களும் சற்று தளர்த்திக் கொள்ள வேண்டும். அவனும் உன்னைப் போலவே உயிரும் உணர்வும் உள்ள மனிதன் என்பதை உணரத்தலைப்பட வேண்டும்.

குழந்தை பிறப்பை தவிர்த்து ஆணுக்கும், பெண்ணுக்கும் எங்கேயும் பாலின வேறுபாட்டை நாம் புகுத்துதல் ஆகாது. உங்கள் ஆண் குழந்தைக்கு கற்று தர விரும்பும் அத்தனையும் உங்கள் பெண் குழந்தைக்கும் கற்று தாருங்கள். உங்கள் பெண் குழந்தைக்கு கற்று தரும் வீட்டு வேலைகள் அனைத்தையும் உங்கள் ஆண் குழந்தைக்கும் கற்று தாருங்கள். துடைப்பம் அவர்கள் பெருக்கினால் பெருக்காதா? தோசை மாவு அவர்கள் சுட்டால் இடியாப்பம் ஆகிவிடுமா? கற்று கொள்ளட்டும். 

ஆண் மனம் வெதும்புகையில் அவனை அழ விடுங்கள். துவண்டு போகின்றானா? தோள் கொடுங்கள். ஆண் குழந்தை அழக் கூடாது என்று அவனை கடினமாக்காதீர்கள். துன்பத்தில் துணைக்கு நில்லுங்கள்.

கிருஷ்ணன் கதைகள் எல்லாம் கதையின் சுவாரசியத்திற்காக அவரவர்கள் வேண்டியளவு ஏற்றி சொன்ன புனை கதைகள். வாழ்ந்தவனை புகழ சொன்னால் நமக்கா புகழ தெரியாது. கிருஷ்ணன் என்று. சொன்னாலே மனம் மயங்கி சரியும் அளவிற்கு நிதர்சனங்கள் அல்லாத ஆயிரம் புனை கதைகளை சேர்த்து கூறப்பட்டுள்ளது. ஜம்பது சதவீதம் அவை நிஜமாக இருக்கலாம். ஆனால் மொத்தமும் முழுமையே என்றெண்ணி அவனை சாதாரண மனிதர்களிடம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

பெண்களுக்கு புனித பிம்பம் என்றால், ஆண்களுக்கு ஆகாஸ சூரன் என்ற பிம்பம் தேவை.

ஆண் என்றால் ஆளுமை, பெண் என்றால் அடக்கம்(அடிமை) என்று யார் எழுதி வைத்தார்கள்.

ஆண் பெண் இருவரும் நன்கு படித்து வேலைக்கு செல்ல ஆசைப்பட்டால் போகட்டுமே. ஆனால் வீட்டு வேலையும் இருவரும் பகிர்ந்து செய்திடல் வேண்டும். 

அதே போல பெண் வேலைக்கு சென்று ஆண் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக இருந்தால் என்ன குறைந்துவிட போகிறது. அதுவும் அழகு தானே. இன்னும் சொல்லப் போனால் பெண்ணை விட ஆண் ஹவுஸ் ஹஸ்பெண்டாக அனைத்து வேலைகளையும் சுணக்கம் இன்றி செய்யக் கூடிய திறமைமிக்கவர்களே.

பெண் ஹவுஸ் மேக்கர் என்பதையே தரைகுறைவாக பார்க்க பேச ஆரம்பித்துவிட்ட காலக்கட்டத்தில் ஹவுஸ் ஹஸ்பெண்டா? இப்பவே பத்துகாசுக்கு மதிக்கமாட்டென்கிறார்கள் என்று ஒரு சிலர் கூக்குரல் இடுவது கேட்கிறது.

வேலைக்கு செல்லும் பெண்ணாகவும் இருந்திருக்கிறேன். வீட்டிலிருந்து வீட்டு வேலைகளை மட்டும் செய்யும் பெண்ணாகவும் இருந்திருக்கிறேன். வீட்டில் இருந்தால் சும்மா காலாட்டிக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டிருப்பதாக நம்புகிறது ஒரு உலகம். வீட்டு வேலைகளையே ஒவ்வொரு நாளும் நாலு சுவற்றை பார்த்துக் கொண்டு இடுப்பொடிய வேலை செய்து அதற்கு ஒத்த பைசாவும் வாங்காமல் இருப்பது தான் இருப்பதிலேயே கடினமான வேலை.

 அவர்கள் விரும்பினால் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கட்டும். தவறில்லை.‌ ஏளனம் செய்வதற்கும் ஏதும் இல்லை. எனக்கு தெரிந்த சில ஜோடிகள் இப்படி சந்தோஷமாகவே இருக்கின்றனர். 

உத்யோகம் புருஷ லட்சணம், ஆண் பிள்ளை அழ கூடாது. இப்படி எல்லாம் பற்பல பழமொழிகளை சொல்லி சொல்லி சம உணர்வோடு வாழ வேண்டியவர்களை கெடுத்து வைத்திருக்கிறது இச்சமூகம்.

ஆண் என்றால் என்ன என்ற கேள்விக்கு என்னுடைய பதில் இது தான். ஆண் என்பவன் பெண்களும் தன்னை போல சக உயிரி தான், அவர்களுக்கும் நம்மை போல் சந்தோஷமாக, சுதந்திரமாக இருக்க, செயல்பட உரிமை இருக்கின்றது என்பதை உணர்நதவனாக இருக்க வேண்டும். 

என் பெண்டாட்டி வேலைக்கும் போறா, வீட்டு வேலையும் செய்யறா, குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறாள், படிக்க வைக்கிறாள்,நான் அப்படியே வேலைக்கு சென்று வந்துவிட்டு அரசியல், சினிமா, நண்பர்கள், ஆன்லைனில் மன்மதனாக வலம் வந்து கொண்டு she is one of the most humble woman in the world என்று மார்த்தட்டி கொள்ளாதீர்கள். நீங்கள் என்ன தான் பலம் பொருந்தி இருந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இருந்த போதும், பெண்ணின் மீது அத்தனை சுமைகளையும் சுமத்தி விட்டு வாழ்தல் என்பது ஆண்மையற்றத்தனம்.

ஆண்மை எனப்படுவது யாதெனில் பெண்ணும் தனக்கு சமமான பலம் பொருந்தியவள், சந்தோஷமாக வாழ தகுதியானவள் என்பதை உணர்வதே. 

சருகுகளின் சபலங்கள் பகுதி -43 தைரிய மேவ ஜெயதே.

சருகுகளின் சபலங்கள் 

பகுதி -43

தைரிய மேவ ஜெயதே.


மரணம் என்பது ஒரு வகை எல்லாவித சுகதுக்கங்களிலும் இருந்து மனிதனுக்கு கிடைக்கும் விடுதலை. 

நிஜத்தில் பிறப்பிற்கு தான் அழ வேண்டும். இறப்பிற்கு தான் சிரிக்க வேண்டும். (இனி அவன் எல்லா வலிகளிலும் இருந்தும் தப்பித்துக் கொள்கிறான் அல்லவா)

ஒவ்வொரு உயிரும் பிறக்கையில் இந்த உலகில் வலியது வாழும் என்று போராட தான் போகிறது. உடல் அளவிலோ மனதளவிலோ சந்தோஷமாக மட்டுமே வாழ்பவர்கள் என்று யாருமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ப துன்ப இன்ப விகிதாச்சாரங்கள் மாறுபடும்.

மரணம் என்பது விமோசனம். ஒரு வகையில் வரம். மரணத்தின் மூலம் எல்லா வலிகளிடம் இருந்து தப்பித்து கொள்கிறான். 

ஆக நீ செத்து போ என்று நம்மை கூறுபவர்களையும், நாம சாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் நாம் நன்றியை தான் உரித்தாக்க வேண்டும். 

So say to them, more love and hugs ❤️ 

ஒரு பூ பூக்கையிலே தெரியும் அது அன்று இரவோடு வாடி விடும் என்று. மனிதனின் ஆயுளுக்கும் கூட அஃதே. என்றோ ஒரு நாள் மரணத்தை நோக்கி எல்லோரும் வரிசையில் நின்று கொண்டு தான் இருக்கின்றோம்.

யார் முன்னே என்பது தான் நம் கையில் இல்லை.

உள்ளார்ந்த தத்துவம் பேசுகையில் கொஞ்சம் பைத்தியம் மாதிரி தான் தோன்றும். ஆனால் உண்மைகள் நிர்வாணமானவை. முகத்தில் அறைய கூடியவை.

உங்களை துன்பக்காலங்களில் கைவிட்டு சென்றவர்களுக்கு நன்றியை சொல்லுங்கள்.

அவர்கள் தான் உங்கள் உளத்தசை எத்தனை மனவலிமை மிக்கது என்பதை உங்களுக்கு உணர்த்தி விட்டு சென்றவர்கள்.

உங்களை வெறுப்பவர்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். வெறுப்பவர்களுக்கு குறைகள் மட்டுமே தெரியும். அவற்றை பூதக்கண்ணாடியில் வைத்து உலகிற்கு உங்களை நீங்கள் அப்படிபட்டவர்கள் என்று பறைசாற்றுவார்கள்.

எதையும் இழப்பதற்கு தயாராக இருப்பவன் எந்த நிலையிலும் வீழமாட்டான். அவனை வீழ்த்த விரும்புபவர்கள் தான் காணாமல் போவார்கள். 

பயமற்றவனுக்கு இந்த வாழ்வு சொர்க்கம். ஆக தைரியமாக எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ளுங்கள். உயிர் இருக்கும் வரை வாழ்வு உங்களுடையதாகட்டும்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...