சனி, 30 டிசம்பர், 2023

சருகுகளின் சபலங்கள். பகுதி - 47 வக்கிர மனங்களை தூர நிறுத்துங்கள்

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 47

வக்கிர மனங்களை தூர நிறுத்துங்கள்

தோழியுடனான சம்பாஷணை:
"ரொம்ப நாள் கழிச்சு என்னை ஏமாற்றிவிட்டு விட்டுப் போன காதலனை பார்த்தேன். கிட்டத்தட்ட அவன் பிரிவின் ஏமாற்றத்தை தாங்க இயலாமல் ஏழு வருடங்கள் நான் திருமணமும் செய்துக் கொள்ளாமல் எந்த வித காதலிலும் ஈடுபடாமல் என்னுடைய 25 வயதில் இருந்து முப்பது வயதிற்கும் மேலாக துன்பக் கடலில் வீணாக்கி இருக்கிறேன். அதன் பிற்பாடு மணம் செய்துக் கொண்டு ஓரளவு சந்தோஷமாகவே வாழ்த்துக் கொண்டிருக்கிறேன். பரிபூரணமான ஒட்டுதல் ஏற்படவில்லை திருமண வாழ்வில் ஆயினும் துன்பத்தில் இல்லை. என் கடமையை சரிவர செய்துக் கொண்டு இருக்கிறேன். அதில் அவர் விருப்பப்பட்டு நெருங்கினால் மட்டுமே இணங்கிப் போவது என்ற தாமபத்தியமும் அடக்கம். எனக்கு என்னை விட்டு சென்றவன் மீது காதல் எல்லாம் இல்லை. ஆனாலும் அவனுடனான அந்த நெருக்கத்தை மனம் எண்ணிக் கண்ணீர் வடிக்கும். அவர் என்னை நெருங்கும் போது. அந்த சமயங்களில் மனதை கல்லாய் வைத்துக் கொள்கிறேன். 

பிரச்சினை அதுவல்ல, சந்தர்ப்ப சூழல் காரணமாக நான் வேலை செய்யும் இடத்திலேயே அவனுக்கும் மாற்றலாகி வந்திருக்கிறான். அவனை பார்க்கையில் எந்த வித உணர்வும் ஏற்படவில்லை. 

கோபமோ தாபமோ எதுவுமே அவன் மீது இல்லை. அவனுடன் வெகு சகஜமாக மற்றவர்களுடன் பேசுவதைப் போல வெகு சகஜமாகவே பேசுகிறேன். ஆனால் தாமரை இலை தண்ணீர் போல. 

என்னை கழட்டிவிட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்து கரம் பிடித்தவன் வாழ்வு எப்படி இருக்கும் என்று கூட நான் அறிந்துக் கொள்ள விரும்பவில்லை. 

சக பெண்கள் அவனை பற்றி உணவருந்தும் நேரத்தில் பேசிக் கொள்வதை கேட்க நேரிட்டது. அவனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று. இங்கும் அய்யோ பாவம் என்ற எண்ணமும் இல்லை, நல்லா வேணும்னும் நினைக்கவில்லை. 

முன்னே உயிரும் உடலுமாய் கலந்தவன் தான். ஆனால் அவன் துன்பம் என்னை குதூகலிக்கவும் செய்யவில்லை. பரிதாபத்திற்குள்ளும் தள்ளவில்லை" என்றாள்.

எனக்கு அவன் யாரோ மாதிரி மட்டுமே தெரிகின்றான். ஆனால் அவன் என்னிடம் எங்களுடைய பழைய விஷயங்களை அன்பை என்னிடம் இருந்து எதிர்பார்ப்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருக்கிறேன். சுற்றி என்னுடன் வேலை செய்பவர்களிடமும் எங்கள் காதல் கதைகளை நான் அறியாமல் சொல்லி வைத்திருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் எங்களைப் பற்றி கிசுகிசுக்களை உண்டாக்க முயற்சி செய்கின்றான்.

என்னுடன் நண்பர்களாக பழகுபவர்களை கண்டிப்பதும், விலக்கி வைப்பதும் என் வேலை சம்பந்தமான சம்பாஷணையை கூட பாதிக்கிறது. என்னிடம் நெருங்கவே முடியாதவண்ணம் நான் திடமாய் இருந்தாலும் என்னை சுற்றி அவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம் அவனை கண்டாலே வெறுக்க வைக்கின்றது. ச்சீ இவனைப் போய் ஒரு காலத்தில் காதலித்தோமே என்று அவமானமாய் இருக்கின்றது. தற்கொலை எண்ணம் அதிகம் வருகிறது. இதில் இருந்து மீள எதாவது வழி இருக்கிறதா லச்சு. 

எனக்கு நிம்மதியா என் கணவரோடும், குழந்தையோடும் வாழ்ந்தால் போதும் என்றாள்.

இதே பிரச்சினை வேறு யாருக்காவது நடந்திருந்தால் இவள் அவர்களுக்கு தெளிவாகவே அறிவுரை கூறி இருப்பாள். ஏன்னா அவள் அத்தனை திடமான பெண்.

நான் அவளுக்கு சொல்லிய தீர்வு...

உனக்கு நிறைய தீர்வு இருக்கு.

1. வேலையை வேறு கிளைக்கு மாற்ற முடிந்தால் மாற்றிக்கொள். அல்லது வேலையை விட்டுவிடு. வேறு வேலை தேடிக் கொள். 
(அவனை மேலதிகாரியிடம் சொல்லி வேலையை விட்டுவிட செய்யலாமே என கேட்கலாம். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றது. ஏற்கனவே திருமண வாழ்வில் தோல்வி அடைந்தவன் இவள் மீண்டும் அழகும் வனப்புமாக கிட்டுவதை பார்த்ததும் மீண்டும் பசிக்கொண்ட கொடூர மிருகமாக சுற்றி வருகிறான். அவனை பொருத்தவரை இவள் மீது காதல் எல்லாம். இல்லை. இவள் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லை. அது தான் அவனது அடிமன குரோதம். வேலையை விட்டு அனுப்ப செய்தாலும் இவள் என்னமோ அவனை ஏமாற்றிவிட்டு இன்னொருவனை திருமணம் செய்துக் கொண்டதாய் சக பெண்களிடம் நாடகம் போட்ட அவனுக்கு இன்னமும் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யத் தோன்றலாம். தோழி இயல்பிலேயே மென்மையாக நடந்துக் கொள்பவள் மனிதர்களிடம். தவிர அவள் பேரை அங்கே அவன் கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டான். வேறு சூழல் மட்டுமே அவளுக்கு இதம் தரும். ஆக வேறு இடம் தான் அவளுக்கு நல்லதும் கூட)

2. சரியோ தவறோ தகுந்த நேரம் பார்த்து அவனைப் பற்றி கணவரிடம் கூறிவிடுவது. அதாவது ஏழு வருடம் அவனுக்காக ஏங்கிய கதை எல்லாம் தவிர்த்து அவனை காதலித்ததையும் அவன் இவளை விட்டுவிட்டு இன்னொருத்தியை காதலித்து திருமணம் செய்ததையும், அவள் அவன் டார்ச்சர் தாங்க முடியாமல் விவாகரத்து செய்ததையும் சொல் என்றேன். உனக்கு அவன் மீது ஒரு காலத்தில் இருந்த அபரிமிதமான காதலை எல்லாம் விளக்கிக் கொண்டிருக்காதே. அது தேவையும் அற்றது. நீ செய்ய வேண்டியது அவனிடம் இருந்து நல்லவேளை தப்பி பிழைத்து எனக்கு உங்களை போல நல்லவன் கணவனாக கிடைத்ததை எண்ணி பெருமிதப்படுவதாக சொல். பாவம் அந்த பெண் என்ற எண்ணம் வருமளவு சொல். ஒருவேளை அவன் உன் கணவனிடம் வந்து எதாவது உளற நினைத்தாலும் அவர் கைகளால் அவனை அடித்து துரத்தும்படி நிகழ்வுகள் நிகழட்டும் என்றேன். 
பல இடங்களில் கணவனிடம் சொல்வதினால் பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயம் ஏற்படலாம். சொல்லாததால் ஏற்படும் பிரச்சினைகளை விட சொல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு தான். (ஒருவேளை கணவர் புரிந்துக் கொள்ளாமல் பிரிந்துவிடுவாரோ என்ற பயம் இருந்தாலும் அந்த பிரிவுக்கு தயாரிக்கக் கொள்வது ஒன்றே சாஸ்வதம். பிரச்சினைகளை கண்டு பயப்படுவதை விட அதை எதிர்கொள்வது நல்லது).
கொஞ்ச நாள் கழித்து இவ்வளோ தானே இதுக்கு போய் ஏன் இவ்ளோ வருத்தம், ஆதங்கம் பட்டோம். இவ்வளோ எமோஷனல் ஆகி இருக்க வேணாமேனு தோணும். 

பயமற்று இருப்பது ஒன்றே வெற்றிக்கான ஒரே வழி. வாழ்த்துகள் அவ்வப்போது மனம் தடுமாறுகையில் என்னிடம் பேசு என்றேன். தற்போது மன அழுத்தத்திற்கான ட்ரீட்மெண்டிலும் இருக்கிறாள். 

வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ள தயாராக வேண்டும். 

அன்புள்ள ஆண்களுக்கு ஒரு காலத்தில் பெண் உங்களை காதலித்திருந்தால் எல்லா காலகட்டத்திலும் உங்களை நினைத்து அவள் உருகி வாழ வேண்டிய அவசியமில்லை. அவளுக்கான அன்பு கிட்டினால் மாறிக் கொள்ளட்டும்.

அவமானங்களுக்கு பின்பு எந்த சுயமரியாதை உள்ள பெண்ணும் பழைய நினைவலைகளில் சந்தோஷமாக உலா வர முடியாது. அதன் பின் விலகிச் செல்வது ஒன்றே மானமுள்ள மனிதன் செய்ய வேண்டிய செயல். 

இங்கு பல ஆண்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். அவர்கள் எத்தனை பெண்கள் கூட வேண்டுமானால் சரசமாடலாம். தான் விரும்பிய பெண் இன்னொரு வாழ்விற்கு போகவே கூடாது. போனா அவள் பெயரை கெடுத்து குட்டிச் சுவராக்க என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள். தனக்கு கிட்டாதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணமும் தான் கால் பதித்த தடமென பெண்ணை தனித்து நிறுத்த நினைப்பதும் உங்கள் ஆழமன கேவலமான வக்கிரம். அந்த வக்கிரத்தை அழித்து விடுங்கள். அவளை நிம்மதியாக வாழ விடுங்கள். விலகிய பின்பு அவதூறு சுமத்தி, அவமானத்திற்குள் தள்ளி இன்புறாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...