பகுதி - 42
உள்ளக் கிடக்கு
பிரிந்து விலகி வந்தபின்பும் உங்களை நேசித்தவர் உங்களை விடாமல் காயப்படுத்துகிறார்களா? நீங்கள் நேசித்தவர் உங்களை காயப்படுத்துகையில் மனம் ரணமாகும். மீண்டும் மீண்டும் காயப்படுத்துகையில் காயத்தில் கத்தியை விட்டு கிளறியது போலிருக்கும். உயிர் நோகும். மனவலி எப்படி இருக்கும்னா சும்மா அப்படி இருக்கும். திருப்பி அவர்களை அதே போல் காயப்படுத்துவதற்கு மனம் வரவில்லையா? மன வலி தாங்க முடியாமல் இந்த வலிக்கு சாவே மேல் என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது?
Let them hurt you. Never hurt and react to them back.
அதற்கு அர்த்தம் நாம அவங்க மேலே இன்னும் காதலோடு, பாசத்தோடு, ஏக்கத்தோடு இருப்பதாய் அர்த்தம் இல்லை.
அவர்களை வெறுக்கவும், விலக்கவும், முழுமனதோடு முழுமையாக ஒதுக்கவும் அவர்களின் செயல்களால் ஏற்படும் அந்த காயங்கள் தான் உதவி புரியும்.
அவர்கள் செய்வதற்கு பதிலுக்கு பதில் என்று செய்யாதபோதே நீங்கள் பாதி ஜெயித்து விடுகிறீர்கள்.
மிச்சம் பாதி எப்போது ஜெயிப்பீர்கள் என்றால் உங்கள் காயங்களில் இருந்து வெளி வந்து உங்கள் வாழ்வை நீங்கள் நன்றாக வாழ ஆரம்பிக்கையில் மிச்சத்தையும் ஜெயித்துவிடுகிறீர்கள்.
சிறிது காலம் கழித்து உங்களை காயப்படுத்தி மகிழ்ந்த அந்த மனிதனை காண்கையில் யார்ரா இவன் கோமாளி என்ற எண்ணம் தோன்றுகையில் மிச்சம் மீதியையும் கடந்துவந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
வாழ்க்கையில் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னன்னா உங்கள் நிம்மதியை பலி கேட்கும் எதுவுமே உங்களுக்கு தேவையற்றது என்பதை. அது காதலானாலும், கடவுளானாலும் சரி.
எந்தளவிற்கு ஒரு துன்பத்தை நீங்கள் கடக்க பழக்கப்படுத்திக் கொள்கின்றீர்களோ அந்தளவிற்கு மனவலிமை பெறுகிறீர்கள்.
துன்பம் வருகையில் கண்ணாடியாய் நொறுங்கி மண்ணோடு மண்ணாய் போகின்றீர்களா? அன்றி அதீத அழுத்தத்திலும் பெரும்வெப்பத்திலும் பலகாலம் மண்ணுக்கு அடியிலும் பாறை இடுக்கிலும் அழுத்தப்பட்டு மரக்கரியிலிருந்து உருவாகும் வைரமாக மாறப் போகின்றீர்களா என்பதை துன்பங்களை நீங்கள் தாங்கும் விதம் மட்டுமே உங்களுக்கு உணர்த்தும்.
எப்போதுமே துன்பம் இழைப்பவன் கூட்டத்தோடும் அதை பெற்றவன் தனிமையிலும் உழல வேண்டிய சூழல் தான் ஏற்படும்.
பாதிப்பிற்கு ஆளானவன் மனிதர்களை நம்புவதற்கு அஞ்சுவான். அதன் பொருட்டே மனம் அதீத தனிமையை நாடும். பாதிப்பை ஏற்படுத்துபவன் பன்றிக்கூட்டத்தோடு தான் வலம் வருவான். மூளையற்ற பன்றி கூட்டங்கள் தான் மிருகக் குணம் படைத்த வக்கிரம் பிடித்த மனிதனுக்கு துணை நின்று பாதிக்கப்பட்டவனையே எள்ளல் செய்து சந்தோஷிக்கும்.
ஈவு இரக்கம் கொண்ட எந்த மனிதனும் அது போன்ற நரகாசூரன்களுக்கு துணை நிற்பதில்லை.
அவர்கள் கூட்டமாய் உங்களை அடிக்கட்டும், தனிமைப்படுத்தட்டும், வெறுப்பேற்றி இன்பம் துய்க்கட்டும், அவமானங்களையும், அவதூறுகளையும் உங்கள் தலைமீது வைக்கட்டும். அவர்கள் சிறுமைப் புத்தியை உங்களை அவமானப்படுத்துவதன் மூலம் மறைத்துக் கொள்ள பிரயத்தனப்படுத்துகிறார்கள்.
உங்களை பற்பல முறை பயன்படுத்திவிட்டு இன்ன பிற காரணங்களால் இந்த உறவை இத்தோடு முடித்துக் கொள்ளலாம் போன்ற எந்த வித பேச்சு வார்த்தைகளும் இன்றி உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படுத்துவது இயற்கை தான். அதை காரணம் காட்டி உலகிற்கு உங்களை மனநோயாளியாக இந்த புற உலகிற்கு சித்தரித்துவிட்டு குள்ள நரிகள் குளிர்காயத்தான் செய்யும்.
அதன் நீட்சியே அவள் என்னை உடலை காட்டி கூப்பிட்டாள் என்றோ, கைப்பிடித்து இழுத்தால் என்றோ, அவள் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றோ மற்றவர்களிடம் கூறி உங்கள் பக்க நியாயங்களை வதந்திகள் என்றும் பொய் பூச்சு பூசும் தந்திர குணம் கொண்ட நரிகள். இயற்கைக்கு தெரியும், ஒவ்வொரு அலைக்கற்றைகளுக்கும் அவர்களின் பொய்கள் தெரியும். அவை தக்க சமயத்தில் அவர்களை வதம் செய்யும்.
அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், அத்தனையும் தாண்டி நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். மனிதர்கள் கை விட்ட உயிரை இயற்கையும் இந்த பிரபஞ்சமும் எப்போதும் கைவிடுவதே இல்லை.
நீங்கள் மனவலிமை பெற்று புத்துயிர் பெற்று வாழ தேவதைகளை இயற்கை அனுப்பிக் கொண்டிருக்கும். அந்த தேவதைகளை நீங்கள் உணர நீங்கள் கவலை மற்றும் கண்ணீர்களால் கண்களை இறுக மூடிக் கொண்டு இராமல் இருக்க வேண்டும்.
சாக்கடை நாற்றத்திலேயே நின்றுக் கொண்டிருந்தால் அதை கடந்து வந்து பூந்தோட்டத்தின் வாசனையை நுகர முடியாமல் உங்கள் வாழ்வை நீங்களே அழித்துக் கொள்வீர்கள். ஆக move on.
உங்களை காயப்படுத்தி இன்புறுபவர்களுக்கு அது ஒரு விளையாட்டு, உங்கள் கண்ணீர் தான் அவர்களின் சந்தோஷம். தலை முழுகிவிட்டு கடந்து செல்லுங்கள்.
நாம் யாரையும் வெறுப்பேற்றுவதற்காக சந்தோஷமாக இருப்பதாய் நடிக்க வேண்டாம். உண்மையான உணர்வுடனேயே உலா வருவோம்.
மனிதர்கள் சதி செய்வார்கள். ஆனால் இயற்கை நம்மை வாழ வைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக