சருகுகளின் சபலங்கள்
பகுதி - 45
அன்பின் ரணங்கள்
ஏற்கனவே குடும்ப வாழ்வில் பல விதத்திலும் பிழியப்பட்டு வேலை செல்லும் இடத்திலும் பல இன்னல்கள் பட்டு தான் வாழ்கின்றார்கள் பல பெண்கள். அப்படி மூச்சடைத்து வாழும் பெண்களுக்கு ஏதோ ஒரு ஆசுவாசம், நிம்மதி, ஆறுதல் தேவைப்படுகிறது என்பது மட்டுமே மறுக்கமுடியாத உண்மை. எப்படி கணக்கிட்டாலும் பெரும்பான்மையாக திருமணம், காதல், காமம் என்பது பெண்ணுக்கு நஷ்டக் கணக்கு மட்டுமே.
முறையான வாழ்வில் இருந்து தவறிவிடும் பெண்களை சக பெண்கள் அத்தனை கேள்வி கேட்கிறார்கள். அத்தனை அவமானப்படுத்துகிறார்கள், அத்தனை கேலி செய்கிறார்கள், ஒதுக்குகிறார்கள். ஆனால் அவளை பெண்டாண்ட ஆண்களுக்கு துணை நிற்கின்றார்கள். ஏற்கனவே அப்பன் சரியின்றி, கணவன் சரியின்றி வாழ்வில் எந்த வித சுக போக ஏகாந்தங்களும் இன்றி வாழ்ந்து வருபவள்கள் ஆறுதலான ஒரு வார்த்தைக்கு விழுந்து விடுகிறார்கள். அன்பான அணைப்பிற்கு மயங்கி விடுகிறார்கள்.
திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடும் பெண்களை இரு விதமாக பிரிக்கலாம்.
முதலாவது வகையறா நான் மேலே சொன்னது. காதலோ, காமமோ, அன்போ, ஆதரவோ, அனுசரணையோ ஏதுமற்ற பெண்கள், குடும்ப வாழ்விலேயே சக்கையாய் பிழியப்படும் பெண்கள், வேலைக்கும் சென்று வீட்டிலும் கரைந்து, பிள்ளைகளுக்காகவும் என கரைந்து கரைந்து உடலும் மனமும் வெறும் ரணங்களையும், காயங்களையும் பெற்றிருக்கும் பெண்கள்....
இரண்டாவது வகை, லிட்டில் பிரின்ஸஸாக பிறந்து, திருமண வாழ்விலும் நன்றாக வாழும் பெண்கள். அவர்களும் பொழுதுபோக்காகவோ, காம தேவை போதாமையினாலோ மற்றொரு உறவிற்கு செல்கின்றனர். புருஷன் சேமிப்பில் காதலனுக்கு செலவு செய்வதில் அவர்களுக்கு எந்த கூச்சமும் கிடையாது.
அவர்களுக்கு உறவின் பிரிவு என்பது சாதாரணமாகவே இருக்கின்றது. ருசிக்காக ஹோட்டல்களில் சாப்பிடுவது போல, வித விதமாக அனுபவிக்க தயாராக இருக்கும் ரகம். ஆக ஒன்றை இழந்தால் மற்றொன்று என்று வெளியே கிடைக்காமல் போனாலும் அவர்களுக்கு வீட்டிற்குள் கிடைக்கும்.
திருமணம் தாண்டிய உறவிற்குள் புகும் எண்பது சதவீத பெண்கள் திருமண வாழ்வில் நிம்மதியற்றவர்களே.
மீதி இருபது சதவீத பெண்கள் மட்டுமே பொழுதுபோக்கிற்காக ஈடுபடுபவர்கள். இந்த இருபது சதவீதத்தை சமூகம் என்ன சொன்னாலும் அதை பற்றி அவர்கள் கவலைப்பட போவதில்லை.
ஆனால் அந்த துன்பத்தில் துயருறும் பெண்கள் நிச்சயம் காமத்திற்காக ஈடுபடுவதில்லை. காதல் சார்ந்த அன்பும் அரவணைப்பும் ஓடி ஓடி உழைத்த உடலுக்கு சாய்ந்துக் கொள்ள தோள்களும் தேவைப்படுகின்றன.
ஏமாற்றத்தை பார்த்து சலித்துப் போன இந்த வாழ்வில் ஒரு உண்மையான பரிபூரணமான அன்பு கிடைத்துவிடாதா என்று ஏங்குகிறாள். ஆனால் அவளுக்கு கிடைப்பதென்னவோ அன்பெனும் பெயரில் எட்டிக்காய். பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய விஷக் காளான்களை காதலென்றே நம்புகிறாள்.
விளைவு இத்தனை காலம் ஏமாந்ததற்கு எல்லாம் கிரீடம் வைத்தாற் போல எழவே முடியாமல் சம்மட்டியால் விழுந்தாற் போல வீழும் அடியில் துவள்கின்றாள்.
மனம் பரிபூரணமாக விரக்தி நிலையை எட்டுகின்றது. அதை தாள முடியாத ஏதோ ஒரு கட்டத்தில் மனம் குமுறி தன் அந்தரங்கத்தை அவள் உடைக்கும் கணம் சகல மனிதர்களாலும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுகின்றாள்.
அதில் நடக்கக் கூடிய பெரும் அவலம் என்ன தெரியுமா? அவளை ஏமாற்றும் கேடுகெட்ட ஆணை இந்த பெண்கள் ஆதரித்து சுற்றி உலாவருவதும், ஏமாந்த பெண்ணை அவமானப்படுத்துவதும் தான் சொல்லொண்ணோ துயர்.
இங்கு எதுவும் மாறாது. ஆணுக்கான உலகம் இங்கு வேறு தான். ஆண் அழுதால் தன் முந்தானையை உருவி கண்ணீரை துடைத்துவிட சுயமரியாதையற்ற சில்லரைத்தனமான பெண்கள் தயாராகவே இருக்கின்றனர். இதுவே பெண்ணின் கண்ணீருக்கு அவமானத்தையும், உதாசீனத்தையும் பரிசளித்துவிடுகின்றனர்.
இந்த உலகம் இப்படி தான். ஆக அன்புக்கு ஏங்கி வெளியே சென்று வம்புக்கு ஆளாகாதீர் பெண்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக