பகுதி - 44
ஆண்மை எனப்படுவது யாதெனில்...
ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும். ஆண்மை என்றால் என்ன? ஒரு வாட்சப் க்ரூப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான பெண்களுக்கு பதில் தெரியவில்லை.
பெண் என்பவளின் மீது எப்படி தாய்மை,புனிதம், கருணை, அடக்கம் போன்ற இத்யாதி இத்யாதி பிம்பங்களை கட்டமைத்து வைத்து இருக்கிறோமோ,
அதே போல் ஆண் என்றால் பலமானவனாகவும், தைரியமானவனாகவும், பெண்களுக்கு பாதுகாவலனாகவும் இன்னும் பற்பல பிம்பங்கள் வகுத்து வைத்து இருக்கிறோம்.
ஆண் என்றால் பெண் துன்பத்தில் இருக்கையில் அவளை காப்பாற்றுவது அவனது தலையாய கடமை என்பதை போன்றே, காலங்காலமாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆண் அழக்கூடாது. ஆண் இருட்டுக்கு பயப்பட கூடாது. இப்படி துவங்கி அவன் மீது பொருளாதார சுமையும், வெளி உலகை எதிர்கொள்ளும் திறனையும் அவனுக்கே உரியதாக விட்டுவிட்டோம்.
ஆக ஆண் பலமானவன், பெண் பலவீனமானவள், இவளை காக்கவே அவன் அவதரித்ததாய் ஒரு உணர்வை சமூக சூழல்கள் அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது.
ஒரு ஆண் படித்து முடித்து விட்டால் அவனுக்கு அடுத்தது எந்த வேலைக்கு சென்றாக வேண்டும் என்ற சமூக அழுத்தம் உள்ளது. பெண் படித்து முடித்தால் வேண்டும் என்றால் வேலைக்கு செல்லலாம், வேண்டாம் என்றால் வீட்டில் அமரலாம். திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம். கணவன் நல்லவனாக இருந்தால் போதும் நிம்மதியாக தூங்கி எழுந்திருச்சு நிம்மதியாக இருக்க கூடிய வாய்ப்பு அவளுக்கு உள்ளது.
ஆண் மட்டும் வேலைக்கு சென்று கொண்டிருக்கையில் ஆணுக்கான வேலை வாய்ப்புகள் இன்னொரு ஆணால் மட்டுமே தட்டி பறிக்கப்பட்டன. தற்போது ஜனத்தொகை பெருக்கத்தினாலும், பெண்களும் விழிப்படைந்த காரணத்தினால் ஒரு வேலை இடத்திற்கு ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள். ஒரு உண்மையை சொல்ல போனால் பெண்களுக்கு இருக்கும் பொறுமைக்கும், திறமைக்கும் பெரும்பாலும் பெண்களுக்கே வாய்ப்புகள் கிடைக்கின்றன.
பெண் கல்வி, பெண் சுதந்திரம் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆணின் மேல் வைத்துள்ள சூப்பர்மேன் பிம்பங்களை சமூகமும், பெண்களும் சற்று தளர்த்திக் கொள்ள வேண்டும். அவனும் உன்னைப் போலவே உயிரும் உணர்வும் உள்ள மனிதன் என்பதை உணரத்தலைப்பட வேண்டும்.
குழந்தை பிறப்பை தவிர்த்து ஆணுக்கும், பெண்ணுக்கும் எங்கேயும் பாலின வேறுபாட்டை நாம் புகுத்துதல் ஆகாது. உங்கள் ஆண் குழந்தைக்கு கற்று தர விரும்பும் அத்தனையும் உங்கள் பெண் குழந்தைக்கும் கற்று தாருங்கள். உங்கள் பெண் குழந்தைக்கு கற்று தரும் வீட்டு வேலைகள் அனைத்தையும் உங்கள் ஆண் குழந்தைக்கும் கற்று தாருங்கள். துடைப்பம் அவர்கள் பெருக்கினால் பெருக்காதா? தோசை மாவு அவர்கள் சுட்டால் இடியாப்பம் ஆகிவிடுமா? கற்று கொள்ளட்டும்.
ஆண் மனம் வெதும்புகையில் அவனை அழ விடுங்கள். துவண்டு போகின்றானா? தோள் கொடுங்கள். ஆண் குழந்தை அழக் கூடாது என்று அவனை கடினமாக்காதீர்கள். துன்பத்தில் துணைக்கு நில்லுங்கள்.
கிருஷ்ணன் கதைகள் எல்லாம் கதையின் சுவாரசியத்திற்காக அவரவர்கள் வேண்டியளவு ஏற்றி சொன்ன புனை கதைகள். வாழ்ந்தவனை புகழ சொன்னால் நமக்கா புகழ தெரியாது. கிருஷ்ணன் என்று. சொன்னாலே மனம் மயங்கி சரியும் அளவிற்கு நிதர்சனங்கள் அல்லாத ஆயிரம் புனை கதைகளை சேர்த்து கூறப்பட்டுள்ளது. ஜம்பது சதவீதம் அவை நிஜமாக இருக்கலாம். ஆனால் மொத்தமும் முழுமையே என்றெண்ணி அவனை சாதாரண மனிதர்களிடம் தேடிக் கொண்டிருக்கிறோம்.
பெண்களுக்கு புனித பிம்பம் என்றால், ஆண்களுக்கு ஆகாஸ சூரன் என்ற பிம்பம் தேவை.
ஆண் என்றால் ஆளுமை, பெண் என்றால் அடக்கம்(அடிமை) என்று யார் எழுதி வைத்தார்கள்.
ஆண் பெண் இருவரும் நன்கு படித்து வேலைக்கு செல்ல ஆசைப்பட்டால் போகட்டுமே. ஆனால் வீட்டு வேலையும் இருவரும் பகிர்ந்து செய்திடல் வேண்டும்.
அதே போல பெண் வேலைக்கு சென்று ஆண் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக இருந்தால் என்ன குறைந்துவிட போகிறது. அதுவும் அழகு தானே. இன்னும் சொல்லப் போனால் பெண்ணை விட ஆண் ஹவுஸ் ஹஸ்பெண்டாக அனைத்து வேலைகளையும் சுணக்கம் இன்றி செய்யக் கூடிய திறமைமிக்கவர்களே.
பெண் ஹவுஸ் மேக்கர் என்பதையே தரைகுறைவாக பார்க்க பேச ஆரம்பித்துவிட்ட காலக்கட்டத்தில் ஹவுஸ் ஹஸ்பெண்டா? இப்பவே பத்துகாசுக்கு மதிக்கமாட்டென்கிறார்கள் என்று ஒரு சிலர் கூக்குரல் இடுவது கேட்கிறது.
வேலைக்கு செல்லும் பெண்ணாகவும் இருந்திருக்கிறேன். வீட்டிலிருந்து வீட்டு வேலைகளை மட்டும் செய்யும் பெண்ணாகவும் இருந்திருக்கிறேன். வீட்டில் இருந்தால் சும்மா காலாட்டிக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டிருப்பதாக நம்புகிறது ஒரு உலகம். வீட்டு வேலைகளையே ஒவ்வொரு நாளும் நாலு சுவற்றை பார்த்துக் கொண்டு இடுப்பொடிய வேலை செய்து அதற்கு ஒத்த பைசாவும் வாங்காமல் இருப்பது தான் இருப்பதிலேயே கடினமான வேலை.
அவர்கள் விரும்பினால் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கட்டும். தவறில்லை. ஏளனம் செய்வதற்கும் ஏதும் இல்லை. எனக்கு தெரிந்த சில ஜோடிகள் இப்படி சந்தோஷமாகவே இருக்கின்றனர்.
உத்யோகம் புருஷ லட்சணம், ஆண் பிள்ளை அழ கூடாது. இப்படி எல்லாம் பற்பல பழமொழிகளை சொல்லி சொல்லி சம உணர்வோடு வாழ வேண்டியவர்களை கெடுத்து வைத்திருக்கிறது இச்சமூகம்.
ஆண் என்றால் என்ன என்ற கேள்விக்கு என்னுடைய பதில் இது தான். ஆண் என்பவன் பெண்களும் தன்னை போல சக உயிரி தான், அவர்களுக்கும் நம்மை போல் சந்தோஷமாக, சுதந்திரமாக இருக்க, செயல்பட உரிமை இருக்கின்றது என்பதை உணர்நதவனாக இருக்க வேண்டும்.
என் பெண்டாட்டி வேலைக்கும் போறா, வீட்டு வேலையும் செய்யறா, குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறாள், படிக்க வைக்கிறாள்,நான் அப்படியே வேலைக்கு சென்று வந்துவிட்டு அரசியல், சினிமா, நண்பர்கள், ஆன்லைனில் மன்மதனாக வலம் வந்து கொண்டு she is one of the most humble woman in the world என்று மார்த்தட்டி கொள்ளாதீர்கள். நீங்கள் என்ன தான் பலம் பொருந்தி இருந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இருந்த போதும், பெண்ணின் மீது அத்தனை சுமைகளையும் சுமத்தி விட்டு வாழ்தல் என்பது ஆண்மையற்றத்தனம்.
ஆண்மை எனப்படுவது யாதெனில் பெண்ணும் தனக்கு சமமான பலம் பொருந்தியவள், சந்தோஷமாக வாழ தகுதியானவள் என்பதை உணர்வதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக