#சருகுகளின்_சபலங்கள்
பகுதி- 40
தலைப்பு: நெருஞ்சி முள்
#வணக்கமும்பையில் எனது இந்த வார பதிப்பு.
சில பெண்களோட வாழ்க்கை பிரச்சினைகள் இல்லாதது. அப்பா அரவணைத்து பாதுகாத்து வளர்த்து, அண்ணன் தம்பிகளது அரவணைப்பில் வளர்ந்து, பின் கணவன் அரவணைப்பில் வாழ்ந்து, பின் பிள்ளைகள் என்று வாழ்வு ராணியை போன்று வாழ்ந்து முடித்துவிடுவார்கள்.
ஆனால் சில பெண்களுடைய வாழ்க்கையோ போராட்டமானது. குடிகார ஆணாதிக்க தற்குறி அப்பனுக்கு பிறக்கும் பெண் பிள்ளைகளின் வாழ்வு எப்படியாப்பட்ட கொடூரமானது, எத்தனை வலிமிக்கது, எத்தனை சாபம் நிறைந்தது என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
ஒரு தற்குறி அப்பனுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பெரிய மதிப்பு இருக்காது. தாய் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு பிள்ளைகளுக்காக உழைப்பவளாக இருக்கும் பட்சத்தில் ஓரளவு தற்குறி கணவனின் எல்லா தவறுகளையும் சமூகத்தில் மறைத்து வாழும் குடும்பத்தில் ஒருவாறு சமூக அந்தஸ்து பாழ்படாமல் இருக்கும். ஆனால் குடும்பத்திற்குள் வாழும் பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடிய மனச்சிக்கல்களை உலகிற்கு மறைத்து வைப்பதனால் மட்டும் தீர்த்திட முடியாது.
பெரும்பாலான பிள்ளைகள் தத்தமது தந்தையை புகழ்ந்து துதி பாடிக் கொண்டிருக்கும் உரையாடலில் அப்பிள்ளைகளின் அழுகுரல்கள் சன்னமாய் யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே தேம்பிக் கொண்டிருக்கும். ஏன்பா மத்த அப்பா போல இல்லை என்று. அதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த சந்தோஷ் கூட்டத்தில் இருந்து அவர்கள் காணாமல் போயின கொண்டிருப்பார்கள். தந்தையே இல்லாமல் போய்விடுவது வேறு. கேடுகெட்ட தந்தையை பிரிந்திருப்பது வேறு. அந்த பிள்ளைகளுக்கு அப்பா இல்லை என்ற கவலையைத் தவிர்த்த எந்த மனசிக்கலும் ஏற்படப் போவதில்லை.
வீட்டில் தினம் தினம் தன் தந்தையிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தன் தாயை கண்டு வளரும் பிள்ளையின் மனநிலையைப் பற்றி சந்தோஷமாக வாழும் சமூகம் யோசித்து இருக்குமா என்று தெரியாது. அவர்களுக்கு ஏற்படும் மனசிக்கல்கள் சமூகத்தில் அவர்களை சுமூகமாக இணைந்து வாழ விடாது.
அவர்கள் மற்ற பிள்ளைகளைப் போல சாதாரண வாழ்க்கையை வாழவில்லை. ரண வாழ்க்கையை காயங்களில் கத்தியால் எழுதும் கவிதையை போன்றதொரு தவ வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரச்சினையில் முதலில் அவர்கள் மனம் சிதைபடுவது பொருளாதார ரீதியாகவும், பிற்பாடு மனோ ரீதியாகவும். அம்மா சேரத்து வைத்திருக்கும் நகை, நட்டு, பாத்திரம், சேமிப்பு வரை திருடிக் கொண்டு போய் குடிப்பதற்கும், சீட்டாடுவதற்கும், பெண்களுக்கு செலவழிப்பதற்கும் செலவிடும் ஒரு தந்தையால் அந்த குடும்பம் எந்தளவிற்கு பொருளாதார ரீதியாக துன்புறும் என்று வரையறுத்துக் கூற முடியாது. அதையும் தாண்டி சேற்றில் பிறந்த செந்தாமரையைப் போல கஷ்டப்பட்டு படித்து முன்னேறும் அக்குடும்பத்து குழந்தைகள்.
ஒரு தற்குறி ஆணுக்கு பிறக்கும் ஆண் பிள்ளை ஒன்று அவனைப் போலவே தற்குறியாக வளரலாம் அல்லது தந்தைக்கு நேர் எதிர்மாறாக பொறுப்புள்ளவனாகவும் வளரலாம், அல்லது மந்த புத்தியுள்ளவனாக தத்தியாகவும் வளரக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. அது சூழலை பொறுத்தது.
ஆனால் தற்குறி ஆணுக்கு பிறக்கும் பெண்ணின் மனோநிலை அதிகம் பாதிக்கப்படும். ஏனென்றால் அவள் இந்த உலகை முதன் முதலில் பார்க்கும் ஆண் அவள் தந்தை. உளவியல் ரீதியாக பெண்ணுக்கு அவள் தந்தையுடனான உறவும், ஆணுக்கு அவன் தாயுடனான உறவும் அத்தனை முக்கியம்.
தாய் சரியில்லாமல் வளர்ந்த ஆணும் தந்தை சரியில்லாமல் வளர்ந்த பெண்ணும் நிரந்தரமாக காதல் உறவிற்குள் வாழ்வது அத்தனை சாத்தியமல்ல. ஒரு உறவிற்குள் இணைந்து வாழ யாராவது ஒருவர் சமநிலையில் இருந்தாக வேண்டும் அல்லவா.
அப்படிபட்ட சூழலில் படித்து சம்பாதித்து தன் காலில் நிற்கும் பெண்ணுக்கு நல் துணை அமைந்துவிட்டால் பரவாயில்லை. முற்பகுதி துன்பம், பிற்பகுதி இன்பம் என்று வாழ்க்கை சந்தோஷத்தை நோக்கி முன்னேறிவிடும்.
ஆனால் திருமண வாழ்வும் சிதிலமடைந்துப் போகையில் அவள் விக்கித்து போகிறாள். கணவன் சோம்பேறியாகவும், சொல் பேச்சு கேளாதவனாகவும், முட்டாளாகவும் இருக்கும் பட்சத்தில் அவள் குடிகாரனை கட்டிக் கொண்ட தன் தாயின் நிலைமையை விட இரு மடங்கு உழைப்பை குடும்பத்திற்குள் கொட்டியாக வேண்டியதிருக்கும். ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராக மாறி போய் இருக்கும்.
ஆண் குடிக்காதது மட்டுமே அவன் தகுதி ஆகிவிடாது. சோம்பேறித்தனமும், முட்டாள்த்தனமும் நிறைந்த ஆண் தான் குடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மட்டுமே பிறரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாது.
குடிகாரனுக்கு சமமானவன் முட்டாள்த்தனமும் மூடத்தனங்களும் நிறைந்த சோம்பேறி.
ஆக இரண்டாம் தோல்வியில் அவள் மனோபலமற்றவளாகிறாள். புற உலகிற்கு தனை எஃகென காண்பித்துக் கொண்டாலும், அவள் அக உலகம் குழைந்து ஆணின் அன்பிற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்.
ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு அவளுக்கு ஒரு ஆதரவு தேவைப்படும்.
ஆனால் கடந்து வந்த பாதையும் ஆண்களும் அவர்களை நம்பி அவள் நேசிக்க இயலாத அளவு மனத்தடையோடு இருப்பாள்.
எல்லா பெண் குழந்தைகளுமே தன் தந்தை போன்ற ஒருவனையே நேசிக்க விரும்பும். நல் தந்தையின் வழி வந்தவளுக்கு நல்லவன் எவனஎன அறிந்து தேர்ந்தெடுக்கும் தெளிவு இருக்கும். தெரியாத்தனமாக தவறான தேர்வாக இருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளக் கூடிய மனோநிலையும் தைரியமும், குடும்பத்தின் ஆதரவும் இருக்கும்.
எல்லா இடங்களிலும் அடிபட்டு வந்த பெண்ணுக்கோ நல்லவனை கெட்டவனெனவும், கெட்டவனை நல்லவனெனவும் தப்பிதமாக பரிபூரணமாக கண்மூடித்தனமாக அவனை நம்பித் தொலைக்கும்.
அவனோ காரியமே கண்ணாயிரமாக என்ன தேவையோ அதை முடித்தபின்பு தயவு தாட்சண்யமின்றி கழட்டிவிட்டுப் போய்விடுவான்.
அவள் அன்பிற்கு ஏங்கி தன்னை தந்திருப்பாள். ஆணை மயக்க தெரியாத அவள் வெறும் உடலாய், உடைமையாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியபட்டிருப்பாள்.
அவளுக்கு கடைசிவரை அந்த தூய்மையான, பரிபூரணமான உனக்கு நான் என்றும் பக்கபலமாக இருப்பேன் இருக்கிறேன் என்ற அன்பு மட்டும் அவள்களுக்கு எப்போதும் கிட்டுவதேயில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக