ஞாயிறு, 29 அக்டோபர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி- 40 தலைப்பு: நெருஞ்சி முள்

#சருகுகளின்_சபலங்கள் 

பகுதி- 40

தலைப்பு: நெருஞ்சி முள்

#வணக்கமும்பையில் எனது இந்த வார பதிப்பு.

சில பெண்களோட வாழ்க்கை பிரச்சினைகள் இல்லாதது. அப்பா அரவணைத்து பாதுகாத்து வளர்த்து, அண்ணன் தம்பிகளது அரவணைப்பில் வளர்ந்து, பின் கணவன் அரவணைப்பில் வாழ்ந்து, பின் பிள்ளைகள் என்று வாழ்வு ராணியை போன்று வாழ்ந்து முடித்துவிடுவார்கள். 

ஆனால் சில பெண்களுடைய வாழ்க்கையோ போராட்டமானது. குடிகார ஆணாதிக்க தற்குறி அப்பனுக்கு பிறக்கும் பெண் பிள்ளைகளின் வாழ்வு எப்படியாப்பட்ட கொடூரமானது,   எத்தனை வலிமிக்கது, எத்தனை சாபம் நிறைந்தது என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

ஒரு தற்குறி அப்பனுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பெரிய மதிப்பு இருக்காது. தாய் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு பிள்ளைகளுக்காக உழைப்பவளாக இருக்கும் பட்சத்தில் ஓரளவு தற்குறி கணவனின் எல்லா தவறுகளையும் சமூகத்தில் மறைத்து வாழும் குடும்பத்தில் ஒருவாறு சமூக அந்தஸ்து பாழ்படாமல் இருக்கும். ஆனால் குடும்பத்திற்குள் வாழும் பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடிய மனச்சிக்கல்களை உலகிற்கு மறைத்து வைப்பதனால் மட்டும்  தீர்த்திட முடியாது. 

பெரும்பாலான பிள்ளைகள் தத்தமது தந்தையை புகழ்ந்து துதி பாடிக் கொண்டிருக்கும் உரையாடலில் அப்பிள்ளைகளின் அழுகுரல்கள் சன்னமாய் யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே தேம்பிக் கொண்டிருக்கும். ஏன்பா மத்த அப்பா போல இல்லை என்று. அதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த சந்தோஷ் கூட்டத்தில் இருந்து அவர்கள் காணாமல் போயின கொண்டிருப்பார்கள். தந்தையே இல்லாமல் போய்விடுவது வேறு. கேடுகெட்ட தந்தையை பிரிந்திருப்பது வேறு.  அந்த பிள்ளைகளுக்கு அப்பா இல்லை என்ற கவலையைத் தவிர்த்த எந்த மனசிக்கலும் ஏற்படப் போவதில்லை. 

வீட்டில் தினம் தினம் தன் தந்தையிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தன் தாயை கண்டு வளரும் பிள்ளையின் மனநிலையைப் பற்றி சந்தோஷமாக வாழும் சமூகம் யோசித்து இருக்குமா என்று தெரியாது. அவர்களுக்கு ஏற்படும் மனசிக்கல்கள் சமூகத்தில் அவர்களை சுமூகமாக இணைந்து வாழ விடாது. 

அவர்கள் மற்ற பிள்ளைகளைப் போல சாதாரண வாழ்க்கையை வாழவில்லை. ரண வாழ்க்கையை காயங்களில் கத்தியால் எழுதும் கவிதையை போன்றதொரு தவ வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரச்சினையில் முதலில் அவர்கள் மனம் சிதைபடுவது பொருளாதார ரீதியாகவும், பிற்பாடு மனோ ரீதியாகவும். அம்மா சேரத்து வைத்திருக்கும் நகை, நட்டு, பாத்திரம், சேமிப்பு வரை திருடிக் கொண்டு போய் குடிப்பதற்கும், சீட்டாடுவதற்கும், பெண்களுக்கு செலவழிப்பதற்கும் செலவிடும் ஒரு தந்தையால் அந்த குடும்பம் எந்தளவிற்கு பொருளாதார ரீதியாக துன்புறும் என்று வரையறுத்துக் கூற முடியாது. அதையும் தாண்டி சேற்றில் பிறந்த செந்தாமரையைப் போல கஷ்டப்பட்டு படித்து முன்னேறும் அக்குடும்பத்து குழந்தைகள்.

ஒரு தற்குறி ஆணுக்கு பிறக்கும் ஆண் பிள்ளை ஒன்று அவனைப் போலவே தற்குறியாக வளரலாம் அல்லது தந்தைக்கு நேர் எதிர்மாறாக பொறுப்புள்ளவனாகவும் வளரலாம், அல்லது மந்த புத்தியுள்ளவனாக தத்தியாகவும் வளரக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. அது சூழலை பொறுத்தது.

ஆனால் தற்குறி ஆணுக்கு பிறக்கும் பெண்ணின் மனோநிலை அதிகம் பாதிக்கப்படும். ஏனென்றால் அவள் இந்த உலகை முதன் முதலில் பார்க்கும் ஆண் அவள் தந்தை. உளவியல் ரீதியாக பெண்ணுக்கு அவள் தந்தையுடனான உறவும், ஆணுக்கு அவன் தாயுடனான உறவும் அத்தனை முக்கியம். 

தாய் சரியில்லாமல் வளர்ந்த ஆணும் தந்தை சரியில்லாமல் வளர்ந்த பெண்ணும் நிரந்தரமாக காதல் உறவிற்குள் வாழ்வது அத்தனை சாத்தியமல்ல. ஒரு உறவிற்குள் இணைந்து வாழ யாராவது ஒருவர் சமநிலையில் இருந்தாக வேண்டும் அல்லவா.

அப்படிபட்ட சூழலில் படித்து சம்பாதித்து தன் காலில் நிற்கும் பெண்ணுக்கு நல் துணை அமைந்துவிட்டால் பரவாயில்லை. முற்பகுதி துன்பம், பிற்பகுதி இன்பம் என்று வாழ்க்கை சந்தோஷத்தை நோக்கி முன்னேறிவிடும். 

ஆனால் திருமண வாழ்வும் சிதிலமடைந்துப் போகையில் அவள் விக்கித்து போகிறாள். கணவன் சோம்பேறியாகவும், சொல் பேச்சு கேளாதவனாகவும், முட்டாளாகவும் இருக்கும் பட்சத்தில் அவள் குடிகாரனை கட்டிக் கொண்ட தன் தாயின் நிலைமையை விட இரு மடங்கு உழைப்பை குடும்பத்திற்குள் கொட்டியாக வேண்டியதிருக்கும். ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராக மாறி போய் இருக்கும்.

ஆண் குடிக்காதது மட்டுமே அவன் தகுதி ஆகிவிடாது. சோம்பேறித்தனமும், முட்டாள்த்தனமும் நிறைந்த ஆண் தான் குடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மட்டுமே பிறரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாது. 

குடிகாரனுக்கு சமமானவன் முட்டாள்த்தனமும்‌ மூடத்தனங்களும் நிறைந்த சோம்பேறி. 

ஆக இரண்டாம் தோல்வியில் அவள் மனோபலமற்றவளாகிறாள். புற உலகிற்கு தனை எஃகென காண்பித்துக் கொண்டாலும், அவள் அக உலகம் குழைந்து ஆணின் அன்பிற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்.

ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு அவளுக்கு ஒரு ஆதரவு தேவைப்படும். 

ஆனால் கடந்து வந்த பாதையும் ஆண்களும் அவர்களை நம்பி அவள் நேசிக்க இயலாத அளவு மனத்தடையோடு இருப்பாள்.

எல்லா பெண் குழந்தைகளுமே தன் தந்தை போன்ற ஒருவனையே நேசிக்க விரும்பும். நல் தந்தையின் வழி வந்தவளுக்கு நல்லவன் எவனஎன அறிந்து தேர்ந்தெடுக்கும் தெளிவு இருக்கும். தெரியாத்தனமாக  தவறான தேர்வாக இருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளக் கூடிய மனோநிலையும் தைரியமும், குடும்பத்தின் ஆதரவும் இருக்கும்.
  
எல்லா இடங்களிலும் அடிபட்டு வந்த பெண்ணுக்கோ  நல்லவனை கெட்டவனெனவும், கெட்டவனை நல்லவனெனவும் தப்பிதமாக பரிபூரணமாக கண்மூடித்தனமாக அவனை நம்பித் தொலைக்கும். 

அவனோ காரியமே கண்ணாயிரமாக என்ன தேவையோ அதை முடித்தபின்பு தயவு தாட்சண்யமின்றி கழட்டிவிட்டுப் போய்விடுவான். 

அவள் அன்பிற்கு ஏங்கி தன்னை தந்திருப்பாள். ஆணை மயக்க தெரியாத அவள் வெறும் உடலாய், உடைமையாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியபட்டிருப்பாள். 

அவளுக்கு கடைசிவரை அந்த தூய்மையான, பரிபூரணமான உனக்கு நான் என்றும் பக்கபலமாக இருப்பேன் இருக்கிறேன் என்ற அன்பு மட்டும் அவள்களுக்கு எப்போதும் கிட்டுவதேயில்லை.

ஏமாற்றத்தில் அழன்று உழன்று பிற்பாடு வேறு வழியின்றி சபலபுத்தி உடையவர்களை குத்தி கிழிக்கும் நெருஞ்சி முள்ளாகிறாள்.

செவ்வாய், 24 அக்டோபர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 39 எட்டி நில்லுங்கள்

சருகுகளின்_சபலங்கள் 

பகுதி - 39

எட்டி நில்லுங்கள்

வணக்கம்மும்பையில் எனது இந்த வார பதிப்பு 

பெண் ஏமாறுவது மட்டும் இல்லாமல் அதற்கான தண்டனையையும் அவள் மட்டுமே அதீதமாய் பெறுகிறாள். 

உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும்.

உடலளவில் என்கையில் அவள் தாய்மை ஆகும் வாய்ப்பும் மனதளவில் எப்போது ஒருவனுக்கு தன்னை ஆள அனுமதிக் கொடுக்கிறாளோ அப்போதிலிருந்து அவனை முழுமையாக நம்ப ஆரம்பிக்கிறாள். ஆக பிரிவென்று வருகையில் ஆணை விட பெண் அதிகம் தவிக்கிறாள், துவண்டு போகிறாள், தன் உயிரையும் நீக்கவும் துணிகிறாள்.

ஆணின் காதலும் தேடலும் பெண் உடல் கிடைத்து அவன் இச்சை அடங்கும் வரை தான். அவள் மனம் இசைந்து உடல் கிடைக்க அவள் பின்னே நா*யாய் பே*யாய் பலர் பார்க்க லச்சையின்றி திரியவும் செய்வான். 

இதில் அவனுக்கு திருமணமாகிவிட்டது, அவளுக்கு திருமணமாகிவிட்டது என்ற எந்த ஒரு காரணம் இருந்தாலும் கூட அவனுக்கு தேவை என்றால் அவை இரண்டாம் பட்சம் தான்.

இத்தனை கொண்டாடுகிறானே, இத்தனை அன்பு செலுத்துகிறானே, இத்தனை ஆதூரமாக துன்பக்காலங்களில் எவர் நிற்பதற்கு முன்பும் பக்கபலமாக நிற்கின்றானே என்ற நம்பிக்கையில் அவள் அவளை தன்னை மீறி தர தயாராவள். 

இருந்தாலும் பற்பல தயக்கங்கள் அவனிடம் இருந்து அவள் ஒதுங்கி நிற்பாள். இந்த ஒதுக்கத்தை அவள் விலகலை உடைக்க வேட்டை குணம் கொண்ட ஆணுக்கு பிடிக்கும். தானாய் தரும் பெண்ணை விட முரட்டுத்தனமாய் மறுக்கும் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்று அவளை வீழ்த்துவதும்  பயன்படுத்திவிட்டு அவளை அவமானத்திற்குள் தள்ளும் அந்த பழக்கமும் வேட்டைக்குணம் கொண்டவர்கள் தான் பெரும்பாலான ப்ளே பாய் ஆண்கள் என்கிறது உளவியல். 

ஆணும் பெண்ணும் சமமா? 

ஆணும் பெண்ணும் சமமில்லை. உடல் அளவிலும் மனதளவிலும்.

மனசாட்சியும் மனிதாபிமானமும் அற்ற ஆணின் உடல் இச்சை பெண் உடல் கிடைத்ததும் தணிந்துவிடும். அதிலும் உரிமையற்ற இடத்தில் இருந்து கிட்டிய இன்பத்தை தந்தவளை தவறானவளாக எண்ண செய்யும்.

ஆனால் பெண்ணுக்கோ அப்படியில்லை, மனமுவந்து தன்னை தந்தவன் அவளுக்கு தலைவனாக காட்சியளிப்பான். மனம் அவனுக்கு அடிமையாகும். 

அவள் வீம்பை வலிய போய் தளர்த்தியவனுக்கு அவள் அடிமைப்பட்டு காலடியில் கிடப்பதென்பது காலை சுற்றிய பாம்பென நினைக்கத் தோன்றும். விளைவு அவன் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுவான். அவள் இன்னும் அவன் கிட்டுவதற்காய் எத்தனை அவமானங்களை வேண்டுமானால் பொறுத்துக்கொள்ள தயாராவாள். 

அவனை பொறுத்தவரை அவள் மூன்றாமவன் பெண்டாட்டி, பொழுதுபோக்குக்காக தொட்டுக்கொண்டவள். கணவனை விட்டு தன்னிடம் வந்தது போல் இன்னொருவனிடமும் செல்ல தயாராக இருப்பாள் என்ற எண்ணத்தில் உதாசீனம் செய்வான். 

தாங்க முடியாமல் நீங்கள் எல்லை மீறி அவனிடம் அடம்பிடிக்கையில் பலர் முன்னிலையில் பலவிதமாக அவமானப்படுத்தி, தோழி என்று நினைத்து பழகியதை தவறாக உணர்ந்துக் கொண்டதாகவும், கைப்பிடித்து இழுத்ததாகவும், இச்சைக்கு அவிழ்த்து காண்பித்து அழைத்ததாகவும், அவதூறுகளும் பிறர் வசைகளும் உங்களுக்கு பரிசாக கிட்டும்.

இவளோ தன்னை பலர் முன்பு பாராட்டியவன், தலை மீது வைத்து கொண்டாடியவன் கீழ்த்தரமாக நடத்துகிறானே என்று குமையும். 

அவனுக்கு நீங்கள் தேவைப்பட்ட போது  நீங்கள் அவனை கண்டுக்கொள்ளாமல் தயங்கி நின்றீர்கள். அதை ஆணின் மனம் திமிர்த்தனமென என்று எண்ணிக் கொள்ளும். உங்களை வீழ்த்திய பின்பு உங்கள் மீதான வியப்புகள் எல்லாம் வெகுசாதாரணமாய் தோன்றிடும். ஆக அவன் அடுத்த வேட்டைக்கு இரை தேட ஆரம்பித்து வேறு யாரையாவது கொண்டாட போய்விடுவான். ஆக உங்களை கொண்டாடும் ஆண்களை நட்புறவில் இருந்து ஒரு அடி கூட உங்கள் அந்தரங்கத்தை நோக்கி முன்னேற அனுமதியாதீர்கள்.

நண்பனாய் லகு தன்மையோடு பழகும் பல ஆண்கள் உங்கள் அந்தரங்கத்தில் அனுமதித்த பின் வேறொரு முகம் காட்டுவர். அதில் இருந்து மீண்டு வருவதற்குள் உங்களின் இளமையின் பெரும்பகுதியை சந்தோஷமாக வாழ வேண்டிய  பெரும்பான்மையான பகுதியை துக்கத்தில்  தொலைத்திருப்பீர்கள்.

பெண்களுக்கு ஒன்றே ஒன்று தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். திருமண பந்தத்தில் கிட்டாத காதலோ, காமமோ வேறு எதன் மூலம் கிட்டினாலும் உங்களுக்கு மட்டுமே அவமானம். ஆணை பொருத்தவரை அதை அவர்கள் கவுரவமாகவே கருதிக் கொள்கின்றனர். நீங்கள் மட்டுமே அவதூறுகளை வசைகளை அதிலும் சக பெண்களின் வசைகளை அதிகமாய் கேட்க வேண்டியதிருக்கும்.

சபலபுத்தி உடையவர்களிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு எட்டி நில்லுங்கள். அன்றேல் உங்கள் வாழ்வு சருகுகளாய் உதிர்ந்து போய்விடும்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

காமம் இயல்பானது மின்மினி இதழ்

#காமம்_இயல்பானது

#மின்மினி இதழ்

உயிர்களின் உருவாக்கமே காமம் தானே.

காமமின்றி உயிர்கள் உருவாகிட இயலுமா.

காமம் என்பது இயல்பானது. திருமண பந்தத்திற்குள்ளேயே அனைவருக்கும் காமம் கிட்டிவிடுவதில்லை. திருமணமே செய்துக் கொள்ளாதவருக்கு அது கிட்டாமல் போவதும் இல்லை. உளவியல் சித்தாந்தத்தில் காமம் வயிற்று பசி உணர்விற்கு அடுத்ததாக கூறப்படுகிறது. Maslow hierarchy theoryயில் அதற்கு பிறகு தான் அத்தனை உணர்வுகளுமே. 

உயிர்கள் தோன்றுவது அதில் தான் என்கையில் காமத்தை ஏன் அசிங்கமா பார்க்கணும். இயல்பா பாருங்கள். திருமணம் தாண்டிய உறவுகள் உயிர் தோன்றிய காலந்தொட்டே இருப்பது தான். திருமணம் என்ற கலாச்சாரமே இடையில் தோன்றியது தான். 

அடுத்தவன் அந்தரங்கம் வெளி வந்துடுச்சுன்னா போதும்... தன் பத்தினித்தன்மையை காண்பித்துக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள் இழிமனிதர்கள். 

நீங்க தப்பே செய்யலைன்னா உங்களுக்கு போதுமானளவு இருக்கும் இடத்திலேயே கிடைக்கின்றது என்று பொருள் அல்லது கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஆணோ பெண்ணோ தன் இணையை தாண்டி காதல் வசப்படுவது இயல்பு தான். It's quite natural. அதின் நன்மை தீமைகளின் அளவிட்டு ஆறறிவு உடைய மனிதர்கள் தன்னை தான் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். உணர்ச்சிவசப்படுபவர்கள் தடுமாறிவிடுகின்றனர்.
கட்டுப்படுத்திக் கொள்ளும் உள்ளம் மன உள உளவியல் சிக்கல்களில் சிக்குண்டு சிடுக்குண்டு சிதறுகின்றது. இன்னிக்கு மனநல ஆலோசனை கூடங்கள் பெருகிவிட்டதற்கான காரணம் அது தான்.

ஒருவரை மற்றொருவரை பலவந்தபடுத்தாமல் இருபாலரும் ஒத்துப்பட்டு வரும் காமத்தில் தவறில்லை. இருவரில் ஒருவர் விலகுகையில் இருவரில் ஒருவர் மற்றவரை எமோஷனல் அபியூஸ் செய்வதும், stalking செய்வதும், பெயரை கெடுக்க அந்தரங்க நேரத்து சம்பாஷணைகளையும் போட்டோக்களையும், வீடியோக்களையும் அவமானப்படுத்த வெளியிடுவது தான் தவறு.

அதை விட மாபெரும் தவறு என்ன தெரியுமா? அடுத்தவங்க அந்தரங்கம்னு தெரிஞ்சும் புள்ளி வச்சு வீடியோ கேட்பதும் எதிர்கட்சி மனிதர் தவறு செய்திருந்தார் என்று தெரிந்தால் அதை உபயோகப்படுத்தி தன் வக்கிரத்தை கக்குவதும் தான்.

சங்கிங்க சங்கிங்கனு கிண்டல் பண்ணிட்டு நீங்களும் அதை விட கேடுகெட்ட எச்சைத்தனத்தை தானே பண்ணிட்டு இருக்கீங்க பெரியாரிஸ்டுகளா...

சருகுகளின் சபலங்கள் பகுதி - 38 புதிய சமுதாயம் உருவாகட்டும்

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 38

புதிய சமுதாயம் உருவாகட்டும்


காலங்காலமாக முன்னோர்கள் வழியில் அவர்கள் வளர்ந்த வாழ்ந்த முறைமைகளை கேட்டு அவர்கள் அனுபவ அறிவை வைத்து வளர்ந்து வந்த சமூகம் நம்முடையது. தற்காலத்து பிள்ளைகளிடம் மாபெரும் கலாச்சார மாற்றத்தை காண முடிகிறது. 

பழங்கதைகள், அனுபவ கதைகள் பேசினாலே அவர்கள் பூமர் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. கலாச்சாரம், கட்டுபாடுகள் போன்ற நாம் வளர்ந்த வாழ்வியல் முறைகளை தவிடுபொடியாக உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறையினர் சமூகம் என்ன சொல்லிவிடுமோ என்ற பயத்திலேயே வளர்ந்த தலைமுறை நாம். நம் வாழ்க்கையை நாம் நம் விருப்பப்படி வாழ்ந்தோமா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே கூற முடியும். ஆசிரியருக்கு பயந்து, சுற்றத்தாருக்கு பயந்து, பெற்றோர்களுக்கு அடங்கி ஒடுங்கி தன் இச்சைகளை மறைத்து வைத்து செய்துக் கொண்டிருந்த தலைமுறையினர் நாம்.

 இப்போதைய பிள்ளைகள் தெளிவாகவே இருக்கின்றார்கள். எதுக்கு நான் பயப்படணும், ஏன் பயப்படணும் என்ற கேள்வி தற்கால தலைமுறையினரிடம் இருப்பது மகிழ்வுக்குறிய விஷயமே. நான் என் வாழ்க்கையை மகிழ்வுடன் வாழவே பிறந்திருக்கிறேன். ஏன் கஷ்டப்பட்டு பிடிக்காததை செய்து ஒரு விரக்தியான வாழ்க்கையை வாழணும். பிடிக்கலையா சரியற்ற தேர்வா மாற்றிக் கொள்ளலாம் என்ற ஞானோதயம். 

அறுபதுல பார்த்தீங்கன்னா ஆண் பெண் பார்த்துக் கொள்ளாமலே திருமணம் செய்துக் கொண்டு பிடிக்காத அத்தனையையும் அனுசரித்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருந்த சமூகம் அது. அதிலும் பெண்கள் அடிமைத்தனமாகவே அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து செத்துக் கொண்டிருந்த பிள்ளைப் பெற்று போடும் மெஷினாகவே இருந்தாள் என்றால் மிகையாகா. அப்பா அம்மா கட்டி வச்சுட்டாங்க, சரியோ தப்போ கடைசி வரை சண்டை போட்டுக் கொண்டாவது சேர்ந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று தன்னை தானே சித்திரவதை செய்துக் கொண்டிருந்த சமூகம் அது. 

இந்த விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சமூக மாற்றம் நிகழ்ந்ததற்கு காரணம் என்ன என்று நினைக்கின்றீர்கள் கல்வி. கல்வி மட்டுமே அடுப்படியிலும் கட்டிலறையிலும் வதைப்பட்டுக் கொண்டிருந்த பெண்களை வெளியில் வர செய்து இன்று பரவலாக அனைத்து இடங்களிலும் சக மனுஷியாக ஆணுக்கு நிகர் சமமாக பணியில் அமர்த்தப்பட்டு தற்போது நிகழ்ந்திருக்கும் சமூக மாற்றத்தை தந்திருக்கிறது.

இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் ரொம்ப மோசம் என்பவர்கள் சற்று யோசித்து பாருங்கள். சமூக மாற்றங்கள் நிகழ்கையில் ஒரு சில எதிர்மறை சம்பவங்களும் நிகழத் தான் செய்யும். 

டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமாகவும் பெண் கல்வியின் காரணமாகவும் தான் அத்தனையையும் கள்ளத்தனமாக மறைவாக செய்துக் கொண்டிருந்ததை தற்போது வெளிப்படையாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு தான். குறைந்த பட்சம் தற்காலத்து பிள்ளைகளிடம் மறைத்து மறைத்து செய்ய பிடித்தமற்று எதை செய்தாலும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு செய்யும் நேர்மையாவது இருக்கிறது. 

வீட்டில் இருக்கும் தொட்டிச் செடிகள் பார்த்து பார்த்து வளர்க்கப்பட்டு சுமாராக பரிணமிக்கும். அதுவே காட்டு மரங்கள் பாருங்கள் தன் தேவையை தானே தேடிக் கொள்ளும், ஓங்கி அடர்ந்து காட்டுத்தனமாய் வளரும். ஆக குழந்தைகளை நீங்கள் வளர்க்க வேண்டியதில்லை. அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். வளர்க்கிறேன் என்று குட்டையை குழப்பாமல் மனம் உடைகையில் தடுமாறுகையில் தோள் கொடுத்து தட்டிக் கொடுங்கள். 

நாமெல்லாம் தொட்டி செடிகளாய் வீணாய் போனோம். சுயமாய் முடிவெடுப்பதற்கு பதில் கல்வியில் இருந்து கனவுகள் வரை யாரென்றே தெரியாத சொந்தக்காரர்களை வரை மூக்கை நுழைத்து கருத்து சொல்கின்றேன் என்ற பெயரில் அவனவன் வாழ்க்கையை எவனவன் கருத்தை கொண்டோ பிடிக்காத ஒன்றில் பொருத்திக் கொண்டிருந்தோம். அதன் வழி வந்து வீணான தலைமுறை தான் 90s கிட்ஸான நாம்.

ஒரு தலைமுறை வீணாகுகையில் அடுத்த தலைமுறை விழித்துக் கொள்ளும். அதன் விழிப்பை தாளாத பழம் தலைமுறையினர் புலம்பி தள்ளும். முந்தைய தலைமுறையினருக்கு எல்லாம் என்ன பிரச்சினை தெரியுமா? நான் நல்லா இல்லையா? எவனும் நல்லாருக்க கூடாது.... நான் நல்லா இருந்தாலும் என்னை விட எவனும் நல்லா இருந்திட கூடாது என்ற வன்மத்தனம் உடையவர்களின் மட்டுமே கலாச்சார மாறற்த்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

எவரையும் துன்புறுத்தாமல் தன் வாழ்வை தன் விருப்பப்படி சந்தோஷமாய் அமைத்துக் கொள்ள எல்லா உயிர்களுக்கும் உரிமை உண்டு. எவர் வாழ்விலும் அனாவசியமாக மூக்கை நுழைக்காத சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. அதை உங்கள் சாதி, மத, பேத, இன் அரசியலை தாண்டி உங்கள் பூமர்த்தனங்களால் வீணாக்காதீர்.கீழே விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாது. விழட்டும் எழட்டும். கடைசி வரை பாசம் என்ற பெயரால் நீங்கள் பிடித்துக் கொண்டே அவர்களோடு ஓடிட இயலாது.

சரியோ, தவறோ காபி பேஸ்ட் அல்லாத ஒரு புதிய சமுதாயம் உருவாக வழி விடுவோம்.

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

சருகுகளின் சபலங்கள். பகுதி - 37 playboy syndrome

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 37

playboy syndrome

தன்னை கிருஷ்ணணாக பாவித்துக் கொண்டு திரியும் ஆண்களை பாரத்திருக்கிறீர்களா. 

கஷ்டப்பட்டு தன்னைப் பற்றிய ப்ளே பாய் பிம்பத்தை மெனக்கெட்டு உருவாக்கி வைத்திருப்பார்கள். 

நிச்சயம் உளவியல் என்ன சொல்கின்றதென்றால் ப்ளே பாய்களால் எந்த ஒரு பெண்ணையும் முழுமையாக காமத்திலோ காதலிலோ திருப்திபடுத்திவிட முடியாது. அவர்கள் நுனிப்புல் மேய்கின்றவர்கள். எந்த ஒன்றிலும் நிம்மதியடையாதவர்கள். இன்னும் பெட்டரா கிடைக்குமா என்ற தேடலில் அடுத்தடுத்து என்று அவர்கள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எந்த பெண்ணை கண்டாலும் இச்சைக் கொண்டு மிக விரைவில் நீர்த்து போய்விடக் கூடியவர்கள். அதன் காரணம் தொட்டே அவர்களுக்கு நிரந்தரமான காதலிகள் இருக்க வாய்ப்பில்லை. எங்கு சென்றாலும் மரத்துக்கு மரம் தாவிவிடும் குரங்கைப் போல ஒரு சில முறையிலேயே இவர்களுக்கு ஒரே பெண்ணிடம் பெரிதும் காமத்தில் நாட்டம் இராது. ஆக பெண்ணை திருப்திப்படுத்த முடிந்தவனால் மட்டுமே நெடுங்காலம் ஒரே பெண்ணிடம் இச்சைக் கொண்டு பற்பல வித்தைகள் காட்டிட இயலும். நுனிப்புல் மேய்ப்பவன்களுக்கு அவ்வப்போது பெண் மட்டுமே மாறுவாள். அவர்கள் களவியல் கிணத்துக்குள் போட்ட கல் போன்று தான் நையென்று இருக்கும்.

தான் மட்டுமே அந்த நேரத்தில் திருப்தியுற்று மிச்சத்தை emotional abuse மூலமாக பெண்ணை சரி கட்டுவார்கள். அதன் விளைவு தான் தன் பாலியல் பகிர்தலில் பெண்ணுக்கு சரியாக உச்சத்தையே கொடுக்க முடியாமல் போகிறது. ஒருத்தியை புணர்தலில் அவன் வேறு ஒருத்தியை நினைத்துக் கொண்டு இருப்பான். தன்னை விட்டு மற்றொரு பெண்ணிடம் போய்விடக் கூடாதென்ற மனநிலைக்கு பெண்ணை ஆளாக்க வேண்டிய நிலைமையை ஒட்டியே அவன் தன்னை தன்னை சுற்றிலும் உள்ள மனிதர்களுக்கு மத்தியில் ப்ளே பாய் பிம்பத்தை ஏற்படுத்துவதும். 

சரியான இடத்தில் காமத்தை தேடும் ஆணிடம் மட்டுமே பெண் உச்சத்தை காண்பாள். 

தன்னோடு இருக்கையில் வேறு ஒருத்தியை பார்த்தால் அது எப்படி உண்மையான காதலாகவோ, காமமாகவோ இருக்க கூடும். அங்கு எப்படி பெண்ணானவள் சந்தோஷத்தில், வெட்கத்தில் பூரிக்க முடியும்.

சும்மா தன் வேலை உண்டு தான் உண்டென்று இருக்கும் ஆணை எந்த பெண்ணும் கை பிடித்து இழுத்து கட்டிலறைக்கு வா என்று அழைக்கப் போவதில்லை. ஒருவேளை ஒரு ஆண் தான் நட்பு ரீதியாக மட்டும் பழகினேன் அவள் தான் தவறாக புரிந்துக் கொண்டு என்னை பின்தொடர்கிறாள் போன்ற பிம்பங்கள் இவனால் தூக்கி எறியப்பட்ட பெண்களின் மீது‌ இவன்கள் கூச்சம் இன்றி வைப்பார்கள். 

இது போன்ற பிம்பங்கள் அடுத்து வரும் பெண்களுக்கான தூண்டில். 

உண்மையிலேயே காமத்தில் தேர்ந்தவன் எந்நேரமும் காம சிந்தனையோடு பார்க்கும் பெண்களை எல்லாம் வம்பிழுத்துக் கொண்டு இருப்பதில்லை. They are very selective and genuine. 

கிருஷ்ண பிம்பமும் கிருஷ்ண லீலைகளும் அதீத காதலின் கற்பனையின் உலா. அதை வைத்துக் கொண்டு பெண்கள் ப்ளே பாய்கள் பின்னோடு செல்வதும் காதலினால் அடிமைப்பட்டு கிடந்து மனம் சிதைபடுவதும் அன்றாடம் நாம் காணும் நிகழ்வுகள்.

கிருஷ்ண பிம்பம் என்பதே ஒரு மாயை. காதலை தேர்ந்தெடுக்கையில் நேர்மையானவனா என்று கண்டு தேர்ந்தெடுங்கள். நெஞ்சில் உண்மையுள்ளவன், உரமிருப்பவனிடம் மட்டுமே காதல் என்பது ஆனந்தகீதம். பல பெண்களை கையாண்டவன் கையில் உங்கள் காதலென்பது சாபக்கேடு.

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 36. Who is more possessive?

சருகுகளின் சபலங்கள் 

பகுதி - 36

Who is more possessive? 

ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு பெரும்பான்மையான மனிதர்கள் பெண் என்று உரைப்பார்கள்.

ஆனால் நிஜத்தில் ஆண் தான் பெண்ணை விட பொஸஸிவ் என்கின்றது உளவியல்.

பெண் தனக்கு ஏற்படக் கூடிய possessivenessஐ பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுவாள். 

ஆனால் ஆண் தனக்கு ஏற்படக் கூடிய possessivenessஐ பெரும்பாலும் வெளிக்காட்ட மாட்டான். அதற்கு பதில் உன்னை பாதுகாக்கிறேன் என்ற வேஷம் போடுவான். 

பெண்ணுக்கும் அந்த protectiveness தேவைப்படுவதினால் அதை காதல் தனக்கு எவ்வளவு ஆதூரமாக இருக்கிறான் என்று பெருமிதப்படுவாள்.

புத்திசாலிப் பெண்கள் இது போன்ற காதலன் வலையில் வீழ்வதில்லை. வீழ்ந்தாலும் எளிதில் வெளிவந்துவிடுவாள். She knows how to protect herself. 

இந்த தத்திப் பெண்கள் தான் தன்னை ஒருவன் நேசம் என்ற பெயரில் போடும் முட்டுக்கட்டைகளை பாதுகாக்கிறான் என்று கருதிக் கொண்டு விஷயம் எல்லை மீறிப் போகையில் கண்ணீரில் தத்தளிப்பாள். 

ஒரு சில ஆண்களை பார்த்திருக்கிறேன். பெண்ணை முடிந்தவரை உபயோகப்படுத்திவிட்டு கழட்டிவிட்டுவிடுவார்கள். சரி கழட்டிவிட்டாச்சுல்ல. அப்படியே அவன் வேலையை பார்த்துட்டு போவானானு பார்த்தா மாட்டான். இவன் விலகினதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு மற்றொரு உறவை ஏற்படுத்திக் கொண்டால் அவளுக்கு ஒழுக்கங்கெட்டவள் என்ற பட்டத்தை உருவாக்குவான். 

தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான் வகையறாக்கள். 

ஒரு பெண்ணை அவன் உபயோகப்படுத்தி நிராகரித்ததும் அவள் கண்ணீரில் உழல வேண்டும், காணாமல் போக வேண்டும், தன்னை வந்து கெஞ்ச வேண்டும், அதுவே தன் ஆண்மைக்கான செருக்கென எண்ணிக் கொள்ளும் ஆண்கள் பிரிந்த பின்னும் அவளை எமோஷனல் அபியூஸ் செய்வதை பார்க்க முடியும். தன்னை அவ்வளவு எளிதாக எப்படி மறந்தாள், அப்ப நம்ம பர்பாமன்ஸை விட வேற எவனோ பர்பாமன்ஸ் பண்ணியிருக்கானா என்று உள்ளுக்குள் குமைவான். 

விளைவு அவன் முன் அவள் எப்போதும் போல சந்தோஷமாக இருக்க இயலாமல் செய்ய என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வான்.

என்ன அது வெளியே தெரியாது. பெண் இது போன்ற உளவியல் அரசியலில் ஆணை ஒப்பிட்டு பார்க்கையில் முட்டாள் என்பதால் அவள் நேர்மையாக சண்டையிட்டு அவமானப்படுவாள். இவன்களோ குயபுக்தியோடு அவளோடு பழகிய நேரத்து அந்தரங்க சம்பாஷணை மற்றும் அந்தரங்க நேரத்து விஷயங்களை வெளியிடுவான்.

அவனை நம்பிய குற்றத்திற்காக பெண் பலிகடா ஆவாள். 

இங்கு பல பெண்களின் அந்தரங்கங்கள் அவர்கள் அறியாமல் உலா வருவதற்கு காரணம் என்ன? ஆணின் ஆதிக்கமனமும் பொஸஸிவ்னஸும் தான். 

ஆண் எத்தனை பெண்களை போட்டேன் என்றாலும் அதை பெருமையாக கருதிக் கொள்வதும் அவன் பயன்படுத்திய பெண்கள் கூனி குறுகி அவமானப்பட்டு கண்காணாமல் ஒடுங்கி போவதும் நம் கண் கூடாக காணும் அவலங்களில் ஒன்று. 

ஆண் அப்படி தான் இருப்பான், பெண் தான் ஜாக்கிரதையாக இருக்கணும்னு விக்டிம் ப்ளேமிங் செய்துக் கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு ஆதரவாக இருப்பது பெரும்பாலும் யார் என்று பார்த்தீர்களானால் பீட்டா பெண்கள். 

இவர்கள் ஏமாந்த பெண்களுக்கு ஆதரவு தர மாட்டார்கள். மாறாக ஏமாற்றும் ஆண்களிடம் வரிசையில் போய் தன்னையும் ஒரு முறை ஏமாற்றிவிட மாட்டானா என்ற ஏக்கத்தில் அவனுக்கு ஆதரவளித்துக் கொண்டு இருப்பார்கள். 

நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்த எந்த பெண்ணும் பெண்களை ஏமாற்றி இன்புறும் சருகுகளுக்கு புள்ளி அளவு கூட ஆதரவு அளிக்க மாட்டார்கள். ஏன் என்றால் நேர்மையான பெண்ணுக்கு தெரியும் அந்த இடத்தில் தானோ தன் பெண் பிள்ளையோ தன் வம்சத்தில் தோன்றும் பெண் பிள்ளைக்கோ இது நடந்தால் என்ன ஆகி இருக்க கூடும் என்று யோசித்து விலகி இருப்பாள்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...