பகுதி - 38
புதிய சமுதாயம் உருவாகட்டும்
காலங்காலமாக முன்னோர்கள் வழியில் அவர்கள் வளர்ந்த வாழ்ந்த முறைமைகளை கேட்டு அவர்கள் அனுபவ அறிவை வைத்து வளர்ந்து வந்த சமூகம் நம்முடையது. தற்காலத்து பிள்ளைகளிடம் மாபெரும் கலாச்சார மாற்றத்தை காண முடிகிறது.
பழங்கதைகள், அனுபவ கதைகள் பேசினாலே அவர்கள் பூமர் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. கலாச்சாரம், கட்டுபாடுகள் போன்ற நாம் வளர்ந்த வாழ்வியல் முறைகளை தவிடுபொடியாக உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
முந்தைய தலைமுறையினர் சமூகம் என்ன சொல்லிவிடுமோ என்ற பயத்திலேயே வளர்ந்த தலைமுறை நாம். நம் வாழ்க்கையை நாம் நம் விருப்பப்படி வாழ்ந்தோமா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே கூற முடியும். ஆசிரியருக்கு பயந்து, சுற்றத்தாருக்கு பயந்து, பெற்றோர்களுக்கு அடங்கி ஒடுங்கி தன் இச்சைகளை மறைத்து வைத்து செய்துக் கொண்டிருந்த தலைமுறையினர் நாம்.
இப்போதைய பிள்ளைகள் தெளிவாகவே இருக்கின்றார்கள். எதுக்கு நான் பயப்படணும், ஏன் பயப்படணும் என்ற கேள்வி தற்கால தலைமுறையினரிடம் இருப்பது மகிழ்வுக்குறிய விஷயமே. நான் என் வாழ்க்கையை மகிழ்வுடன் வாழவே பிறந்திருக்கிறேன். ஏன் கஷ்டப்பட்டு பிடிக்காததை செய்து ஒரு விரக்தியான வாழ்க்கையை வாழணும். பிடிக்கலையா சரியற்ற தேர்வா மாற்றிக் கொள்ளலாம் என்ற ஞானோதயம்.
அறுபதுல பார்த்தீங்கன்னா ஆண் பெண் பார்த்துக் கொள்ளாமலே திருமணம் செய்துக் கொண்டு பிடிக்காத அத்தனையையும் அனுசரித்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருந்த சமூகம் அது. அதிலும் பெண்கள் அடிமைத்தனமாகவே அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து செத்துக் கொண்டிருந்த பிள்ளைப் பெற்று போடும் மெஷினாகவே இருந்தாள் என்றால் மிகையாகா. அப்பா அம்மா கட்டி வச்சுட்டாங்க, சரியோ தப்போ கடைசி வரை சண்டை போட்டுக் கொண்டாவது சேர்ந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று தன்னை தானே சித்திரவதை செய்துக் கொண்டிருந்த சமூகம் அது.
இந்த விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சமூக மாற்றம் நிகழ்ந்ததற்கு காரணம் என்ன என்று நினைக்கின்றீர்கள் கல்வி. கல்வி மட்டுமே அடுப்படியிலும் கட்டிலறையிலும் வதைப்பட்டுக் கொண்டிருந்த பெண்களை வெளியில் வர செய்து இன்று பரவலாக அனைத்து இடங்களிலும் சக மனுஷியாக ஆணுக்கு நிகர் சமமாக பணியில் அமர்த்தப்பட்டு தற்போது நிகழ்ந்திருக்கும் சமூக மாற்றத்தை தந்திருக்கிறது.
இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் ரொம்ப மோசம் என்பவர்கள் சற்று யோசித்து பாருங்கள். சமூக மாற்றங்கள் நிகழ்கையில் ஒரு சில எதிர்மறை சம்பவங்களும் நிகழத் தான் செய்யும்.
டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமாகவும் பெண் கல்வியின் காரணமாகவும் தான் அத்தனையையும் கள்ளத்தனமாக மறைவாக செய்துக் கொண்டிருந்ததை தற்போது வெளிப்படையாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு தான். குறைந்த பட்சம் தற்காலத்து பிள்ளைகளிடம் மறைத்து மறைத்து செய்ய பிடித்தமற்று எதை செய்தாலும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு செய்யும் நேர்மையாவது இருக்கிறது.
வீட்டில் இருக்கும் தொட்டிச் செடிகள் பார்த்து பார்த்து வளர்க்கப்பட்டு சுமாராக பரிணமிக்கும். அதுவே காட்டு மரங்கள் பாருங்கள் தன் தேவையை தானே தேடிக் கொள்ளும், ஓங்கி அடர்ந்து காட்டுத்தனமாய் வளரும். ஆக குழந்தைகளை நீங்கள் வளர்க்க வேண்டியதில்லை. அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். வளர்க்கிறேன் என்று குட்டையை குழப்பாமல் மனம் உடைகையில் தடுமாறுகையில் தோள் கொடுத்து தட்டிக் கொடுங்கள்.
நாமெல்லாம் தொட்டி செடிகளாய் வீணாய் போனோம். சுயமாய் முடிவெடுப்பதற்கு பதில் கல்வியில் இருந்து கனவுகள் வரை யாரென்றே தெரியாத சொந்தக்காரர்களை வரை மூக்கை நுழைத்து கருத்து சொல்கின்றேன் என்ற பெயரில் அவனவன் வாழ்க்கையை எவனவன் கருத்தை கொண்டோ பிடிக்காத ஒன்றில் பொருத்திக் கொண்டிருந்தோம். அதன் வழி வந்து வீணான தலைமுறை தான் 90s கிட்ஸான நாம்.
ஒரு தலைமுறை வீணாகுகையில் அடுத்த தலைமுறை விழித்துக் கொள்ளும். அதன் விழிப்பை தாளாத பழம் தலைமுறையினர் புலம்பி தள்ளும். முந்தைய தலைமுறையினருக்கு எல்லாம் என்ன பிரச்சினை தெரியுமா? நான் நல்லா இல்லையா? எவனும் நல்லாருக்க கூடாது.... நான் நல்லா இருந்தாலும் என்னை விட எவனும் நல்லா இருந்திட கூடாது என்ற வன்மத்தனம் உடையவர்களின் மட்டுமே கலாச்சார மாறற்த்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
எவரையும் துன்புறுத்தாமல் தன் வாழ்வை தன் விருப்பப்படி சந்தோஷமாய் அமைத்துக் கொள்ள எல்லா உயிர்களுக்கும் உரிமை உண்டு. எவர் வாழ்விலும் அனாவசியமாக மூக்கை நுழைக்காத சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. அதை உங்கள் சாதி, மத, பேத, இன் அரசியலை தாண்டி உங்கள் பூமர்த்தனங்களால் வீணாக்காதீர்.கீழே விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாது. விழட்டும் எழட்டும். கடைசி வரை பாசம் என்ற பெயரால் நீங்கள் பிடித்துக் கொண்டே அவர்களோடு ஓடிட இயலாது.
சரியோ, தவறோ காபி பேஸ்ட் அல்லாத ஒரு புதிய சமுதாயம் உருவாக வழி விடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக