ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 35 மனநல ஆலோசகரா? அல்லது மனநோயாளியா?

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 35

மனநல ஆலோசகரா? அல்லது மனநோயாளியா?

ஆன்லைனில் மனநல ஆலோசகரிடம் மனநல ஆலோசனைக்கு செல்லப் போகிறீரா. உங்களுக்கு தான் இந்த பதிவு. 

தோழி ஒருத்தி உறவு சிக்கலில் மாட்டிக் கொண்டு மன உளைச்சலில் தடுமாறிக் கொண்டு இருக்க அவள் தேடி சென்றது சோஷியல் மீடியா மூலம் நட்பு பட்டியலில் பல காலமாக இருந்த அவள் பல பதிவுகளில் கண்டுணர்ந்த மனநல ஆலோசகியிடம் ஆன்லைனிலேயே தன் வருத்தங்களை சிக்கல்களை அ முதல் ஃ வரை கூறி குமைந்து இருக்கிறாள். 
 
அப்போதைக்கு ஆறுதலாக ஏதோ சொல்லி ஆறுதல் படுத்தியுள்ளார் மன நல ஆலோசகியும். 

மூன்று நான்கு மாதம் கழித்து அந்த மனநல ஆலோசகியை மற்ற சில தோழிகளோடு சேர்த்து பாராட்டிய பதிவில் விருப்பக்குறியீடுகள் இடாமல் அதில் அவரை பாராட்டிய பின்னூட்டங்களுக்கு மட்டும் பதிலிருத்தி இருக்கிறார் மனநல ஆலோசக தோழி.

உடனே ஏன் முன்பு போல் என் பதிவுக்கு வருவதில்லை என்று நேரடியாக தோழி அந்த மனநல ஆலோசகியை கேட்க உன் பதிவு என் டைம்லைன்ல காண்பிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். 

ஏதோ மனம் இடரலாகவே இருக்க தோழி அந்த மனநல ஆலோசகியின் பதிவுகளை அவ்வப்போது கவனித்து இருக்கிறார்.

தன்னை எமோஷனல் அபியூஸிற்கு ஆளாக்கியவர் பற்றி அந்த மருத்துவ தோழியிடம் பகிர்ந்தார் இல்லையா? அந்த எமோஷனல் அபியூஸ் செய்தவர் மருத்துவ தோழியின் வெறித்தனமான க்ரஷ் என்பதை உணர்ந்தார். 

அவ்வப்போது அதை மறைமுக பதிவாகவும் அந்த மருத்துவ தோழி சொல்லவும் செய்திருக்கிறார். 

ஊர் உலகத்தையே ஏமாற்றும் கயவன் கூட தன்னை ஏமாற்ற மாட்டேன் என்கின்றானே என்று psycotherapist தோழி புலம்பிய பதிவை படிக்க நேர்ந்தது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என்பதை மிக தாமதமாக உணர்ந்தார். ஆனால் அந்த மனநல ஆலோசகியும் இதே போல அவ்வப்போது எழுதுவதும் உடனடியாக அதை டெலிட்டும் செய்வதை காண முடிந்தது. 

இவளின் முன்னாள் காதலனின் காதலுக்கு அந்த மருத்துவ தோழி ஏங்குவதை புரிந்துக் கொள்ள முடிந்தது. திருமணம் ஆகாத சின்ன பெண். மனமுதிர்ச்சியற்றவரிடம் expert என்று நினைத்து சொல்லியது எவ்வளவு தவறு என்று புரிந்தது. ஆனால் அவனோ அந்த மருத்துவ தோழியை அவ்வளவாக கண்டுக் கொள்ளவில்லை. ஏன் என்றால் அவன் ஈர்ப்பு அளவீட்டிற்குள் பார்ப்பதற்கு வெகு சுமாரான அந்த பாவப்பட்ட பெண்ணாக இருந்த அந்த மனநல ஆலோசக தோழி வரமாட்டார். என்ன தான் இருந்தாலும் அவளும் பெண் தானே. காலத்தே பயிர் செய்னு அந்த காலத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். தற்போது பல பெண்களுக்கு திருமணம் தேவையற்றதாக இருக்கின்றது. தப்பில்லை. ஆனால் உறவு தேவைப்படுகிறது. திருமணம் ஆனவர்களே தடுமாறுகையில் பாவம் திருமணம் ஆகாத சிறு வயதிலேயே தந்தையையும் இழந்த பெண் மனநிலை பரிதாபத்திற்குரியது தான். 

அவள் விரும்பும் ஆணையே இன்னொருத்தியை ஏமாற்றியதாக ஒரு பெண் வந்து சொன்னால் அவளின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும். அவள் மீது கோபப்பட தான் செய்யும். அதன் விளைவுகள் அவள் கேரக்டரை வீணாக்க அவள் தான் அவள் முன் வாழ்க்கையில் இருந்து கடைசி கடைசியாக வாழ்ந்த வாழ்க்கை வரை உளறித் தொலைத்திருக்கிறாளே. அத்தனையையும் பகடையாக பயன்படுத்த தான் செய்வாள் அவளுக்கு பிடித்த அவனின் கவனத்தை திசைத் திருப்புவதற்காக. 

இந்த உலகம் எத்தனை பயங்கரமானதாக இருக்கும் தெரியுமா? சுயநலத்திற்காக யாரையும் எப்படியும் வீழ்த்திவிட துடிக்கும்.

அந்த ஆணழகனின் கவனத்தை திருப்ப அந்த மனநல ஆலோசகி அவ்வப்போது இவளை மறைமுகமாக திட்டி பதிவை இட்டாள். ஏற்கனவே அவருக்கும் இவளுக்கும் இருந்த பகையை தூபம் போட செய்தாள். 

அதை காண்கையில் அதிர்ச்சியாகி அவளிடம் பேச வேண்டி கேட்கையில் அந்த மனநல ஆலோசகியோ எனக்கு நேரம் இல்லை என்று பேசுவதையே தவிர்த்திருக்கிறார். 

அதன் பிறகு அந்த ஆணழகனிடமே சென்று இவள் அவனை பற்றி அவளிடம் சொல்லியதை அவனிடம் என்னவென்று போட்டுக் கொடுத்தாலோ the ball is in his court now. அதை நம்பிக்கை துரோகமாக கருதியவன் அவனால் பாதிக்கப்பட்ட அவளோடு உடலோடு உறவாடிய பாதிக்கப்பட்ட தோழியை பழி வாங்க துணிந்தான். பெண்ணுக்கு பெண் பழி வாங்குவதை விட ஒரு ஆண் பெண்ணை பழி வாங்குவதென்பது வெகு சாதாரணமானதாக இருக்காது. அதிலும் பல பெண்கள் விரும்பக் கூடிய ஆண், பெண்ணை கையாளத் தெரிந்த ஆணின் கைப்பிடியில் அவள் வாழ்வென்பது படு நாசம் தான்.

அதன் விளைவாக அவள் மேல் அவதூறுகள் பரப்பினான். 

அவமானம் தாங்க முடியாத தோழியோ செத்துவிடும் மனநிலைக்கு தள்ளப்பட்டாள்.

அந்த மனநல ஆலோசகியின் நெருக்கமான தோழனாக தெரிந்த ஒருவரிடம் இவள் இதை பற்றி பேச... அவரோ அதுவே ஒரு மனநோயாளி, சைக்கோ. அது கிட்ட போய் சொல்லிருக்கியே என்று அவரை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். அவளே நேரங்காலம் தெரியாம சில ஆண்களை டார்ச்சர் செய்த கதைகளையும் சொன்னார். 

நீங்கள் உறவு சிக்கலில் மாட்டி தடுமாறும் நிலை வரலாம். மன உளைச்சலில் மாட்டலாம். ஆனால் முகநூல் போன்ற சோஷியல் மீடியாக்களில் மன முதிர்ச்சியற்ற psychotherapistகளிடம் சென்று உங்கள் வாழ்வை இன்னமும் குழப்பம் உள்ளதாக சிக்கல் உள்ளதாக ஆக்கி கொள்ளாதீர்கள். 

நேர்மையான மருத்துவர் சில்லறைத்தனமான வேலைகளை சாகும் நிலையிலும் செய்ய மாட்டார்கள். 

மன உளைச்சலா? உறவு சிக்கலா அதற்கான நல்ல நல்ல கிளினிக்குகள் உள்ளன. Confidentialஆக உங்கள் கதைகளை வைத்துக் கொள்ளக் கூடிய மனமுதிர்ச்சி உடைய ஆலோசகர்களை நோக்கி செல்வதே உத்தமம். 

எல்லாருக்கும் மன தடுமாற்றம் வரும். அதற்கு மனநல ஆலோசகரிடம் சொல்வதை விட உங்கள் நலம் விரும்பும் நம்பிக்கைக்குரிய மனிதர்களிடம் மட்டும் பகிருங்கள். அவர்களுக்கு உங்கள் காதலன் க்ரஷ்ஷாக இல்லாமல் இருப்பது அவசியம். 

அதை விடுத்து இங்கே அவர்களுடைய க்ரஷ்ஷை பற்றியே அவர் தன்னுடன் உறவில் இருந்து எமோஷனல் அபியூஸ் செய்தார் என்றால் அதன் விளைவுகள் உங்கள் வாழ்வை நரகமாக்கும்.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சருகுகளின் சபலங்கள் - பகுதி 33 சுயமரியாதைப் பெண்கள்

சருகுகளின் சபலங்கள்

பகுதி 33

சுயமரியாதைப் பெண்கள்

பொறுக்கிகளை பொறுக்கித்தனமான பெண்களே ஆதரிப்பார்கள். 

நீங்க வேணா பாருங்களேன்....

நேர்மையான பெண்கள் பொறுக்கிகளை இடது கையால் டீல் செய்துவிட்டு, தூர விலக்கிவிட்டு தன் முன்னேற்றத்தை, தன் வியாபரத்தை, தொழிலை, தன் அரசியல் வாழ்வைப் பற்றி யோசிப்பதை மட்டுமே செய்வர். 

சோஷியல் மீடியா போன்ற தளத்தில் எவரை ஆதரிக்க வேண்டும் எவரை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்ற தெளிவு இருக்கும் பெண்கள் முன்னேற்றப் பாதையில் வீறுநடைப் போடுவதை காணலாம். 

 ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான்னு வச்சுக்கங்க மற்ற ஆண் நண்பர்கள் என்ன செய்வாங்க அந்த பெண்ணை சக தோழியாவோ, சகோதரியாகவோ பாவிப்பாங்க. ஆனா பெண்கள் பார்த்தீங்கன்னா தன் தோழி விரும்பும் காதலனை தானும் நேசிக்கக் கூடிய குயபுக்தி பெண்ணிடம் அதிகம் உண்டு. 

தான் கிட்ட ஒரு நல்ல உடுப்பே இருந்தாலும் இன்னொருத்தர் கிட்ட ஒரு உடுப்பு இருந்தா அது தனக்கு வேணும்னு நினைக்கும் பெண்களை நீங்கள் அதிகம் காணலாம். 

பெண்களில் ஆல்பா வகை பெண்கள் மிகக்குறைவு. பீட்டா வகை பெண்கள் தான் மிக மிக அதிகம்.

பெண்ணின் குண நலன்களை வைத்து உளவியலாளர்கள் அவர்களை மூன்று வகையினராக பிரிக்கின்றனர். ஆல்பா, பீட்டா, ஒமேகா...

ஏற்கனவே ஆல்பா பெண்களை பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன். 

தற்போது பீட்டா வகை பெண்களை காணலாம். 
1. தான் ஆணால் பேணிக்காக்கப்பட வேண்டியவள் என்ற எண்ணம் உடைய எல்லா பெண்களும் இதில் அடங்குவர். 
2. தன்னை தனக்கு பிடித்த ஆண் சுற்றி வர வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பர். 
3. தன் அழகை பற்றிய அதீத பயம் உடையவராய் இருப்பார்கள். 
4. புறம் பேசுதல், பொறாமைப்படுதல், அடுத்தவர் வாழ்க்கையை கொடுத்தல் இவர்களது பொழுதுபோக்கு.
5. தன் முன்னேற்றத்திற்காக எதையும் செய்ய தயங்காத பெண்களாக இவர்கள் இருப்பர். 
6. இவர்கள் குணத்தில் நஞ்சு கலந்திருந்தால் இவர்கள் உறவுகளுக்குள் அரசியல் செய்து தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள் ஆக இருப்பர்.
7. இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள்.
8. இவர்களிடம் ஏதாவது துன்பங்களை பகிர்ந்தால் நாங்களும் தான் அதை எல்லாம் கடந்து வந்தோம் என்பார்கள்.
9. ஆணாதிக்க சிந்தனை இவர்கள் மனதில் ஊன்றி இருப்பதால் ஆண்களுக்கு ஆதரவாகவே இருக்கும் இவர்கள் நியாயங்கள். உதாரணத்திற்கு ஆண் பெண்ணை ஏமாற்றினால் அவன் அப்படித்தான் இருப்பான் இவளுக்கு எங்கே புத்தி போச்சு என்பார்கள். ஏன் எங்க பின்னாடியும் நிறைய பேர் சுத்த தான் செய்யறாங்க. நாங்க என்ன ஏமாந்தா போயிட்டோம் என்று victim blaming செய்பவர்கள் எல்லாம் இந்த வகையறா பெண்கள் தான். 
10. ஒரு ஆண் மோசமானவன் என்று தெரிந்தாலும் கூட இவர்கள் பெண்ணுக்கு ஆதரவாக நிற்க மாட்டார்கள். 
11. பீட்டா வகை பெண்கள்னா ஏதோ வீட்டு வேலை செய்துக்கொண்டு புறம் பேசிக்கிட்டு திரியறவங்க மட்டுமல்ல. அவங்க பெரிய பெரிய பதவியில் கூட இருக்கலாம். மேல் நிலையில் கூட இருக்கலாம். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கையில் இவர்கள் ஆண் ஒரு படி மேல் தான் என்ற சிந்தனை வெளிப்படும்.
12. தனக்கு பிடித்த ஆணுக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அவை எல்லாம் இவர்களுக்கும் பிடிக்கும். எதுவெல்லாம் பிடிக்காதோ அவை எல்லாம் இவர்களுக்கும் பிடிக்காது. உதாரணத்திற்கு ஒரு இடத்தில் புதிதாக வேலைக்கு சேரும் பெண்ணை இது போன்ற சக பெண்கள் பெரும்பாலும் ஆதரிப்பதில்லை.‌ இதுவே அவர்களுக்கு பிடித்த ஆணின் பார்வை அந்த பெண்ணின் மீது பட்டால் இவர்களும் அவளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்துவிடுவர் உள்ளுக்குள்ளேயே புகைந்தாலும் கூட. ஒரு வேளை அவளுக்கும் அந்த ஆணுக்கும் பிரச்சினை என்றாலும் நடுநிலையாக யோசிக்காமல் அந்த பெண்ணை அந்த ஆணோடு சேர்ந்து துவேஷிக்க ஆரம்பித்துவிடுவர்.

இதன் விளைவே பெண் பெண்ணால் வதைபடுவது. 

கேடுகெட்ட பொறுக்கித்தனமான ஆண்கள் இது போன்ற பெண் வகையினராக ஆதரவாக வைத்துக் கொண்டு தான் பழி வாங்க வேண்டிய பெண்ணை எளிதில் பழி வாங்கி விடுகின்றனர்.

பெண் பாலின பேதத்தில் கீழிருப்பதற்கு முக்கிய காரணமே அவளிடம் இருக்கும் இந்த கீழ்மையான நேர்மையற்ற குணங்கள் தான். சுயநலமும் தற்சார்பு இல்லாத குணமும் சக மனிதர்களை வதம் செய்ய பயன்படுகின்றது.

ஒமேகா வகை பெண்கள் என்று ஒரு வகை உண்டு. சோம்பேறிகளாகவும், வாழ்வில் எந்த முன்னேற்றமும் அடையாமல் பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள் இவர்கள். இவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள். குயபுக்தி என்று பெரும்பாலும் எதுவும் இருக்காது. வெள்ளந்தியான உலகம் அறியாத, சமூகம் நட்டு வைத்த அத்தனையையும் ஏன் எதற்கு என்று கேள்விக் கேட்காமல் அப்படியே பின்பற்றுபவர்கள். இவர்களால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. சண்டைன்னா சட்டைக் கிழிஞ்சுடும்னு எல்லாத்துலேயும் ஒதுங்கிப் போய்விடுவார்கள். நமக்கு எதுக்குடா வம்பு கேட்டகரி இவர்கள்.
பிறரைப் பற்றி உண்மையற்ற தகவலை பற்றி புறம்பேசி, மிகக் கொடூரமாக நடந்து கொள்ளும் பெண்ணைப் பார்த்தால் உறுதியாகச் சொல்லலாம் அவள் ஆல்பா பெண் இல்லை என்று சொல்லலாம். 

நமக்கு முந்தைய ஜெனரேஷன்களில் ஒமேகா பெண்கள் அதிகமாகவும் பீட்டா பெண்கள் அவர்களை விட குறைவாகவும், ஆல்பா பெண்கள் எங்கோ ஒன்றும் என்று இருந்தார்கள்.

தற்போது கல்வி, புத்திசாலித்தனத்தில் சிறந்து விளங்கும் பெரும்பாலான பெண்கள் ஆல்பா குணம் பொருந்தி வாழ்வதால் தான் ஆண்கள் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

எங்க அம்மா எங்க அப்பத்தா எல்லாம் இப்படி இல்லையே என்று தடுமாறுகின்றனர் இச்சமூக மாற்றத்தால்.

சுயமரியாதை உடைய பெண்கள் தன்னை ஆல்பாவாக தான் உருவாக்கிக் கொள்வார்கள்

புதன், 6 செப்டம்பர், 2023

சருகுகளின் சபலங்கள். பகுதி - 32 தலைப்பு :கருணை காதலாகாது.

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 32

தலைப்பு :கருணை காதலாகாது.

ஒரு பெண்ணின் மீது 
அனுதாபப்பட்டு காதல் செய்தேன், கலவி செய்தேன், காமுற்றேன், புணர்ந்தேன் இப்படி ஆண்கள் அவ்வப்போது சொல்வதை கேட்டதுண்டு. 

பரிதாபப்பட்டு காதலுற முடியுமா? கருணையின் பொருட்டு ஒரு பெண்ணை புணர்ந்தேன், காதலுற்றேன் என்பதெல்லாம் எத்தனை அபத்தமான உளறல்கள். 

எப்போதோ ஒரு காலகட்டத்தில் எனக்கு தெரிந்த பெண்ணின் காதலன் அவளிடம் இப்படி சொல்லிருக்கிறான். நான் ஒரு கணவனை இழந்த பெண்ணோடு உறவில் இருக்கிறேன். அதற்கு அவன் சொன்ன காரணம் அவள் மீது பரிதாபப்பட்டு என்று. அவள் அவள் உடல் தேவைக்கு பாவம் என்ன பண்ணுவாள் என்று இரக்கப்பட்டு என்று. அதையும் இவள் நம்பி அச்சோ எவ்வளவு பெரிய ஈவு இரக்கம் உடையவன் என் காதலன் என்று. இது போன்ற பல பெண் முட்டாள்களை இந்த சமூகத்தில் காணலாம்.

எங்களை போன்ற சுயமரியாதை உடைய பெண்களுக்கு இது எப்படிபட்ட கேப்மாரித்தனம் என்பது புரியும். ஏற்கனவே ஒரு முதிர்வயது பெண்மணியோடு உறவில் இருந்துவிட்டு அதை அவள் இவளிடம் சொல்வதற்கு முன் இவளை மூளைச்சலவை செய்யும் யுக்தி. ஒரு வேளை அவள் வந்து இவளிடம் கல்யாணத்தின் பொழுது பஞ்சாயத்திற்கு வந்து நின்றால் எனக்கு ஏற்கனவே தெரியும், உன்னை பரிதாபப்பட்டு வாழ்க்கை தந்தால் நீ அவனையே என் கிட்ட இருந்து முழுசா களவாடலாம்னு நினைக்கறியானு சண்டைக்கு செல்லும் யுக்தி. 

ஒரு ஆணுக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொள்ளும் எல்லா இடங்களிலும் பெரும்பான்மையாக ஆணின் குயபுக்தியும், கள்ளத்தனமும் நிறைந்திருக்கும். ஒருத்தியை ஒருத்தி வசைப்பாட வைத்து இது வரை புணர்ந்தவளை பார்த்து பார்த்து அலுத்துப் போயிடுச்சு இல்லியா, கழட்டிவிட்டு புதிதாய் இன்னொருத்தியை கூடும் யுத்தி. பெரும்பாலான சுயமரியாதை அற்ற பெண்களுக்கு சுயபுத்தியை விட சொல்புத்தி தான் அதிகம். சக பெண் சொல்வதை விட தனக்கு ஈர்ப்புவிசை அதிகம் உள்ள ஆண் என்ன சொன்னாலும் அதை நம்புவாள். அதன் எதிர்கால விளைவாக தான் எமோஷனல் அபியூசிற்கு ஆளாகி வாழ்வில் உடைத்துப் போடபட்டு நகர முடியாத கட்டத்தில் மட்டுமே உணர்வாள். இது போன்ற பெண்களை நீங்கள் என்ன செய்தும் காப்பாற்ற முடியாது. காப்பாற்ற வருபவர்களை தான் முதலில் காயம் செய்வாள்.

பெரும்பாலான ஆண்களிடம் நான் கேட்க நினைக்கும் கேள்வி. ஊரறிய ஒரு பெண்ணை தன்னோடு உறவில் இருப்பவளை நட்பு ரீதியாக கூட பழகுவதாய் பகிரங்கப்படுத்திக் கொள்ள விரும்பாமல் அவள் மீது கருணைப்பட்டு பரிதாபப்பட்டு வாழ்வு தந்தேன் என்று பிதற்றுவது எத்தனை கயமைத்தனம். நேர்மையான ஆண் இதை செய்ய மாட்டான். 

பரிதாபப்பட்டு ஆண் சல்லாபிக்கின்றான் என்றால் எரிகிற கொள்ளையில் பிடுங்கிய வரை லாபம் என்று புணர்கின்றான் என்று தானே அர்த்தம். அதை எப்படி கருணை என்றும் காதல் என்றும் பெண்ணை நம்ப வைத்து எமோஷனல் அபியூஸ் செய்கின்றார்கள். அப்போதே என் தோழியிடம் அதை வலியுறுத்தினேன். அவன் பொய் சொல்றான். உனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆனா அவளை கழட்டி விட தான் செய்வான். அவள் இவன் ஆளுமைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பாள். திடுதிப்பென்று கழட்டிவிடுகையில் கண்டிப்பாக எதிர்ப்பாள். அவன் உன் பின்னோடு வந்து ஒளிந்துக் கொள்வான். இது வரை அவன் உடல் தேவைக்கு அவள் பயன்பட்டா. இப்ப நீ இருக்க. சரி அதே கருணைப்பட்டு மீண்டும் அவளஓடஉம் தொடர்பில் இருந்து உன்னோடும் தொடர்பில் இருந்தா நீ ஒத்துக்குவியா. அப்படியே ஒத்துக்கிட்டாலும் அவன் வேலை நிமித்தமாக விலகி சென்றாலும் என்னை விட அவள் நல்லா பண்றாப்ல போன்ற அபத்தமான மனநிலை எழும். ஒரு காலத்தில் ஒருத்தனுக்கு மூணு நாலு பொண்டாட்டிகள் இருந்திருக்கலாம். பொருளாதார ரீதியாக ஸ்திரம் இல்லாததால் வேறு வழி இன்றி அவன் விருப்பத்திற்கு ஆடினார்கள். தற்போது இந்த காலக்கட்டத்தில் இதெல்லாம் சரி வராது. ஒரு நேரத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தி தான் பெண் மன உளைச்சலில் சிக்காமல் இருக்க வழி. 

பெரும்பாலான ஆண்களுக்கு பெண்ணின் உடல் போதும். மனம் எல்லாம் பிற்பாடு தான். At a timeல முடியாதோ இல்லியோ நாலஞ்சு பொண்ணுங்க கூட கூடி களிப்பதையே ஆண்மைனு நம்பிக் கொண்டும் இருக்கிறான். ஆக அவனுக்கு ஜாலி தான். நீ எப்படிபட்ட எமோஷனல் ட்ராமாவுக்கு ஆளாவனு காதல் மயக்கம் உனக்கு இப்ப உணர்த்தாது.

இதில் அவன் செய்யற தப்புக்கு அவனுக்கும் அவளுக்கும் சேர்த்து அவன் தேடிய காரணம் தான் இந்த கருணை மண்ணாங்கட்டி எல்லாம். அவன் நல்லவன்னா உலகமே எதிர்த்தாலும் அவனை விட பெரிய பொண்ணாவே இருந்தாலும் அவளை கல்யாணம் பண்ணிக்கணும். எவ்வளவு சொல்லியும் அவள் அன்று என் பேச்சை கேட்கலை. அன்றே இதை சொல்லிய என் நட்பையும் முறித்தாள். இதை நான் செய்யும் போது எனக்கு இருபத்தி ஒரு வயது. கல்யாணம் பண்ணிக்கிட்டா. அஞ்சு வருஷம் கழித்து சந்திக்கும் போது அவள் குழந்தையோடு கண்டேன். என் கருத்து தப்பிதமாக இருந்திருக்க கூடும் என்று மன்னிப்பு கேட்டு வாழ்த்து சொல்லலாம் என்று. என்னை கண்டும் கண்டுக் கொள்ளாமல் சென்றாள். மன்னிப்பு கேட்கும் உணர்வு உந்தித் தள்ள அவளை ஓடிப் பிடித்து அவள் கைப் பிடித்து நிறுத்த கண்கள் தளும்ப கண்ணீரில் நின்றாள். 

ஒரு காபி ஷாப்க்கு அழைத்து சென்றேன். கணவன் இவளை கைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணை கரம் பிடித்துவிட்டான். விவாகரத்து ஆகிவிட்டது. காதல் திருமணத்தால் பெற்றோர்கள் வீட்டிலும் தஞ்சம் புக முடியாத நிலைமை. 

படிக்கும் வயதிலேயே காதலித்ததால் மேற்படிப்பும் கிடையாது. படிக்கும் போதும் காதல் மயக்கத்தில் அரியர்.அதை முடிக்கவும் இல்லை. விவாகரத்தில் வந்த படத்தில் ஏதோ Xerox கடை வைத்து பிழைத்துக் கிடக்கிறாள். நிச்சயம் இவளுக்கும் வாழ்க்கை கொடுக்கிறேன் என்று எந்த மகானாவது நிச்சயம் வருவார்கள். மீண்டும் உடைபட்டு உடைபட்டு பெண்களின் முன்னேற்றங்கள் எல்லாம் இப்படி காதல், கல்யாணம், கள்ளக்காதல் என்றே சின்னஞ்சிறு வட்டத்திற்குள் முடிந்துவிடும்.

தனித்து வாழும் பெண்ணோ, கணவனை இழந்த பெண்ணோ, முதிர்கன்னியோ, கணவனால் திருப்திப்படுத்த இயலாதவளோ. பெண்ணுக்கு காதலோ, காமமோ கிட்டாத போது அதை தர்ற முன்வருபவனுக்கு தான் அவளுக்கு வாழ்க்கை கொடுப்பதாய் தோன்றிவிடுகிறது போலும். ஆனால் இவனுங்க வாழ்க்கை குடுக்கிறதுனு சொல்றது என்ன தெரியுமா? பொருளாதார ரீதியாகவோ எந்த விதத்திலும் எந்த பெரும் உதவியும் செய்திருக்க மாட்டான்கள்.

அவர்கள் செய்வது எரிகிற தீயில் இன்னமும் எண்ணையை பாய்ச்சுவதற்கு சமம். உடைந்தவளை இன்னமும் உடைத்துப் போடும் அவலம்.


ஒரு விவாகரத்து ஆன பெண்ணையோ, கைம்பெண்ணையோ, தனித்து வாழும் பெண்ணையோ திருமணம் செய்துக் கொண்டு மறுவாழ்வு தருவது மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும். அதிலும் அந்த பெண்ணின் மீது காதல் இருந்தால் மட்டுமே அவளை உடல் தேர்வாகவோ உணர்வு தேர்வாகவோ தேர்ந்தெடுக்கலாம். அதை விடுத்து பெரும்பாலான ஆண்களுக்கு கருணை வந்தா, பரிதாபம் வந்தா, பச்சாதாபம் வந்தா, அனுதாபம் வந்தா எல்லாத்துக்கும் உள்ள விட்டு ஆட்டிடணும்னு தோணும். பெரும்பாலான கயவன்களுக்கு எல்லா எழவும் ஒன்று தான். அது அவளை கட்டில் அறையில் புணர்ந்து விட்டு செல்லுதல் ஒன்றே அவர்களுக்கு எதோ வாரி வழங்கிய உணர்வை கொண்டுவிடுகிறார்கள். இப்பல்லாம் அவளுங்க கிட்ட காசும் வாங்கி ஆண் விபச்சாரியாக சல்லாபமாக வாழும் ஆண்கள் கூட்டம் வளர்ந்து வருகிறது.

ஒரு உறவில் இருந்திருந்தீங்கன்னா உங்கள் மனம் ஏதோ ஒரு வகையில் நாடி தான் போய் இருக்கிறீர்கள். அவளது பலகீனத்தை உங்கள் பலமாக பயன்படுத்திக் கொண்டு அலுத்துப் போனபின் விலகத் துவங்குகிறீர்கள். அவள் இறுக்கிப் பிடிக்க முயல்கையில் அவளை புற உலகிற்கு ஒரு வில்லியைப் போன்ற தோற்றம் உருவாக்கி நீங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு இன்னொருத்தியின் பின்னொடு சென்றுவிடுகிறீர்கள். 

மெத்த படித்த பெண்கள் கூட இது போன்ற ஆணின் களவாணித்தனங்களை ஆ....வென்று நம்பிக் கொண்டு அடுத்த இரையாகுவதற்கு தயாராகின்றார்கள்.

அன்பை தர்றவோ, பணத்தை தர்றவோ கருணையும் அனுதாபமும் போதுமானதாக இருக்கிறது. 

ஒரு பெண்ணுடன் உடலை பகிர, காமத்தை பகிர நிச்சயம் அனுதாபமோ, கருணையோ காரணமாக இருப்பதில்லை. அப்படி ஒரு ஆண் சொல்கின்றான் என்றால் அவன் அப்பழுக்கற்ற சுயநலவாதி, காரியவாதி, கயமைமிக்கவன். சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் கொடூரன் என்பதில் துளியளவும் ஐயமே இல்லை. 

கஷ்டத்தில் இருக்கிறாள்ன்னா உதவி செய்யலாம், காசு குடுக்கலாம், கல்யாணம் செஞ்சு தரலாம், வாழ்க்கை கூட குடுக்கலாம்.‌ ஆனா நீங்க செய்யறதுக்கு பேரு பச்சைத்துரோகம், இன்னும் சொல்லணும்னா பச்சைத்தேவடியாத்தனம் மட்டும் தான். அந்த வார்த்தை இனி இது போன்ற ஆண்களுக்கு தான் பொருந்தும்.

பெண்களை எத்தனை ஜாக்கிரதையாக இருக்க சொன்னாலும் ஆண் திருந்தாலும் இது போன்ற அவலங்கள் நடந்துக் கொண்டு இருப்பதை தடுக்க முடியாது.

கயமைமிக்க ஆணை நம்பும் பாவத்திற்கு பெண்ணின் வளம் மிக்க வாழ்வு தான் சருகாய் உதிரும். சபலப்படுவது என்னவோ அவன்.... சருகாய் உதிரப்போவதென்னவோ நீ தான் பெண்ணே....

விழித்துக் கொள்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 31. Mob attacking mentality

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 31

Mob attacking mentality

அந்த காலத்துல கூட்டமா சேர்ந்து திருடன் திருடனு கத்திட்டு ஒருத்தனை போட்டு வெளுத்தாங்கன்னா என்ன ஏதுன்னே தெரியாம நாலு பேரு சேர்ந்து தன் பங்குக்கு வெளுப்பாங்க. 

கிட்டத்தட்ட அதே மாதிரி அரைவேக்காட்டுத்தனமான மனிதர்கள் தான் சோஷியல் மீடியாக்களில் அதிகம். 

சோஷியல் மீடியாக்களை அதிகம் பயன்படுத்தறவன் யாருனு பார்த்தீங்கன்னா பெரும்பாலும் வேலை வெட்டிக்கு போகாத, வேலைன்னு ஒண்ணு இல்லாத ஆட்கள் அல்லது தன் வேலையை இன்னொருத்தனை வைத்து வாங்கிக் கொள்ளும் ஆட்கள் தான். அல்லது முகநூலை பிஸினஸ் தளமாக பயன்படுத்தும் ஆட்கள் தான்.

ஒரு நடிகையின் போட்டோவை போட்டு எதாவது சோஷியல் மீடியா புரணி பேசும் மூன்றாம் தர பத்திரிக்கைகள் எழுதும் முன்றாந்தரமான தெளிவில்லாத விமர்சனங்களுக்கு கீழே கமெண்டுகள் பார்த்தீங்கன்னா தெரியும். பதிவிட்டவனே அரைகுறை தன் ஞானசூன்ய அறிவோடு தான் எதையாவது வைத்து கிறுக்கித் தள்ளுவான். அதையும் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் பார்க்க கூட போவதில்லை. அவர்கள் தன் வேலை உண்டு தன் பிழைப்பு உண்டு தன் முன்னேற்றம் உண்டு என்று தன் உழைப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். அதன் கமெண்ட்டில் உருளுபவர்களின் எழுத்துக்களை பார்த்தீர்கள்னா தனக்கு யாரென்றே தெரியாத நபர்களை விஷயம் என்னவென்றே முழுமையாக தெரியாத போதும் வார்த்தைகளால் வன்புணர்வு செய்துக் கொண்டிருப்பர்.

மனித மனங்களில் ஆழ்மன வக்கிரங்கள் அத்தனை ஆபத்தானது. 

இந்த வக்கிரங்கள் அத்தனை எளிதாக கடக்க கூடியதல்ல. இதே நபர்கள் தான் எங்கேயாவது தனக்கு தெரியாத தனக்கு பிடிக்காத தான் வெறுக்க கூடிய நபர்கள் கிடைத்தால் கூட்டாக சேர்ந்து குதறி எடுப்பது. 

அரசியல், பிரபலங்களையும் தாண்டி இவர்கள் குறி வைப்பது நிமிர்வுடன் வாழும் தனித்து தெரியும் நபர்களை. 

அதிலும் இந்த சோஷியல் மீடியா சண்டைகள் எல்லாம் அப்பட்டமான அருவருக்கத்தக்க வகையில் இருக்கும். எவராவது இருவருக்குள் பிரச்சினைகள் நடந்து அவர்கள் மாறி மாறி பதிவு போட்டுக் சண்டை போட்டுக் கொண்டு இருக்கையில் சில ஜென்மங்களை பார்க்கலாம். 

1. இங்க போயும் லைக் போட்டு கமெண்டு போடும். அங்கே போயும் லைக் போட்டு கமெண்டு போடும். நடுநிலையாக இருப்பதாக காண்பித்துக் கொண்டு எதிலேயும் திடமாக இல்லாமல் இருப்பது. இது போன்ற சப்ஜெக்ட்டுகளுக்கு பாப்கார்ன் கொரிப்பதைப் போன்று எவன் வீட்டு பிரச்சினையையாவது கொரித்துக் கொண்டு இருந்தாக வேண்டும். 
2. இன்னும் ஒரு சிலர் கூட்டத்தின் தலைவன் மாதிரி ஒருவன் என்ன போட்டாலும் தன் சுய சிந்தனையை யோசியாமல் ஜிங் ஜிங் அடித்துக்கொண்டு ஆமா சாமி போட்ட படி இருக்கும்.‌
3. இன்னும் சில சப்ஜெக்ட் கிடைச்சதுடா வாய்ப்புனு இன்னும் என்ன என்ன இல்லாததும் பொல்லாததும் இருக்கோ அத்தனையையும் அங்கே கமெண்ட்டில் நேரில் இருந்து விளக்குப் பிடித்தது போன்று பேசும். 
4. இன்னும் சில சப்ஜெக்ட்டுகளுக்கு என்ன பேசுறாங்க யாரை பற்றிப் பேசுறாங்கனே புரியாது, தெரியாது. யாராவது எதாவது எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன் என்று புரணி கேட்கும் அரிப்பெடுத்து அலைந்துக் கொண்டிருக்கும்.‌
5. இன்னும் சில ஜென்மங்கள் யாரென்ன சொன்னாலும் நம்பிவிடும்.

இது போன்ற சோஷியல் மீடியாக்களில் இருக்கும் பெரிய அவலம் என்ன தெரியுமா? இங்கே பாஸிட்டிவிட்டியை பரப்புபவர்களோ, நேர்மையாய் எழுதுபவர்களுக்கோ பெரிய விருப்பக்குறியீடுகள் என்ற அங்கீகாரம் கூட கிடைக்காது. 

அசிங்க அசிங்கமாய் பேசுபவன் காமத்தை பற்றியே எந்நேரமும் பேசுபவன், காமெடி எனும் பெயரில் கேடுக்கெட்டத்தனமாக எழுதுபவன் பின் ஒரு பெரும் கூட்டமே இருக்கும். 

எந்த தலைவன் பின்னோடாவது நின்று அவன் என்ன சொன்னாலும் தலையாட்டியே பழகிய கூட்டம் சுயசிந்தனை என்றால் என்னவென்றே அறியாத கூட்டம் நிமிர்வோடு வாழத் தெரியாத கூட்டம் எல்லாம் வளர்ப்பு மிருகங்களை போன்றவை. பெரும் புத்தியற்றவை. ஆட்டு மந்தைகள் போன்றவை.

நிஜ உலகிற்கும் இது போன்ற விர்ச்சுவல் உலகிற்கும் என்ன வித்தியாசம்னா. வெளி உலகம் நம்மை பற்றி வேறு யாருடனோ தவறாக அவதூறாக பேசுவது நமக்கு தெரியாது. ஆனால் இங்கே நம்மிடம் நன்றாக பழகிக் கொண்டிருந்ததாக பாவலா காண்பித்துக் கொண்டிருந்த பக்தர்கள் கூட அடியாத்தி இங்கே பார்த்தியாடி சேதியேனு வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் கிழவிகளைப் போல பேசிக் கொண்டிருப்பதைக் கண்ணார கண்டு மகிழலாம். இதில் ஆண் பெண் பேதமில்லை என்பது தான் வியப்புக்குரிய விஷயம். பெண்கள் தான் புரணி பேசுவார்கள் என்பதையும் தாண்டி ஆண்களும் அதற்கு ஈடாக புரளியில் உழல்வார்கள்.

இன்னிக்கு உன் போஸ்ட்டுக்கு ஹார்ட்டீன் விட்டு கண்ணே மணியே என்று கொஞ்சிக் கொண்டிருக்கும் அதே வாயும் கைய்யும் இன்னொரு இடத்தில் உங்களை பலக்க அடித்துக் கொண்டிருக்கும் கோக்கு மாக்கு கூட்டத்தில் இணைந்து அதுவும் நம்மை கேவலமாக திரித்து பேசிக் கொண்டிருக்கும். 

இன்னும் சில கொடுமைகள் என்னன்னா அவன் கேடு கெட்டவன் என்று தனித்து பேசுகையில் நம்மிடம் பேசிய அதே வாய் அங்கே போய் சாரை போல உண்டோ என்று அங்கே பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கும். (யார்ரா இவனுங்க இவ்ளோ கேவலமா இருக்கானுங்கனு தோணும்)

உங்களுக்கு பிரச்சினைகள் வந்து அடி வாங்கும் வரையில் அந்த கோக்கு மாக்கு மூளை இல்லா கூட்டத்தில் நீங்களும் ஒருவராய் இருக்கக் கூடும்.‌

அடிபட்டு வெளி வரும் வரை மனித மனங்களின் குரூரங்களையும் வக்கிரங்களையும் உங்களால் உணரவே முடியாது. 

நிஜ உலகில் உங்களுக்கு ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகளை விட சோஷியல் மீடியாவில் தினமும் இயங்குபவர்களுக்கான மனநோய் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. 

வேலை வெட்டியில்லாத மனநோயாளிகளின் கூடாரத்தில் சிறந்த ஒரு புத்திசாலியும் சரி, நேர்மையானவனும் சரி நிம்மதியாக வாழ்ந்திட முடியாது. ஆட்டு மந்தை கூட்டத்தோடு வாழ ஆட்டு மூளை தேவைப்படுகிறது. முட்டாள்கள் ஆட்டு மந்தைகளாகவும் குயபுக்தி உள்ள குள்ளநரிகள் அதை மேய்க்கும் மேய்ப்பர்களாகவும் இருக்கின்றனர்.

சோஷியல் மீடியாவில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்களுக்கும் கூட இந்த mob attacking mentality தொற்றிக் கொள்வதும், தோழி இல்லையே கோழி இல்லையே, க்ரஷ் இல்லையே ப்ரஷ் இல்லையே என்று அபத்தமாக உளரும் பெருங்கூட்டத்திற்குள் இணைந்து சீர் கெட்டு கொண்டிருக்கின்றனர் என்றால் மிகையாகா. 

முட்டாள்களோடு புழங்கினால் முட்டாள்த்தனம் பெருகி‌ மனநோய்க்கு தான் ஆளாக நேரிடும். 

எதையும் அளவாக பயன்படுத்துங்கள். எதாவது நடக்கும்போது உங்கள் சொந்த புத்தியை தீட்டுங்கள்.‌ உங்கள் நேரத்தை உழைப்பிலும் குடும்பங்களோடும் செலவிடுங்கள். வீண் விமர்சனங்களால் உங்களுக்கு கிடைக்கப் போவது ஒன்றுமேயில்லை.

இப்போதெல்லாம் குடும்பங்களோடு நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு ஆளுக்கு ஒரு மூலையில் செல்போனோடு எவரென்றே தெரியாதவர்களோடு அளவளாவவும் அதன் பொருட்டு வீணாகவும் போக்கும் அதன் காரணமாக மன அழுத்த நோய்களில் வீழும் போக்கும் அதிகரித்துள்ளது.

உங்கள் நிஜ வாழ்வில் உங்களோடு இணைந்து பயணம் செய்பவரோடு நேரம் செலவழியுங்கள். 

கும்பலாக மனிதர்கள் அவதூறு பேசி திரியும் இடங்களை தவிர்த்திடுங்கள். உங்கள் வாழ்விற்கு உங்கள் மன ஆரோக்கியம் சிந்தனை அத்தனை முக்கியம்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...