பகுதி - 31
Mob attacking mentality
அந்த காலத்துல கூட்டமா சேர்ந்து திருடன் திருடனு கத்திட்டு ஒருத்தனை போட்டு வெளுத்தாங்கன்னா என்ன ஏதுன்னே தெரியாம நாலு பேரு சேர்ந்து தன் பங்குக்கு வெளுப்பாங்க.
கிட்டத்தட்ட அதே மாதிரி அரைவேக்காட்டுத்தனமான மனிதர்கள் தான் சோஷியல் மீடியாக்களில் அதிகம்.
சோஷியல் மீடியாக்களை அதிகம் பயன்படுத்தறவன் யாருனு பார்த்தீங்கன்னா பெரும்பாலும் வேலை வெட்டிக்கு போகாத, வேலைன்னு ஒண்ணு இல்லாத ஆட்கள் அல்லது தன் வேலையை இன்னொருத்தனை வைத்து வாங்கிக் கொள்ளும் ஆட்கள் தான். அல்லது முகநூலை பிஸினஸ் தளமாக பயன்படுத்தும் ஆட்கள் தான்.
ஒரு நடிகையின் போட்டோவை போட்டு எதாவது சோஷியல் மீடியா புரணி பேசும் மூன்றாம் தர பத்திரிக்கைகள் எழுதும் முன்றாந்தரமான தெளிவில்லாத விமர்சனங்களுக்கு கீழே கமெண்டுகள் பார்த்தீங்கன்னா தெரியும். பதிவிட்டவனே அரைகுறை தன் ஞானசூன்ய அறிவோடு தான் எதையாவது வைத்து கிறுக்கித் தள்ளுவான். அதையும் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் பார்க்க கூட போவதில்லை. அவர்கள் தன் வேலை உண்டு தன் பிழைப்பு உண்டு தன் முன்னேற்றம் உண்டு என்று தன் உழைப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். அதன் கமெண்ட்டில் உருளுபவர்களின் எழுத்துக்களை பார்த்தீர்கள்னா தனக்கு யாரென்றே தெரியாத நபர்களை விஷயம் என்னவென்றே முழுமையாக தெரியாத போதும் வார்த்தைகளால் வன்புணர்வு செய்துக் கொண்டிருப்பர்.
மனித மனங்களில் ஆழ்மன வக்கிரங்கள் அத்தனை ஆபத்தானது.
இந்த வக்கிரங்கள் அத்தனை எளிதாக கடக்க கூடியதல்ல. இதே நபர்கள் தான் எங்கேயாவது தனக்கு தெரியாத தனக்கு பிடிக்காத தான் வெறுக்க கூடிய நபர்கள் கிடைத்தால் கூட்டாக சேர்ந்து குதறி எடுப்பது.
அரசியல், பிரபலங்களையும் தாண்டி இவர்கள் குறி வைப்பது நிமிர்வுடன் வாழும் தனித்து தெரியும் நபர்களை.
அதிலும் இந்த சோஷியல் மீடியா சண்டைகள் எல்லாம் அப்பட்டமான அருவருக்கத்தக்க வகையில் இருக்கும். எவராவது இருவருக்குள் பிரச்சினைகள் நடந்து அவர்கள் மாறி மாறி பதிவு போட்டுக் சண்டை போட்டுக் கொண்டு இருக்கையில் சில ஜென்மங்களை பார்க்கலாம்.
1. இங்க போயும் லைக் போட்டு கமெண்டு போடும். அங்கே போயும் லைக் போட்டு கமெண்டு போடும். நடுநிலையாக இருப்பதாக காண்பித்துக் கொண்டு எதிலேயும் திடமாக இல்லாமல் இருப்பது. இது போன்ற சப்ஜெக்ட்டுகளுக்கு பாப்கார்ன் கொரிப்பதைப் போன்று எவன் வீட்டு பிரச்சினையையாவது கொரித்துக் கொண்டு இருந்தாக வேண்டும்.
2. இன்னும் ஒரு சிலர் கூட்டத்தின் தலைவன் மாதிரி ஒருவன் என்ன போட்டாலும் தன் சுய சிந்தனையை யோசியாமல் ஜிங் ஜிங் அடித்துக்கொண்டு ஆமா சாமி போட்ட படி இருக்கும்.
3. இன்னும் சில சப்ஜெக்ட் கிடைச்சதுடா வாய்ப்புனு இன்னும் என்ன என்ன இல்லாததும் பொல்லாததும் இருக்கோ அத்தனையையும் அங்கே கமெண்ட்டில் நேரில் இருந்து விளக்குப் பிடித்தது போன்று பேசும்.
4. இன்னும் சில சப்ஜெக்ட்டுகளுக்கு என்ன பேசுறாங்க யாரை பற்றிப் பேசுறாங்கனே புரியாது, தெரியாது. யாராவது எதாவது எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன் என்று புரணி கேட்கும் அரிப்பெடுத்து அலைந்துக் கொண்டிருக்கும்.
5. இன்னும் சில ஜென்மங்கள் யாரென்ன சொன்னாலும் நம்பிவிடும்.
இது போன்ற சோஷியல் மீடியாக்களில் இருக்கும் பெரிய அவலம் என்ன தெரியுமா? இங்கே பாஸிட்டிவிட்டியை பரப்புபவர்களோ, நேர்மையாய் எழுதுபவர்களுக்கோ பெரிய விருப்பக்குறியீடுகள் என்ற அங்கீகாரம் கூட கிடைக்காது.
அசிங்க அசிங்கமாய் பேசுபவன் காமத்தை பற்றியே எந்நேரமும் பேசுபவன், காமெடி எனும் பெயரில் கேடுக்கெட்டத்தனமாக எழுதுபவன் பின் ஒரு பெரும் கூட்டமே இருக்கும்.
எந்த தலைவன் பின்னோடாவது நின்று அவன் என்ன சொன்னாலும் தலையாட்டியே பழகிய கூட்டம் சுயசிந்தனை என்றால் என்னவென்றே அறியாத கூட்டம் நிமிர்வோடு வாழத் தெரியாத கூட்டம் எல்லாம் வளர்ப்பு மிருகங்களை போன்றவை. பெரும் புத்தியற்றவை. ஆட்டு மந்தைகள் போன்றவை.
நிஜ உலகிற்கும் இது போன்ற விர்ச்சுவல் உலகிற்கும் என்ன வித்தியாசம்னா. வெளி உலகம் நம்மை பற்றி வேறு யாருடனோ தவறாக அவதூறாக பேசுவது நமக்கு தெரியாது. ஆனால் இங்கே நம்மிடம் நன்றாக பழகிக் கொண்டிருந்ததாக பாவலா காண்பித்துக் கொண்டிருந்த பக்தர்கள் கூட அடியாத்தி இங்கே பார்த்தியாடி சேதியேனு வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் கிழவிகளைப் போல பேசிக் கொண்டிருப்பதைக் கண்ணார கண்டு மகிழலாம். இதில் ஆண் பெண் பேதமில்லை என்பது தான் வியப்புக்குரிய விஷயம். பெண்கள் தான் புரணி பேசுவார்கள் என்பதையும் தாண்டி ஆண்களும் அதற்கு ஈடாக புரளியில் உழல்வார்கள்.
இன்னிக்கு உன் போஸ்ட்டுக்கு ஹார்ட்டீன் விட்டு கண்ணே மணியே என்று கொஞ்சிக் கொண்டிருக்கும் அதே வாயும் கைய்யும் இன்னொரு இடத்தில் உங்களை பலக்க அடித்துக் கொண்டிருக்கும் கோக்கு மாக்கு கூட்டத்தில் இணைந்து அதுவும் நம்மை கேவலமாக திரித்து பேசிக் கொண்டிருக்கும்.
இன்னும் சில கொடுமைகள் என்னன்னா அவன் கேடு கெட்டவன் என்று தனித்து பேசுகையில் நம்மிடம் பேசிய அதே வாய் அங்கே போய் சாரை போல உண்டோ என்று அங்கே பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கும். (யார்ரா இவனுங்க இவ்ளோ கேவலமா இருக்கானுங்கனு தோணும்)
உங்களுக்கு பிரச்சினைகள் வந்து அடி வாங்கும் வரையில் அந்த கோக்கு மாக்கு மூளை இல்லா கூட்டத்தில் நீங்களும் ஒருவராய் இருக்கக் கூடும்.
அடிபட்டு வெளி வரும் வரை மனித மனங்களின் குரூரங்களையும் வக்கிரங்களையும் உங்களால் உணரவே முடியாது.
நிஜ உலகில் உங்களுக்கு ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகளை விட சோஷியல் மீடியாவில் தினமும் இயங்குபவர்களுக்கான மனநோய் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.
வேலை வெட்டியில்லாத மனநோயாளிகளின் கூடாரத்தில் சிறந்த ஒரு புத்திசாலியும் சரி, நேர்மையானவனும் சரி நிம்மதியாக வாழ்ந்திட முடியாது. ஆட்டு மந்தை கூட்டத்தோடு வாழ ஆட்டு மூளை தேவைப்படுகிறது. முட்டாள்கள் ஆட்டு மந்தைகளாகவும் குயபுக்தி உள்ள குள்ளநரிகள் அதை மேய்க்கும் மேய்ப்பர்களாகவும் இருக்கின்றனர்.
சோஷியல் மீடியாவில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்களுக்கும் கூட இந்த mob attacking mentality தொற்றிக் கொள்வதும், தோழி இல்லையே கோழி இல்லையே, க்ரஷ் இல்லையே ப்ரஷ் இல்லையே என்று அபத்தமாக உளரும் பெருங்கூட்டத்திற்குள் இணைந்து சீர் கெட்டு கொண்டிருக்கின்றனர் என்றால் மிகையாகா.
முட்டாள்களோடு புழங்கினால் முட்டாள்த்தனம் பெருகி மனநோய்க்கு தான் ஆளாக நேரிடும்.
எதையும் அளவாக பயன்படுத்துங்கள். எதாவது நடக்கும்போது உங்கள் சொந்த புத்தியை தீட்டுங்கள். உங்கள் நேரத்தை உழைப்பிலும் குடும்பங்களோடும் செலவிடுங்கள். வீண் விமர்சனங்களால் உங்களுக்கு கிடைக்கப் போவது ஒன்றுமேயில்லை.
இப்போதெல்லாம் குடும்பங்களோடு நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு ஆளுக்கு ஒரு மூலையில் செல்போனோடு எவரென்றே தெரியாதவர்களோடு அளவளாவவும் அதன் பொருட்டு வீணாகவும் போக்கும் அதன் காரணமாக மன அழுத்த நோய்களில் வீழும் போக்கும் அதிகரித்துள்ளது.
உங்கள் நிஜ வாழ்வில் உங்களோடு இணைந்து பயணம் செய்பவரோடு நேரம் செலவழியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக