சருகுகளின் சபலங்கள்
பகுதி - 20
online அனர்த்தங்கள்
நிதர்சன வாழ்க்கையில் நண்பர்கள் இருவர் சண்டையிட்டு கொள்கிறார்கள், கொஞ்ச நேரம் கழித்தோ கொஞ்ச காலம் கழித்தோ வாடா மச்சான் என்று பழசை மறந்து மறுபடியும் கூடிக் கொள்வதை காண முடிகின்றது.
இதுவே சோஷியல் மீடியாவில் இருவர் சண்டையிட்டு கொண்டால் நிரந்தரமாக அவர்களுக்குள் உறவுகள் அற்று போய்விடுகின்றதே ஏன் என்று கேட்டால் தோழி ஒருத்தி.
நிதர்சனம் தான். இருவர் சண்டையிட்டு கொண்டு மீண்டும் கூடி வாழ உண்மை அன்பு ஒன்றே போதுமானது. அது நிஜ உலகமோ, நிழல் உலகமோ அல்லது மாய உலகமோ.
அன்பின் பொருட்டு சண்டையிட்டுக் கொண்டால் அங்கு சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் சமூகவலைதளத்தை பொருத்தவரை எந்த ஒரு விஷயத்தை இங்கு உங்கள் டைம்லைனில் போட்டாலும் அது பன்மடங்கு exaggerated செய்து காண்பிக்கப்படும்.
ஏன்னா நிஜத்தில் நீங்க இரண்டு பேரு போடற சண்டையை உதாரணத்துக்கு கட்டிப் புரண்டு நடுரோட்டில் உருண்டு புரண்டு அடிச்சிக்கிட்டு சண்டை போடறீங்கனு வச்சுக்கோங்க அதை குறைந்தபட்சமாய் ஒரு பத்து பேரு பார்ப்பான்.
ஆனால் சோஷியல் மீடியாவில் நீங்கள் பதியும் ஒவ்வொரு பதிவும் சண்டையிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு வார்த்தையும் பல பேரால் படிக்கப்படுகின்றது.
அதாவது நிஜ உலகில் பத்து பேரு உங்க சண்டையை பார்த்து நூறு பேருக்கு அந்த விஷயம் போய் சேருதுன்னா சோஷியல் மீடியாவில் நீங்கள் போடும் சண்டை followersகளின் அளவுகோலை வைத்து பலரால் கவனிக்கப்படுகின்றீர்கள்.
ஆக பொதுவில் வார்த்தையை கையாளும் முன் ஒரு முறைக்கு நூறு முறை நீங்கள் யோசித்து தான் எழுத வேண்டும்.
அந்த நேரத்து வன்மத்தை தீர்த்தால் போச்சுன்னு பலர் பார்க்க உங்கள் நண்பனை திட்டினீங்கன்னா மீண்டும் நீங்க பழக முற்படுகையில் உங்களை கண்காணித்தவர்கள் அந்த தீயை அணையாதவாறு பார்த்துக் கொள்வார்கள்.
என் டைம்லைன் என் இஷ்டப்படி கண்டதையும் எழுதுவேன் மற்றவர்களை பற்றி தரக்குறைவாக எழுதுபவர்கள் பிறரை பற்றிய ஒரு தவறான பிம்பத்தை பிறரது ஆழ்மனதிற்குள் விதைக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சமூகவலைதளத்தில் உங்களுக்கு ஒரு பெண்ணை பிடிக்காமல் அவளுக்கு தே*வடியா பட்டம் கட்டி இன்புற்றீர்களானால் கடைசி வரை அவளுக்கு அந்த பெயர் பல்கி பெருகி அவ்வளவு எத்தனை உத்தமியாக இருந்தாலும் நிரூபிக்க முயன்றாலும் நீங்கள் விதைத்து விட்டுப்போன அவப்பெயர் பல்கி பெருகி இன்னும் மோசமான அவப்பெயராகிவிடக்கூடும்.
அதே தான் ஆணுக்கும் முன்ன பின்ன யோசிக்காமல் பதிவிடும் முன் யோசியுங்கள். எத்தனையோ புரளிகள் நம் காதை எட்டும் தான். அதற்கு செவி சாய்த்து தான் ஆக வேண்டிய அவசியமில்லை. நாம் நம் பொருட்டு உணராத ஒன்றை பொதுவெளியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. நாம் உணர்ந்து ஒன்றை தண்டிக்க வேண்டிய ஒன்றை பொதுவெளியில் வைத்தாலும் தவறில்லை.
ஆனால் இங்கு வன்மத்தை காட்ட மனிதர்கள் எடுக்கும் ஆயுதமே ஒழுக்கம் மட்டும் தான். அதற்காக கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் பொய் பகட்டோடு வன்மத்தை தெறிக்கவிட்டீர்கள்னா அது பல்கி பெருகி அந்த அவப்பெயர் வெவ்வேறு மனிதர்கள் மூலம் வெவ்வேறு ரூபங்கள் எடுக்கும். அவர்களோடு பழகுபவர்கள் கூட எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனேயே பழகும் அவலம் ஏற்படும். இல்லாததை சொல்வது தான் அபத்தம்.இருப்பதை சொல்லுதல் அபத்தமாகாது.
தவறே செய்யாத திடமுள்ள மனது இதை அப்படி இப்படி என்று தூசு தட்டுவதைப் போல தட்டிவிட்டு போய்விடும். தவறு செய்பவனும் பெரும்பாலும் அதை பற்றி கவலையுறுவதில்லை. பெரும்பாலும் ஆண்களுக்கு அதற்கான புறவெளிகளும் திடமும் உண்டு. ஏன்னா அவங்க பொருளாதார ரீதியாகவும் வெளி உலக பிரச்சினைகள் பலவற்றையும் அசால்ட்டாக சமாளித்து வெளி வந்திருப்பார்கள்.
ஒழுக்கத்தில் முன்ன பின்ன இருக்கும் ஆண்களை தான் பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். குண்டலகேசி, நீலகேசி போன்ற கதைகள் மட்டுமல்ல பற்பல சினிமாக்கதைகளும் நிதர்சனங்களும் அதை தான் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
ஒரு பெண் கிட்ட போய் அந்த ஆண் மோசமானவனு சொல்லி பாருங்கள். அவள் அவன்பால் ஈர்க்கப்படுகிறாள். இது பெண்ணின் உளவியல். பெண்ணுக்கு தன்னை கொண்டாடும் ஆண் தான் தேவை. அவன் நல்லவனா என்பது எல்லாம் அவளுக்கு தேவைப்படுவதில்லை.
ஆனால் ஆண் அப்படியல்ல அவன் ஒழுக்கமான பெண்ணை தேடித் தேடி தான் ஓய்வான்.
ஆக ஒரு ஆணின் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதும் பெண்ணின் மீது ஏற்படுத்துவதும் ஒன்றல்ல.
ஆனால் வீட்டிற்குள்ளே உழலும் பெண்கள் அதிலும் நாலு சுவற்றிற்குள்ளேயே உள்ள பெண்களை, பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற பெண்களை, பிறரை அண்டி வாழும் நிலையில் இருக்கும் பெண்களை, புற உலக அனுபவம் குறைந்த பெண்களை தவறானவளாக சோஷியல் மீடியாவில் சித்தரிக்கும் போது அவள் அதை எதிர்க்கொள்ள இயலாமல் தடுமாறுகிறாள். அதிலும் குடும்ப அனுசரணை இல்லாத பெண்கள் தற்கொலைக்கு செல்லும் அளவு மன அழுத்தம் ஏற்பட்டு மனநோயாளி ஆவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.
ஒழுக்கத்தை இந்த சமூகம் ஆண்களிடம் எதிர்பார்ப்பதில்லை. நான் அப்படி தான்டி வெண்ணை மவளே என்று அசால்ட்டாக தெனாவட்டாக சொல்லிவிட்டு கடந்து போய்விடுவான். ஏன்னா இங்கே ஒழுக்கம் எல்லாம் சமுதாயம் எதிர்பார்ப்பது பெண்ணிடம் மட்டும் தானே.
ஆக நிஜ உலகில் இருவர் பேசிக் கொள்வது சம்பந்தப்பட்டவர் காதுகளுக்கு கூட எட்டாமல் போகலாம். ஆனால் சோஷியல் மீடியாவில் நீங்கள் ஒருவரை பற்றி பேசுவது பூதாகரமாகி சம்பந்தப்பட்டவருக்கே சென்று சேர்ந்து அவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும்.
சோஷியல் மீடியாக்கள் ஒரு வகையில் செய்தித்தாள்கள் மற்றும் செய்தி சேனல்கள் போன்றவை.
இங்கு கடுகை போட்டால் அது மலையாக்கிவிடுவார்கள்.
ஆக பதிவிடும் கடுகை நல்ல எண்ணத்தோடு நல்ல வார்த்தைகளோடு பதிவிடுங்கள்.
எழுத்து சுட வேண்டிய அவசியமில்லை. மயிலிறகாய் வருடிக் கொடுக்கட்டும்.
ஏன்னா உடல், உணர்வு, உயிர் என்று எதையும் அழிப்பது எளிது. உருவாக்குவது தான் கடினம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக