பகுதி - 25
பல்லாவரம்
என் தோழி அவசர அவசரமாக எனக்கு போன் செய்து அவள் குழந்தையை யாரோ கூட படிக்கும் மாணவ மாணவிகள் கருப்பி என்று கிண்டல் செய்கிறார்கள் என்று தினமும் வந்து அழுகிறாள், என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. நீ கொஞ்சம் சமாதானப்படுத்தேன் என்று சொல்லி கேட்டாள்.
அவளை என் வழியில் சமாதானம் செய்துவிட்டு யோசித்து பார்க்கிறேன். இந்த உலகம் தான் எப்படி அழகின் பின்னாடி விழுந்து அடித்துக் கொண்டு ஓடுகிறது.
அழகு விஷயத்தில் ஆண் சம்பாதித்தால் போதும் அழகு எல்லாம் இரண்டாம் பட்சம் என்ற எண்ணத்தில் வாழும் சமூகம், அவனுக்கென்ன ஆம்பிளை புள்ளை என்ற சொல்வடையையும் தாண்டி ஆண்களும் சொட்டை, தொப்பை என்று கிண்டல் செய்யப்படுகிறார்கள் தான். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியே கருப்பு தான் என்பதால் ஆண்களின் கருமை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ள முடிகிறது இத்தமிழ் சமூகத்தால். சொட்டையும் ஆண்மைக்கு அடையாளமாக கருதப்படுவதால் அதையும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆண் திறமையாக, பணம் சம்பாதிப்பவனாக, உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தால் ஒருவாறு அவனை ஏற்றுக் கொள்கின்றது இந்த சமூகம்.
அழகா இருந்தா காதலி, சுமாரா இருந்தால் தங்கை எனும் பெருவாரியான மனப்பான்மையை நான் கண்டதுண்டு.
சுமாரான பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை வேறு எந்த அழகியையாவது வெறுப்பேற்றுவதற்காக அவளை காதலிப்பது போல் நடிப்பவர்களையும் பார்த்ததுண்டு.
பெண் என்றால் கலரா இருக்கணும். ஒல்லியாக வடிவா இருக்கணும், மேக்கு பல்லா இருக்க கூடாது என்று அழகை வைத்து ஆயிரம் எதிர்பார்ப்புகள்.
முன்னெல்லாம் சக மனிதர்கள் ஊனமாக இருப்பின் அதை வைத்து திட்டுவார்கள். தற்போதெல்லாம் அது தவறு அப்படி மற்றவரை அழைத்தால் அவமானம் என்று கருதும் முதிர்ச்சி வந்தாலும், மனிதர்கள் வெளிப்படையாக அல்லாவிட்டாலும் அழகை வைத்து சுமாரான பெண்ணை நிராகரிக்கவே செய்கின்றனர்.
புற அழகுக்கு மனிதர்கள் முக்கியத்துவம் கொடுப்பதின் விளைவுகள் தான் பியூட்டி பார்லர்களின் அதிகரிப்பும், அழகுக்கான cosmeticsகளும், hair transplantation, plastic surgery இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.
குண்டாக இருப்பவர் குற்ற உணர்விற்கு ஆளாகுவதும், ஆளாக்கப்படுவதும் கண்ட கண்ட மருந்தை குடிக்க வேண்டிய நிர்பந்தந்ததிற்கு ஆளாகுவதும் உணவு கட்டுப்பாடு என்று பிடித்த உணர்வை தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும் என்று இந்த சமூகம் மனிதனை அழகை நோக்கி ஓட வைக்கின்றது.
திருமண வைபவத்தில் அழகான பெண்களும் நன்றாக சம்பாதித்த பணக்கார ஆண்களும் முதலில் போணியாகிவிடுகின்றார்கள்.
குழந்தைகளுக்குள் அழகை வைத்து கிண்டல் செய்யும் இந்த மனநிலை சிறு பிள்ளைகளிடம் எப்படி உருவாகி இருக்க கூடும் என்று யோசித்து பாருங்களேன். ஒரு பக்கம் குடும்பங்களுக்குள் அழகை வைத்து கிண்டல் செய்யும் பழக்கம் இருந்திருக்க கூடும். மற்றொரு பக்கம் இந்த நாடகங்களும், சினிமாக்களிலும் சுமாரான பெண்களை வைத்து எடுக்கும் காமெடிகள்.
ஒரு விஜய்காந்த் படத்தில் சௌந்தர்யாவை பொண்ணு பார்க்க போக அவள் வேலைக்காரியை பட்டுப்புடவை உடுத்தி திரும்பி நிற்க செய்திருப்பாள். அதில் அந்த வேலைக்காரி கருப்பாக, மேக்கு பல்லோடு, கட்டைக் குரலோடு யாரு உங்க பிரண்டா என்று கேட்பாள். விஜய்காந்த் விரக்தி மனநிலைக்கு சென்றுவிடுவார். வடிவேலு அப்படியே சோகமாக பரிதாபமாக விஜய்காந்த்திடம் புலம்புவார். இத்தனைக்கும் விஜய்காந்தும், வடிவேலுவும் கருப்பு தான். அந்த படத்தை சிறு வயதில் காணும்போதே அத்தனை அதிர்ச்சியாக இருக்கும். Body shamingஐ என்று காமெடி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று தவிப்பாய் இருந்தது.
அழகான பெண்ணை பல ஆண்கள் லோ லோ என்று தேடி தேடி பிடித்து கல்யாணம் செய்துக் கொள்கின்றனர். பின்பு ஒத்து வரவில்லை என்று கோர்ட்டு படிகட்டில் ஏறி இறங்கி பற்பல வருடங்களாக உருளும் பெரிய பெரிய ஆட்களை எல்லாம் பார்க்க தான் செய்கிறோம்.
சுமாரான அழகுடைய பெண்ணுக்கு காதல் வரக் கூடாதா?
ஆனால் பிரச்சினை என்னன்னா கல்யாணம் பண்ண தான் ஆண்களுக்கு சுமாரான பெண் தேவைப்படுவதில்லை. சர்வ லட்சணமும் பொருந்திய அழகான பெண்ணை தேடுகிறார்கள்.
பொழுதுபோக்கிற்காக புணர்வதற்கு அவர்களுக்கு அழகான பெண்கள் தேவைப்படுவதில்லை. சுமாரான பெண்களையே எளிதில் ஏமாற்றிவிட முடியும். நீ அழகி என்றால் அவள் மனம் எளிதில் மதிமயங்கும்.
யாருமே என்னை அழகினு சொன்னதுல்ல அவன் தான் என்னை அழகின்னான். அவன் கண்களுக்கு நான் அழகாக தெரிகிறேன் என்று எளிதில் அதிகம் ஏமாறுவாள். பெண்களும் சமீபத்தில் பணம் கொடுத்து ஏமாறுவதை அதிகம் காண்கிறோம்.
அவனோ ஓரிரு முறை அவளை பயன்படுத்திவிட்டு விலகி செல்கையில் வெளியே தெரியும் சூழல் வருகையில் சொல்வான். அவள் பல்லை பார்த்தியா, அவள் முஞ்சியை பார்த்தியா, அவளை எல்லாம் பார்த்து எவனாவது அவ கிட்ட போவானா. அவ அழகில்லாததால எல்லா ஆம்பிளைங்களையும் உடம்பைக் காட்டி அழைக்கிறா என்று மனசாட்சியே இல்லாமல் அவளுக்கு கேவலமான பட்டமும் வாங்கிக் கொடுப்பார்கள்.
அவளே பத்து பேரு கிட்ட போனவ பதினோராவதா என்னை அப்ரோச் பண்ணா நா அவளை நிராகரிச்சுட்டேன் அதான் பொய் சொல்லிட்டு சுத்துறா என்ற பட்டமும் வந்து சேரும்.
இங்கு அழகுள்ளவள்கள் ஏமாந்துவிட்டேன் என்றால் கூட மனிதர்கள் கொஞ்சமாவது காது கொடுத்து கேட்பார்கள். சுமாரான பெண் ஏமாந்துவிட்டால் ஏமாந்துட்டேனு போய் நிற்க முடியாது. ஏதோ கவலையை மறக்கவோ, வேறு கேர்ள் பிரண்டை மறக்கவோ என்று ஊறுகாயை தொட்டுக் கொள்வதைப் போல தொட்டுக் கொள்ள தான் சுமாரான பெண்கள் பல ஆண்களுக்கு தேவைப்படுகிறார்கள்.
அழகை வைத்து நேசிக்கும் மனம் உள்ளவரை இங்கு உறவுகள் பெருஞ்சிக்கல்களுக்கு தான் ஆட்படும்.
ஆக அழகை வைத்து உங்களை யாராவது நெருங்கினாலும் சரி நிராகரித்தாலும் சரி அவர்கள் மீதான அன்பை தூக்கி குப்பைத் தொட்டியில் எறியுங்கள்.
புற அழகை தாண்டி அக அழகை கண்டு உங்களை நேசிக்கும் விதிவிலக்கான மனிதர்கள் இன்றளவும் உள்ளதால் தான் இந்த பூமியில் ஈரப்பதம் இன்னமும் வற்றாமல் பூ பூக்கின்றது.
அழகை கொண்டு நிராகரிக்கும் மனிதர்களை நீங்கள் நிராகரியுங்கள். மனதின் அழகை கண்டு வரும் மனிதர்கள் பொக்கிஷம் மாதிரி. Rare pieces. அவர்கள் வருவார்கள், வரவில்லையே ஆயினும் சாக்கடை மனதுடையவரின் அன்பை ஏற்காதீர்கள்.
தேங்காய் துருவி, பல்லாவரம் என்று புற அழகை வைத்து கிண்டல் செய்தால் பல்லும் வரம் என்று சந்தோஷியுங்கள். இந்த அகோர பல்லினால் தானே இத்தனை மனிதர்களின் கயமைகளை அறிய முடிந்தது என்று சந்தோஷியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக