ஞாயிறு, 18 ஜூன், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 25 பல்லாவரம்

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 25

பல்லாவரம்

என் தோழி அவசர அவசரமாக எனக்கு போன் செய்து அவள் குழந்தையை யாரோ கூட படிக்கும் மாணவ மாணவிகள் கருப்பி என்று கிண்டல் செய்கிறார்கள் என்று தினமும் வந்து அழுகிறாள், என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. நீ கொஞ்சம் சமாதானப்படுத்தேன் என்று சொல்லி கேட்டாள். 

அவளை என் வழியில் சமாதானம் செய்துவிட்டு யோசித்து பார்க்கிறேன். இந்த உலகம் தான் எப்படி அழகின் பின்னாடி விழுந்து அடித்துக் கொண்டு ஓடுகிறது. 

அழகு விஷயத்தில் ஆண் சம்பாதித்தால் போதும் அழகு எல்லாம் இரண்டாம் பட்சம் என்ற எண்ணத்தில் வாழும் சமூகம், அவனுக்கென்ன ஆம்பிளை புள்ளை என்ற சொல்வடையையும் தாண்டி ஆண்களும் சொட்டை, தொப்பை என்று கிண்டல் செய்யப்படுகிறார்கள் தான்.‌ அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியே கருப்பு தான் என்பதால் ஆண்களின் கருமை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ள முடிகிறது இத்தமிழ் சமூகத்தால். சொட்டையும் ஆண்மைக்கு அடையாளமாக கருதப்படுவதால் அதையும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆண் திறமையாக, பணம் சம்பாதிப்பவனாக, உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தால் ஒருவாறு அவனை ஏற்றுக் கொள்கின்றது இந்த சமூகம்.

அழகா இருந்தா காதலி, சுமாரா இருந்தால் தங்கை எனும் பெருவாரியான மனப்பான்மையை நான் கண்டதுண்டு. 

 சுமாரான பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை வேறு எந்த அழகியையாவது வெறுப்பேற்றுவதற்காக அவளை காதலிப்பது போல் நடிப்பவர்களையும் பார்த்ததுண்டு.

பெண் என்றால் கலரா இருக்கணும். ஒல்லியாக வடிவா இருக்கணும், மேக்கு பல்லா இருக்க கூடாது என்று அழகை வைத்து ஆயிரம் எதிர்பார்ப்புகள். 

முன்னெல்லாம் சக மனிதர்கள் ஊனமாக இருப்பின் அதை வைத்து திட்டுவார்கள். தற்போதெல்லாம் அது தவறு அப்படி மற்றவரை அழைத்தால் அவமானம் என்று கருதும் முதிர்ச்சி வந்தாலும், மனிதர்கள் வெளிப்படையாக அல்லாவிட்டாலும் அழகை வைத்து சுமாரான பெண்ணை நிராகரிக்கவே செய்கின்றனர்.

புற அழகுக்கு மனிதர்கள் முக்கியத்துவம் கொடுப்பதின் விளைவுகள் தான் பியூட்டி பார்லர்களின் அதிகரிப்பும், அழகுக்கான cosmeticsகளும், hair transplantation, plastic surgery இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். 

குண்டாக இருப்பவர் குற்ற உணர்விற்கு ஆளாகுவதும், ஆளாக்கப்படுவதும் கண்ட கண்ட மருந்தை குடிக்க வேண்டிய நிர்பந்தந்ததிற்கு ஆளாகுவதும் உணவு கட்டுப்பாடு என்று பிடித்த உணர்வை தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும் என்று இந்த சமூகம் மனிதனை அழகை நோக்கி ஓட வைக்கின்றது. 

திருமண வைபவத்தில் அழகான பெண்களும் நன்றாக சம்பாதித்த பணக்கார ஆண்களும் முதலில் போணியாகிவிடுகின்றார்கள். 

குழந்தைகளுக்குள் அழகை வைத்து கிண்டல் செய்யும் இந்த மனநிலை சிறு பிள்ளைகளிடம் எப்படி உருவாகி இருக்க கூடும் என்று யோசித்து பாருங்களேன். ஒரு பக்கம் குடும்பங்களுக்குள் அழகை வைத்து கிண்டல் செய்யும் பழக்கம் இருந்திருக்க கூடும்.‌ மற்றொரு பக்கம் இந்த நாடகங்களும், சினிமாக்களிலும் சுமாரான பெண்களை வைத்து எடுக்கும் காமெடிகள். 

ஒரு விஜய்காந்த் படத்தில் சௌந்தர்யாவை பொண்ணு பார்க்க போக அவள் வேலைக்காரியை‌ பட்டுப்புடவை உடுத்தி திரும்பி நிற்க செய்திருப்பாள். அதில் அந்த வேலைக்காரி கருப்பாக, மேக்கு பல்லோடு, கட்டைக் குரலோடு யாரு உங்க பிரண்டா என்று கேட்பாள். விஜய்காந்த் விரக்தி மனநிலைக்கு சென்றுவிடுவார். வடிவேலு அப்படியே சோகமாக பரிதாபமாக விஜய்காந்த்திடம் புலம்புவார். இத்தனைக்கும் விஜய்காந்தும், வடிவேலுவும் கருப்பு தான். அந்த படத்தை சிறு வயதில் காணும்போதே அத்தனை அதிர்ச்சியாக இருக்கும். Body shamingஐ என்று காமெடி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று தவிப்பாய் இருந்தது.

அழகான பெண்ணை பல ஆண்கள் லோ லோ என்று தேடி தேடி பிடித்து கல்யாணம் செய்துக் கொள்கின்றனர். பின்பு ஒத்து வரவில்லை என்று கோர்ட்டு படிகட்டில் ஏறி இறங்கி பற்பல வருடங்களாக உருளும் பெரிய பெரிய ஆட்களை எல்லாம் பார்க்க தான் செய்கிறோம்.

சுமாரான அழகுடைய பெண்ணுக்கு காதல் வரக் கூடாதா? 

ஆனால் பிரச்சினை என்னன்னா கல்யாணம் பண்ண தான் ஆண்களுக்கு சுமாரான பெண் தேவைப்படுவதில்லை. சர்வ லட்சணமும்‌ பொருந்திய அழகான பெண்ணை தேடுகிறார்கள்.

பொழுதுபோக்கிற்காக புணர்வதற்கு அவர்களுக்கு அழகான பெண்கள் தேவைப்படுவதில்லை. சுமாரான பெண்களையே எளிதில் ஏமாற்றிவிட முடியும். நீ அழகி என்றால் அவள் மனம் எளிதில் மதிமயங்கும்.

யாருமே என்னை அழகினு சொன்னதுல்ல அவன் தான் என்னை அழகின்னான். அவன் கண்களுக்கு நான் அழகாக தெரிகிறேன் என்று எளிதில் அதிகம் ஏமாறுவாள். பெண்களும் சமீபத்தில் பணம் கொடுத்து ஏமாறுவதை அதிகம் காண்கிறோம். 

அவனோ ஓரிரு முறை அவளை பயன்படுத்திவிட்டு விலகி செல்கையில் வெளியே தெரியும் சூழல் வருகையில் சொல்வான். அவள் பல்லை பார்த்தியா, அவள் முஞ்சியை பார்த்தியா, அவளை எல்லாம் பார்த்து எவனாவது அவ கிட்ட போவானா. அவ அழகில்லாததால எல்லா ஆம்பிளைங்களையும் உடம்பைக் காட்டி அழைக்கிறா என்று மனசாட்சியே இல்லாமல் அவளுக்கு கேவலமான பட்டமும் வாங்கிக் கொடுப்பார்கள். 

அவளே பத்து பேரு கிட்ட போனவ பதினோராவதா என்னை அப்ரோச் பண்ணா நா அவளை நிராகரிச்சுட்டேன் அதான் பொய் சொல்லிட்டு சுத்துறா என்ற பட்டமும் வந்து சேரும். 

இங்கு அழகுள்ளவள்கள் ஏமாந்துவிட்டேன் என்றால் கூட மனிதர்கள் கொஞ்சமாவது காது கொடுத்து கேட்பார்கள். சுமாரான பெண் ஏமாந்துவிட்டால் ஏமாந்துட்டேனு போய் நிற்க முடியாது. ஏதோ கவலையை மறக்கவோ, வேறு கேர்ள் பிரண்டை மறக்கவோ என்று ஊறுகாயை தொட்டுக் கொள்வதைப் போல தொட்டுக் கொள்ள தான் சுமாரான பெண்கள் பல ஆண்களுக்கு தேவைப்படுகிறார்கள். 

அழகை வைத்து நேசிக்கும் மனம் உள்ளவரை இங்கு உறவுகள் பெருஞ்சிக்கல்களுக்கு தான் ஆட்படும்.‌ 

ஆக அழகை வைத்து உங்களை யாராவது நெருங்கினாலும் சரி நிராகரித்தாலும் சரி அவர்கள் மீதான‌ அன்பை தூக்கி குப்பைத் தொட்டியில் எறியுங்கள்.

புற அழகை தாண்டி அக அழகை கண்டு உங்களை நேசிக்கும் விதிவிலக்கான மனிதர்கள் இன்றளவும் உள்ளதால் தான் இந்த பூமியில் ஈரப்பதம் இன்னமும் வற்றாமல் பூ பூக்கின்றது.

அழகை கொண்டு நிராகரிக்கும் மனிதர்களை நீங்கள் நிராகரியுங்கள். மனதின் அழகை கண்டு வரும் மனிதர்கள் பொக்கிஷம் மாதிரி. Rare pieces. அவர்கள் வருவார்கள், வரவில்லையே ஆயினும் சாக்கடை மனதுடையவரின் அன்பை ஏற்காதீர்கள்.

தேங்காய் துருவி, பல்லாவரம் என்று புற அழகை வைத்து கிண்டல் செய்தால் பல்லும் வரம் என்று சந்தோஷியுங்கள். இந்த அகோர பல்லினால் தானே இத்தனை மனிதர்களின் கயமைகளை அறிய முடிந்தது என்று சந்தோஷியுங்கள்.

ஞாயிறு, 11 ஜூன், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 24 Broken heart syndrome

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 24

Broken heart syndrome

வாழ்க்கையிலே நிறைய தோல்விகளை சந்திக்கிறோம். ஆனால் காதல் தோல்வி மட்டும் ஏன் இதயத்தை நொறுக்கிப் போட்டுவிடுகிறது என்று கேட்டாள் தோழி ஒருத்தி.

அதற்கு காரணம் நம் ஹார்மோன்கள் தான். காதலிக்கும்போது உடலில் சுரக்கும் happy hormone ஆன dopamine தான் இதற்கு காரணம். காதலில் இருக்கும் மனது அதில் இருக்கும் த்ரில் , குறுகுறுப்பு, ஆத்மார்த்தமான ஒரு வித கிளர்ச்சி மனதிற்கினியவர்களை பார்க்க பார்க்க, அவர்களை சந்திக்கையில், முத்தமிடுகையில், சரசமாடுகையில் அதன் சுரப்புகள் அதிகரித்து அவர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும். அந்த உற்சாகம் மற்ற வேலைகளை சோர்வின்றி செய்ய உதவும். விடுதலை படத்தில் நாயகியிடம் நாயகி சொல்வான். உன்னை பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்பதே இத்தனை வலிகளையும் காணாமல் போக செய்கின்றது என்று. 

ஆக வாழ்வில் எத்தனை தோல்விகள் வந்தாலும் மனம் காதலில் இருப்பின் மற்ற விஷயங்களினால் ஏற்படும் தொய்வை சோர்வை அவை நீக்கி நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவும். 

ஆனால் காதல் தோல்வியடைந்தால் அந்த happy hormone கடகடவென சரிந்து டோபோமைன் சுரப்பை குறைத்துவிடும். அதன் பொருட்டு emotional stressற்கு ஆளாக்கப்படுவார்கள். விளைவு இதயம் நொறுங்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

Broken heart syndromeல் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் காதல் தோல்வியால் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் காதல் தோல்வியை நெடுங்காலத்திற்கு தூக்கி சுமப்பவர்களுக்கு கண்டிப்பாக broken heart syndromeற்கு ஆளாகுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கம்.

Broken heart syndromeற்கு காரணம் இயல்பிலேயே இதயம் பலவீனமாக இருப்பவர்கள், short tempers, Low BP உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.  பெரும்பாலும் It's all about emotional stress. பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகையில், ஒரு முக்கிய உறவை இழந்து போகையில், அவமானத்திற்குள் ஆளாகுகையில், வேலை இழக்கையில், திடீரென விபத்து நேரிடுகையில் என்று  சிக்கல்களை சமாளிக்க இயலாத மனம் அந்த சிக்கல்களிலேயே உழன்று காதல் செய்வதை கூட நிறுத்திவிடும். அதன் விளைவாக சந்தோஷ ஹார்மோன் சுரப்பதை நிறுத்தி mind block ஆகக் கூடும். 

எந்த ஒரு மன அழுத்தத்தில் இருந்தும் எவ்வளவு எளிதாக வெளியே வந்துவிடுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஒரு சிலருக்கு காதல் தோல்வியோ, வாழ்க்கையில் தோல்வியோ, பொருளாதார நெருக்கடியோ ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் என்று வெளிவந்துவிடுவார்கள்.

மனித மனம் என்பது அத்தனை மனசிடுக்குகளை கொண்டது. எல்லா தியரிகளும் எல்லாருக்கும் ஒத்து வராது. ஒருவரின் உணவை மற்றொருவர் ஜீரணம் செய்ய இயலாது அல்லவா. அது போல. 

ஆக மற்ற தோல்விகளில் இருந்து வெளி வர காதல் என்ற அருமருந்து உதவுவது போல, காதல் தோல்விக்கு மற்றொரு காதலே அருமருந்து. 

ஆனால் ஒரு காதலில் ஏமாற்றப்படும் விதமானது மற்றொரு காதலை நோக்கி அடி எடுத்து வைக்கும் தெம்பை தராது. 

முதல் காதல் தோல்வியுற்றால் கூட இரண்டாம் காதல் தேற்றிவிடும். இரண்டாம் காதல் தோற்கையில் தன் மீதே தனக்கு அவநம்பிக்கை கூடும். தன்னை தான் வெறுக்கும் நிலை ஏற்படும். தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுவார்கள். அதன் பொருட்டு தேவதாஸ் கதைகள் உருவாவது. தற்கொலைகள் செய்துக் கொள்வது எல்லாம்.

இந்த ஹாப்பி ஹார்மோனை மீண்டும் சுரக்க வைக்க இயலாத போது உடல் சார்ந்த நோய்கள் அதிகரிக்கும். அதன் பொருட்டு உடல் வலிகளும் நரம்பு மண்டலங்களும் சரிவர வேலை செய்யாது. உடல் சொல்லொண்ணா வலிகளுக்கு உட்படும். சிலர் இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வராவிட்டால் emotional stress அதிகரித்து broken heart syndromeன் காரணமாக நூறில் 1 சதவீதம் மரணம் கூட சம்பவிக்கலாம் எனகின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆக ஹாப்பி ஹார்மோன் சுரக்க வைக்க மற்றொரு காதலில் ஈடுபட இயலாதவர்களுக்கு நிச்சயம் வேறு வகையில் ஹாப்பி ஹார்மோனை சுரக்க வைக்க வேண்டியதுள்ளது. Medication, meditation, yoga,  குழந்தைத்தனமாக நடந்துக் கொள்ளுதல், ஊர் சுற்றுதல், வித விதமான உணவுகளை உண்ணுதல் என்று அதன் தோல்வியை மறக்க மாற்று ஏற்பாடு செய்துக் கொள்வது ஒன்றே இது போன்ற வலிகளில் இருந்து மீள வழி.

ஆக ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றால் அவரை அப்படியே விட்டுவிடாமல் அதிலிருந்து வெளியேறுவதற்கு துணை நில்லுங்கள்.

ஞாயிறு, 4 ஜூன், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 23 தலைப்பு: பெருந்தொற்றுக்கு பின்னான மக்களின் மனநிலை


சருகுகளின் சபலங்கள்


பகுதி - 23


தலைப்பு: பெருந்தொற்றுக்கு பின்னான மக்களின் மனநிலை.

ஒவ்வொரு சர்வதேச பெருந்தொற்றுக்கு பின்னால் மக்களின் மனநிலையில் மாறுபாடு ஏற்படும். 

எல்லா காலங்களிலும் பெருந்தொற்றுக்கு பின் வரும் காலமானது பொருளாதார நிலையை வீழ்ச்சியடைய செய்திருக்கும். 

கோவிட் போன்ற பெருந்தொற்று பரவலில் இறந்தவர் பலர். உயிர் பிழைத்தும் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க முடியாமல் பலர். 

நாம் என்ன தான் நிம்மதியான வாழ்க்கைக்கு போதுமென்ற மனமே போதும் போன்ற motivationalகளை பெற்றிருந்தாலும் நிம்மதியான அமைதியான சஞ்சலமற்ற  வாழ்க்கைக்கு நிச்சயம் பணம் தேவை.

Health is wealth என்று படித்திருப்போம். அதே தான் ஒரு வீட்டில் தொடர்ந்து நோயாளிக்கு செலவு செய்ய வேண்டியதிருந்தால் அந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற நிலையை அடையும். ஆனால் உலகம் முழுக்க வீட்டிற்குள் அடைத்து போடப்பட்ட மக்கள் உயிர் பிழைத்து வந்து ஸ்தம்பித்திருந்த பொருளாதாரத்தை சமன் செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். 

என்ன தான் ஆன்லைனிலேயே எல்லாமே ஒரளவிற்கு சரி செய்துக் கொள்ள கூடிய டெக்னாலஜிக்கள் உலகம் அந்தளவிற்கு ஸ்தம்பிக்காமல் சென்றிருந்தாலும், டெக்னாலஜி அறியாத துறையில் இருந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக கடுமையான வீழ்ச்சி தான். 

பேண்டமிக் காலகட்டத்தில் அரசாங்க வேலையில் இருந்தவர்கள் work from homeல் இருந்தவர்கள் நிலைமையை எல்லாம் அத்தனை மோசமில்லை. காலத்திற்கு தகுந்தவாறு அந்த காலகட்டத்திற்கு தேவையான பொருட்களை விற்பனைக்குள் கொண்டு வந்து பிழைத்துக் கொண்டவர்கள் பலர். 

ஆனால் பேண்டமிக்கில் வேலை விட்டவர்கள், வேலைகள் முடக்கி போடப்பட்ட காலங்களிலும் சம்பளம் கொடுத்து தொழிலாளிகள் குடும்பங்களை காப்பாற்றிய முதலாளிகள் என்று அவர்கள் நிலை கொஞ்சம் இறக்கம் தான். 

பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகுவார்கள். ஒரு பக்கம் விலைவாசி ஏற்றம், மற்றொரு பக்கம் பணத்தட்டுபாடு குடும்பத்தை எடுத்து நடத்துபவரின் மனதிற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 

பேண்டமிக்கிற்கு பிறகு பெண்கள் பலர் வெளிவந்து ஆன்லைன் பிஸினஸ்கள் செய்வது அதற்கு அத்தாட்சி. பொருளாதார ரீதியாக குடும்பங்களை தூக்கி நிறுத்த பெண்கள் வெளிவர ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு பக்கம் technology developmentன் காரணமாக மனித உழைப்பு தேவையற்றதாகி நொடிப்பொழுதில் வேலைகளை முடித்து தரும் Artificial intelligence மூலமாக பல வேலைகள் துரிதமாக முடிந்து விடுகிறது. ஒரு பக்கம் மனித உழைப்பு தேவையற்று போகையில் தற்போதுள்ள நிறைய வேலைகள் அற்று போய்விடும் அபாயத்தால் பலர் வேலையில்லாமல் இருக்கும் துன்பங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. 

மனிதன் ஒரு வித போட்டி உலகிற்குள் சஞ்சரிக்க துவங்கிவிட்டான். இனி பொருளாதார ரீதியாக தன்னை நிலைநாட்டிக் கொள்ள புத்திசாலித்தனத்தோடும் திறமையோடும் போராட வேண்டியிருக்கும். 

நேர்மையா கடுமையா‌ உழைச்சா முன்னேளிவிடலாம் என்பது எல்லாம் இனி கனவு கோட்டைகள் தான். புத்திசாலித்தனமும் திறமையான ஆட்களை வைத்து லாபம் தரும் தொழிலை செய்தாலே முன்னேற்றம். 

அதாவது பொருளாதார ரீதியாக போராடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இதன் பொருட்டு அதீத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் மக்கள். இதன் விளைவாக எதிலும் பொறுமையற்றத்தன்மை, வன்மம், ஏமாற்றுத்தனம், போன்ற எதிர்மறை எண்ணங்களால் பீடிக்கப்படுகின்றனர்.

இதன் விளைவாக ஒருவருக்கு ஒருவர் காரணமே இல்லாமல் எதிரிகளாக சித்தரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பழி வாங்கிக் கொண்டு ஒரு மோசமான சமூக சூழல்களை உருவாக்கிவிடுகின்றனர்.

இதன் பொருட்டே சமூக ஊடகங்களில் பயணம் செய்வதென்பது தற்காலத்தில் பெரும் ஆபத்தாகவே மாறி வருகின்றது.  இதன் பொருட்டே பிரபலங்கள் தெரியாத்தனமாக உளருவதும் அதை வைத்து ஒட்டுமொத்த சமூகமும் troll செய்து பிழைப்பதும் என்று எதிர்மறை சிந்தனைகள் பெருகி வருகின்றன.

ஆக ஒவ்வொரு சர்வதேச பெருந்தோற்றுக்கு பிறகு ஏற்படும் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகான மன அழுத்தங்களுக்கு தக்க அளவில் நேர்மறை சிந்தனைகளை சமூகத்தில் விதைக்காவிடில் மக்கள் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி எல்லாவற்றையும் கேலி செய்துக் கொண்டும், வக்கிரத்தையும், வன்மத்தையும் பிறர் மீது அள்ளித் தெளித்துக் கொண்டு மனநோயாளிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவர். 

ஆக இறைநம்பிக்கை, நேர்மறை சிந்தனை, தியானம், யோகா போன்றவற்றை பயன்படுத்தி மக்கள் தங்கள் மனநலனை காப்பாற்றிக் கொள்ள விழைவது ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க வழிகாட்டும்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...