#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க
#பகுதி 19
#திருநீற்றுபச்சிலை
#ocimum_Bascillum
பிறப்பிடம்: இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள்.
கரந்தை, துன்னூத்து பச்சிலை, உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி என்ற வேறு பெயர்களும் உண்டு. முன்பு திருநீற்றில் இதன் சாம்பலை சேர்த்ததால் திருநீற்றுபச்சிலை என்ற பெயர் காரணமும் உண்டு.
துளசி(basil)வகையை சார்ந்த மருத்துவகுணம் நிறைந்த செடி இது.
துளசியை நுனிக்கினால் தான் வாசம் வரும். இந்த செடி அருகில் சென்றாலே வாசனை துளைக்கும். நல்ல வாசம் மிகுந்தது இந்தச் செடி.
பூக்கள் வெள்ளை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். பூக்கள் செடியிலேயே காய்ந்தால் விதை கிடைக்கும். அதுவும் துளசியை போன்றே இருக்கும். இதை சப்ஜா விதைகள் அல்லது சியா விதைகள் என்றும் கூறுவர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உணவிலும், முகப்பரு மற்றும் வயிற்றுபுண் ஆற்றவும் இவை பயன்படுத்தப்படுகிறது.
அகத்தியர் இந்த செடியை பற்றி தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
"திருநீற்றுப் பச்சை சிலேஷ்சர்த்தி தன்னை
விரிநீற்றைப் போலாக்கு மெய்யே பெரிய சுரத்திரத்த வாந்தி சரமருசி நில்லா வுருத்திரச்ச டைக்கே யுரை"
பாடலின் பொருள்:
1.இதன் இலை கற்பூரத்தின் தன்மை கொண்டது. வியர்வையை பெருக்கச் செய்யும்.
2. இலைச்சாறு வாந்தி சுரம் ஆகியவற்றைப் போக்கும்.
#மருத்துவ_குணங்கள்:
1. பெரும்பாலான முகப்பொலிவு தரும் க்ரீம்களில் திருநீற்று பச்சிலையின் சாறு கலக்கப்பட்டிருக்கும். முகப்பரு உள்ளவர்கள் திருநீற்றுப் பச்சிலையை கசக்கி சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு நீங்கும். இலையை கைகளால் கசக்கி, அதனுடைய சாறினை முகத்தில் தடவினாலே போதும் பருக்கள் காணாமல் போய்விடும். அதன் தடமும் மறைந்து விடும். புரையோடி சீழ்வைத்த பருக்களாக இருந்தால் கூட குணப்படுத்தும்.
2. நுண்ணுயிர்களையும், வைரஸ் கிருமிகளையும் எதிர்க்கும் தன்மை உடையதால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. இதன் வேரை இடித்து பொடித்து கஷாயம் செய்து காலை மாலை அருந்திவந்தால் வயிற்றில் பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும்.
3. இலைச்சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டு வந்தால் காதுவலி, சீழ்பிடித்தல் நீங்கும்.
4. சிறுநீர் பெருக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும். இதனால் உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது.
5. திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து மூக்கில் உறிஞ்சுவதால் மூக்கில் உள்ள கிருமிகள் வெளியேறும்.
6.இதன் விதைகள் வடக்கத்திய மாநிலங்களில், கோடை வெப்பத்தை குறைக்க நீரில் ஊற வைத்து சர்பத் போட்டு குடிக்கிறார்கள்.
7. கொசு விரட்டியாகவும் பயன்படுத்தலாம்.
8. வளராத செடிகளுக்கு நடு நடுவில் இந்த செடி வளர்க்கப்படுகையில் மகரந்த சேர்க்கைக்கு உதவி பூக்கள் அதிகம் பூக்க உதவிடுகின்றன. (ரொம்ப நாளாக வளராத செடிகள் மற்றும் பூக்காத செடிகளில் இதன் இலைகளை நான்கு பறித்து வைத்து விட்டால் போதும்). என் தோட்டத்து பூக்கள் எந்தவித மருந்தும் உரமும் இல்லாமல் அதிகமாக பூப்பது இப்படி தான்.
9. இலையைக் கசக்கி முகர்ந்து பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும்.
10. தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளவர்களுக்கு இதன் இலைசாறு உதவும்.
11. மசக்கை சமயங்களிலும், பயணங்கள் சமயங்களிலும், சளி, சுரத்தினாலும் மற்றும் அஜீரண கோளாறுகளால் வரக்கூடிய வாந்தி இந்த இலைகளை கசக்கி முகர்வதால் மறைந்துவிடும். (ரத்தவாந்தியையும் கட்டுப்படுத்த கூடியது)
12. கண்கட்டி போன்ற வெயில் கொப்புளங்களுக்கும் இதனுடைய சாறு நல்ல தீர்வைத் தரும்.
#சப்ஜா_விதைகள்:
உணவில் இதன் பயன்கள்:
சப்ஜா விதைகள் என்று நாட்டுமருந்துகடையில் கிடைக்கும். நீரில் ஊற வைத்தால், நீரை உறிஞ்சிக்கொண்டு வழவழப்பாக மாறிவிடும். நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும் வயிற்றுக்கும் நல்லது.
1. சர்பத், பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது.
2. இத்தாலிய உணவு வகைகளான பாஸ்தா(Pasta), பீஸா(pizza)விலும் பயன்படுத்தப்படுகிறது.
3. ஜிகர்தண்டாவிலும் குளிர்ச்சிக்காக சேர்க்கப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
1. இந்தவிதையில் துத்தநாகம்(zinc), சல்ஃபர்(சல்பர்), ஆன்டிஆக்ஸிடன்ட்(Antioxidant) வைட்டமின் ஏ, பி, சி(vitamin A,B,C) உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
2. நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும், குடல் மற்றும் வயிற்று புண்களை சிறப்பாக ஆற்றக்கூடியது.
3.மலச்சிக்கலைப் போக்கும்.
4.நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.
5. அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகை வராமல் காக்கும்.
6. அதிமுக்கியமாக உடல் பருமனை போக்க கூடியது.