ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 30 பழிக்கு பழி

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 30

பழிக்கு பழி


ஒருத்தரை பழிக்கு பழி வாங்கணும்னு தோணுதா. உங்களுக்கு தான் இந்த பதிவு. மனிதன் தெரிந்தோ தெரியாமலோ துரோகம் செய்ய, ஏமாற்ற பழக்கப்பட்டவன். வரும் தலைமுறையினருக்கு சொல்லி சொல்லி அவர்களை வளர்க்க வேண்டிய விஷயம் என்னன்னா யாரையும் ஏமாத்தவும் கூடாது, யார் கிட்டேயும் ஏமாறவும் கூடாதுனு.

மனுஷங்க தானே நாம். நம்பி பழகுவது என்பது இயல்பு. ஆனா அதற்கு பிரதிபலனாக ஏமாற்றமோ அல்லது துரோகமோ இழைக்கப்படும். சில சமயம் பழகாதவர்களிடம் இருந்து கூட இந்த துரோகம் நமக்கு இழைக்கப்படலாம். 

மனுஷனா இருந்தா இந்தாப்பா நீ செய்யறது தப்புன்னு சொல்லி புரிய வைக்க முயற்சி செய்யலாம். வன்மும் வக்கிரமும் மிகுந்த மனிதனை என்ன செய்ய முடியும்? திருந்துவானா என்று கேட்டால் திருந்தமாட்டான். மிருகங்கள் கூட பசி உணர்வுக்கு மட்டுமே மற்ற மிருகங்களை வேட்டையாடுகிறது. அதுவும் தன் இனத்தையே தான் அடித்து உண்பதில்லை. 

ஆனால் மனிதன் விளையாட்டுக்கு அத்தனை வக்கிரங்களையும் செய்துவிட்டு லாவகமாக அதை திசைத்திருப்பி விடுவதில் வல்லவன்.

சரி துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது. மீளமுடியாதளவு ஏமாற்றம் நிகழ்ந்துவிட்டது. என்ன செய்யலாம். பழிக்கு பழினு வாங்க இறங்கலாமானு கேட்டா அது தேவையற்ற வேலை. பழிக்கு பழினு வாங்கறதனால் நீங்க பட்ட காயம் ஆறிடுமா நிச்சயமா இல்லை. பழி வாங்க குயபுக்தியோடு யோசிக்கையில் நீங்கள் இன்னும் சந்தோஷமற்ற மனிதரா தான் மாறுவீர்கள். உங்கள் மனநிலை பாதிக்கப்படும். பழிக்கு பழி என்று வாங்கும்போது எதிராளியிடம் இருந்தும் அம்புகள் புறப்படும். நீங்கள் மீண்டும் காயப்படுவீர்கள். 

போர்க்களத்தில் வேண்டுமானால் கத்திக்கு கத்தி ரத்தத்திற்கு ரத்தம் என்று சண்டையிட்டு ஜெயித்து வெற்றிப் பெருமிதம் கொள்ளலாம்.

வாழ்க்கை அப்படியாப்பட்டது அல்ல. 

அப்ப என்ன செய்யறது. முதல்ல நாம் பாதிக்கப்பட்ட காயங்கள்ல இருந்து நாம வெளியே வர்ற பழகணும். பழிக்கு பழி என்பது இருமுனை கத்தி. இரண்டு பக்கமும் காயங்கள்னு தொடர்ந்துக்கிட்டே போகும். மனசாந்தியை வேண்டுபவன் விட்டுக் கொடுப்பான், விலகிச் செல்வான், மன்னித்தருள்வான், காயம் ஆறியதும் அதை மறந்தும் போகலாம். ஆனால் அனுபவம் தந்த பாடத்தை மறக்கலாகாது.

சில தவறுகளை மன்னிக்கலாம். சிலவற்றை மன்னிக்கவே முடியாது. மன்னிக்கவே முடியாத தவறுகளை என்ன செய்வது. அவற்றை மறந்துவிடுங்கள். மறக்க கஷ்டமா தான் இருக்கும்.‌ மறந்தால் தான் வாழ்வு சிறக்கும்.‌

அப்படி இழைக்கப்படும் துரோகம், நமக்கு ஏற்படும் ஏமாற்றம் எவரோ ஒருவரால் இழைக்கப்படுகையில் பரவாயில்லை. நெருக்கமான உறவுகளுக்குள் என்கையில் கத்தி ஆழமாய் நெஞ்சில் பாய்ந்து விடுகிறது.  என்ன தான் செய்வது? அவர்களோடு வாழ்வதா? பிரிந்து செல்வதா? பழிக்கு பழி என்று வாங்குவதா என்று மனம் தள்ளாடும். பழிக்கு பழி வாங்கினாலும் நாம் நேசித்தவர் துன்புறுகையில் நாமும் சற்று துன்புறுகிறோம். ஆக பிரச்சினையின் வீரியம் அதீதமாய் இருந்தால் விட்டு விலகி விடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களைப் மறந்துவிடுங்கள். நெருங்கிய உறவு என்கையில் அவர்களும் மன்னிப்பை வேண்டி விரும்பி நிற்கையில் மன்னித்து ஏற்றுக் கொள்வதே நம் மனமுதிர்ச்சிக்கு அழகு. 

எதற்குமே பழிக்கு பழி தீர்வாகாது. மன்னிப்போம், மறப்போம் என்பதே மனசாந்திக்கான தாரக மந்திரம்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...